Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' நஷ்டத்தில் இயங்கிய கடைகளைத்தான் மூடுகிறார்களா?' -குழப்பத்தில் ஆழ்த்திய அரசின் உத்தரவு

மிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ' பல வருடங்களாக நஷ்டத்தைக் கொடுத்த வந்த கடைகளை மட்டுமே மூட இருக்கிறார்கள். பொதுமக்கள் போராட்டம் செய்த கடைகளை மூடவில்லை' என்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், ' படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. அதற்கேற்ப ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்நாளிலேயே, ' 500 கடைகள் மூடப்படும்' என அறிவித்தார். பொதுமக்கள் மத்தியில் முதல்வரின் உத்தரவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மூடப்பட உள்ள 500 கடைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதில், அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் மட்டும் 201 கடைகள் மூடப்பட உள்ளன.

முதல்வரின் உத்தரவு குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பழனிபாரதி, " மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இந்த உத்தரவால் டாஸ்மாக் பணியாளர்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். உதாரணமாக, மதுரை மண்டலத்தில் 201 கடைகள் மூடப்படுகின்றன. இந்தக் கடைகளில் சுமார் 2,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இன்னும் மாற்றுப் பணியிடம் அறிவிக்கப்படவில்லை. அதற்கான அரசாணையை அரசு வெளியிடவில்லை.

இத்தனை ஊழியர்களுக்கும் ஒரே மண்டலத்தில் மாற்றுப் பணி வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. வேறு மண்டலங்களில் இவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டால், அவர்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். மதுரை மண்டலத்திற்குட்பட்ட திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளன என அறிவிக்கவில்லை. டாஸ்மாக் ஊழியர்களின் பயத்தைப் போக்குவது அதிகாரிகளின் கடமை" என்கிறார்.

அரசின் உத்தரவு குறித்து நம்மிடம் பேசிய டாஸ்மாக் அதிகாரி ஒருவர், " டாஸ்மாக் கடைகள் மூடுவதிலும் மிகப் பெரிய அரசியல் நடந்துள்ளது. இப்போது மூடப்பட்டுள்ள கடைகளில் 60 சதவீத கடைகள் சரிவர விற்பனை நடக்காமல் நஷ்டத்தில் இயங்கிவை. இந்தக் கடைகளை மூடுவது என்பது அதிகாரிகள் ஏற்கெனவே எடுத்த முடிவு. வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகளை மூடுமாறு பொதுமக்கள் நடத்திய போராட்டங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தவிர, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய டாஸ்மாக் பாருடன் இணைந்த கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆளுங்கட்சியினர் நடத்தி வரும் பார்களை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

கடலூரில் அடுத்தடுத்து இருந்த இரண்டு கடைகளில், ஆளுங்கட்சிக்காரரின் பார் உள்ள கடை மூடப்படவில்லை. அருகிலேயே மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் நடத்தி வந்த டாஸ்மாக் பார் மூடப்பட்டுள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களின் கடைகளைக் காப்பாற்றிவிட்டு, மற்றவர்களின் கடைகளை மூடுவதில்தான் அதிகாரிகள் கவனமாக இருந்துள்ளனர். ஏற்கெனவே, நஷ்டத்தில் இயங்கி வந்த கடைகளை மூடுவதால் பொதுமக்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது?" என ஆதங்கப்பட்டார்.

' படிப்படியான மதுவிலக்கு என்பது அரசின் லட்சியமாக இருந்தால், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கடைகளை மூடுவதே மதுவிலக்கின் நோக்கத்தை எட்டச் செய்யும்' என்கின்றனர் அதிகாரிகள் வட்டாரத்தில்.

ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்