Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்.ஆர்.எம். மோசடிகளை அரசும், எதிர்க்கட்சிகளும் வேடிக்கை பார்ப்பது ஏன்? -ராமதாஸ்!

சென்னை: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மோசடிகளை அரசும் எதிர்க்கட்சிகளும் இன்னும் ஏன் வேடிக்கை பார்க்கின்றன என்று ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கித் தருவதாகக் கூறி 102 பேரிடம் தலா ரூ.62 லட்சம் வீதம் பணம் வசூலித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவின் பினாமியும், வேந்தர் மூவீஸ் நிறுவன அதிபருமாகிய மதன் தலைமறைவாகி இன்றுடன் 26 நாட்கள் ஆகின்றன. மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் 70க்கும் மேற்பட்டோர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடமும், வளசரவாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் யாருமே மதனை நம்பிப் பணம் தரவில்லை. மாறாக, எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு அனைத்துமாக இருந்தவர் மதன் என்பதாலும், கடந்த 8 ஆண்டுகளாக மதன் மூலமாகவே எஸ்.ஆர்.எம். குழும கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்பதாலும், மதனை எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பிரதிநிதியாக நம்பியே பணம் கொடுத்துள்ளனர். அந்த வகையில் தங்களிடம் மதன் வாங்கிய பணத்திற்கு எஸ்.ஆர்.எம் குழுமம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவின் வீட்டு முன் பல நாட்கள் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

தலைமறைவான மதன் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதத்தில் 102 மாணவர்களிடம் பணம் வாங்கியது உண்மை தான் என்றும், அந்த பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதால் அவர்கள் அனைவருக்கும் மருத்துவப்படிப்பு இடம் வழங்க வேண்டும், இல்லாவிட்டால் பணத்தை திரும்பத் தர வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நடைமுறையைத் தான் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மோசடி விவகாரத்திலும் தமிழக அரசும், காவல்துறையும் கடைபிடித்திருக்க வேண்டும். இந்த மோசடி குறித்து மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பின் சார்பில் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டிருந்தது. அம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட பல்கலைக்கழக மானியக் குழு இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உயர்மட்டத் தொடர்புகளைக் கொண்டது. காவல்துறை உயரதிகாரிகள் பலரின் வாரிசுகள் அப்பல்கலைக்கழகத்தில் இலவசமாக மருத்துவம் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் எஸ்.ஆர்.எம். குழுமம் மீது புகார் அளித்து 25 நாட்களாகியும் அதன்மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, புகார் அளித்தவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டல் விடுத்து வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தவர்களை தொடர்பு கொள்ளும் எஸ்.ஆர்.எம். குழுமப் பிரதிநிதிகள் "தமிழக அரசு எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டு அ.தி.மு.க.வுக்கு உதவியது எங்கள் தொலைக்காட்சி தான். இந்த அரசு எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஒழுங்காக புகாரை திரும்பப் பெறவில்லை என்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்" என அச்சுறுத்துகின்றனர். இவ்வழக்கின் முக்கியமான சாட்சிகள் சிலரை விலைக்கு வாங்கும் முயற்சியிலும் எஸ்.ஆர்.எம். ஈடுபட்டிருக்கிறது. இவை எதுவுமே ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.

எஸ்.ஆர்.எம். குழுமம் மீதான குற்றச்சாற்றுக்கள் மருத்துவப் படிப்புக்கு மதன் மூலம் பணம் வாங்கி ஏமாற்றியதுடன் முடிந்து விடவில்லை. இந்திய மருத்துவக் குழு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு மாறாக மருத்துவப் படிப்புக்கான இடங்களை விலைக்கு விற்பது உள்ளிட்ட செயல்களிலும் எஸ்.ஆர்.எம். குழுமம் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும். அதற்கான முன்னெடுப்புகளை தொடங்கும் பொறுப்பும், கடமையும் ஜெயலலிதா அரசுக்கு உள்ள நிலையில், அந்த அரசு மவுனமாக இருப்பதன் பொருளை புரிந்துகொள்ள முடியவில்லை.

அரசும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் அல்லது இவ்வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் (சி.பி.ஐ.) ஒப்படைக்க முன்வர வேண்டும்" என்று கூறி உள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close