Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில் மோதி இறந்தது பெண் யானை! -கோவையில் தொடரும் யானை உயிரிழப்புகள்

கோவை: கோவை அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 யானைகளில் 13 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று ரயில் மோதி பரிதாபமாக இறந்தது.

கோவை வனத்தையொட்டிய மதுக்கரை பகுதியில் யானைக் கூட்டம் ஒன்று குடியிருப்பு பகுதிகளிலும், விளைநிலங்களிலும் புகுந்து தொந்தரவு செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து அதில் ஒரு யானை நேற்று (19ம் தேதி) காலை மதுக்கரையில் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில், மதுக்கரையில் நேற்று நள்ளிரவு ரயில் மோதி பெண் யானை ஒன்று இறந்தது.

கோவை மதுக்கரை அருகே நேற்று நள்ளிரவு 1.15 மணி அளவில் 7 யானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது அவ்வழியே வந்த பெங்களூரு-திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு ஒரு யானை பலியானது. உயிரிழந்த காட்டு யானை 13 வயது மதிக்கத்தக்க பெண் யானை என தெரியவந்துள்ளது. உடன் வந்த மற்ற யானைகள் அங்கேயே நின்றதால் உயிரிழந்த யானையின் உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானை கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் 35 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து பலியான இடத்திலேயே யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதேபகுதியில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு முன்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு கர்பிணி யானை உட்பட 4 யானைகள் பலியானது. அதேபோல், 2009 ஆம் ஆண்டு ஒரு ஆண் யானை அடிப்பட்டது இறந்தது. இப்பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால், கோவை-வாளையார் வரை செல்லும் ரயில்கள் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திற்குள் மட்டுமே செல்ல வேண்டும் என கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும், ரயில்கள் இவ்வழியே அதிவேகமாக செல்வதும் யானை உயிரிழப்புகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. நேற்று இதே பகுதியில் ஒரு காட்டு யானையை வனத்துறையினர் பிடித்தநிலையில், இன்று ஒரு யானை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ச.ஜெ.ரவி

படங்கள் :
தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ