Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் முதன் முறையாக வனத்துறைக்கு மோப்ப நாய்!

 

மிழகத்தில் முதன் முறையாக வனத்துறை மோப்ப நாய்க்கு ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில் ரெஸ்ட் ரூம் ரெடி. விரைவில் ஏர்கூலரும் பொருத்த உள்ளனர்.

தமிழக காவல்துறையில் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணிகளுக்கு தனித்தனியாக மோப்ப நாய்கள் வாங்கப்பட்டு, அவைகளை பயிற்சியாளர்களைக்  கொண்டு பராமரித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் முதன் முறையாக மேற்கு  தொடர்ச்சி மலையின் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் வனச்சரகத்திற்கு  'மோப்ப நாய்’ வழங்கப்பட்டுள்ளது. மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல், வன மரங்களை திருட்டுத்தனமாக வெட்டி கடத்தும் கும்பல் மற்றும் வனப்பகுதியில் நடமாடும் நக்சல்களை கண்டுபிடிக்க சமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் வனத்துறைக்கு ‘சிமி’ என்ற மோப்பநாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய்க்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் வனத்துறை அலுவலகத்தில் தற்காலிகமாக கூடாரம் அமைத்து, அதை அங்கு தங்க வைத்து பயிற்சியாளர் பெரியசாமி பராமரித்து வருகிறார்.
 

இதற்கிடையே மோப்ப நாய் ‘சிமி’ க்கு என்று தனியாக ஓய்வறை கட்டுவதற்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘சிமி’ க்கான ஓய்வறை கட்டப்பட்டு அந்த பணிகள் முடிவடைந்து விட்டன. விரைவில் அந்த ஓய்வு அறை திறக்கப்பட்டு, மோப்ப நாய் சிமி அங்கு தங்க வைக்கப்படும் என்று வனத்துறையை சேர்ந்த அதன் பயிற்சியாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

"வனத்துறையில் நடக்கும் குற்றச்செயல்களை கண்டுபிடிக்கவும் அவற்றை தடுக்கவும், மத்திய பிரதேசத்தில் உள்ள, மத்திய அரசின் வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவிற்கான மோப்ப நாய் பயிற்சி முகாமின் 23 வது மையம் அங்கு செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மையத்தில் ரூ.3 கோடி செலவில், 14 நாய்களுக்கு  பயிற்சி வழங்கப்பட்டன. இதில் தமிழக வனத்துறையில் முதன் முதலாக ஸ்ரீவில்லிப்புத்தூர் வனத்துறைக்கு ‘பழைய ஜெர்மன் ஷெப்பர்டு'  இனத்தை சேர்ந்த ஒன்றரை வயதுள்ள 'சிமி' என்ற நாயும் பயிற்சியில் பங்கேற்றது. மோப்ப நாயை வளர்ப்பது, வேலை வாங்குவது, பராமரிப்பது தொடர்பாக பயிற்சியாளர்களான எங்களுக்கும் சிறப்பு  பயிற்சி வழங்கப்பட்டது.
 

ஸ்ரீவில்லிப்புத்தூர் வனத்துறைக்கு வழங்கப்பட்ட ‘சிமி’ மோப்ப நாய், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றி திரிபவர்களிடம் கஞ்சா, மதுபானப்பாட்டில்கள், போதை பொருட்கள் இருந்தால் எளிதில் கண்டுபிடித்து விடும். சமீபத்தில் சாப்டூர் மலைப்பகுதியில் ஒரு சிறுத்தைப் புலியை 5 பேர் கொண்ட கும்பல் வேட்டையாடியது. குற்றவாளிகளை எளிதில் மோப்பம் பிடித்து அவர்களை கைது செய்வதற்கு சிமி  பெரும் உதவியாக இருந்தது. தினமும் காலையில் ஒரு லிட்டர் பால், கால் கிலோ ஆட்டுக்கறி, சாதம் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த சிமி நாயை பராமரிக்க மத்திய அரசு மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்கி வருகிறது. மோப்ப நாய் தங்குவதற்கும், உலா செல்ல வசதியாக ஓய்வு அறையும் கட்டப்பட்டுள்ளது. இதில் ஃபேன் மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் அந்த ஓய்வு அறையில், மோப்ப நாய்க்கு ஏர்கூலர் பொருத்தவும் வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
 

ஸ்ரீவில்லிப்புத்தூர் வனச்சரகத்தை தொடர்ந்து தற்போது பொள்ளாச்சி ஆனைமலை காப்பகம், ஊட்டி முதுமலை காப்பகம், களக்காடு வனத்துறையை சேர்ந்த 3 பேர் அடங்கிய குழுவினர்,  மோப்ப நாய் வாங்குவதற்கும், பயிற்சி பெறவும் மத்தியபிரதேசம் சென்றுள்ளனர்." என்று அவர் மேலும் கூறினார்.

- எம்.கார்த்தி.
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ