Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்கள் நலக் கூட்டணி தொடரும் என திருமா சொல்வது ஏன்? -அதிர வைக்கும் 5 காரணங்கள்

' மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.கவும் த.மா.காவும் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்டன. அவர்கள் வெளியேறுவதால் எங்கள் அணி பாதிக்காது. மக்கள் நலக் கூட்டணி தொடர்கிறது' எனத் தொடர்ந்து பேசி வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். ' தி.மு.க கூட்டணியில் இருந்து எங்களைத் திட்டமிட்டே வெளியேற்றினார்கள். மூன்று தேர்தல்களில் அணி மாறாமல் தி.மு.க பக்கம் நாங்கள் நின்றதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை' எனக் கொந்தளிக்கிறார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில், முனைவர். வசந்திதேவி, எழுத்தாளர் ஞாநி, முன்னாள் நீதியரசர் சந்துரு, ஈரோடு தமிழன்பன், மறைந்த நாகூர் அனிபா ஆகியோருக்கு  விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், " தி.மு.க அணியில் எங்களை சரியான முறையில் நடத்தவில்லை. கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என நெருக்கடி கொடுத்தது அவர்கள்தான். அந்த அணியில் இருந்து நாங்கள் வெளியே வந்தாலும், மறுகணமே அ.தி.மு.க என்று இன்னொரு கட்சியை நோக்கி நாங்கள் செல்லவில்லை. அப்படிச் சென்றிருந்தால் சில எம்.எல்.ஏக்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால், அதைத் தவிர்த்து மாற்று அரசியலை முன்வைத்தோம். நான்கு கட்சிகளை ஒருங்கிணைத்து மக்கள் நலக் கூட்டியக்கமாக உருவெடுத்தோம்.

பிறகு அதுவே ஆறு கட்சி கூட்டணியாக மாறிப் போனது. ' தோல்வியுற்ற அணிகளோடு ஏன் வி.சி.க கூட்டணி வைக்க வேண்டும்?' என்றெல்லாம் கேட்டார்கள். ' வி.சி.க தனித்து நிற்க வேண்டும்' என்றும் சொன்னார்கள். நாங்கள் அனைத்து மட்டத்திலும் தனியாகத்தான் நிற்கிறோம். பொதுக்களத்தில் கலக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். தனித்து நின்ற பா.ம.கவுக்கோ, பா.ஜ.கவுக்கோ கூட்டணி என்று சேருவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. அதுவே, எங்கள் அணியில் ஆறு கட்சிகள் இணைந்தார்கள். அந்த வகையில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அரசியல் களத்தை இன்னும் வலுவாக்கப் போராடுவோம்" என்றார் தெளிவாக.

' மக்கள் நலக் கூட்டணியை தொடர்ந்து முன்னெடுக்க என்ன காரணம்? தி.மு.க மீது திருமாவின் கோபம் குறையாமல் இருக்க என்ன காரணம்?' என்பதைப் பற்றி நம்மிடம் விளக்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவர்.

1. 'மக்கள் நலக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்' எனத் தலைவர் திருமா தொடர்ந்து பேசி வருகிறார். ' தே.மு.தி.கவும் த.மா.காவும் கூட்டணியில் தொடர வேண்டும்' என்றுதான் ஆசைப்படுகிறார். இந்த அணிகள் தொடர்ந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய அணியைக் கட்டமைக்க முடியும் என நம்புகிறார். அதேநேரத்தில், தி.மு.க செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டவும் அவர் தயங்கவில்லை. இந்தத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது தி.மு.கதான். மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளுக்கு சில எம்.எல்.ஏக்கள் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில்தான் இருந்தார்கள். இந்தத் தேர்தலில் மிகப் பெரிய இழப்பு தி.மு.கவுக்குத்தான். ' வி.சி.க கூட்டணியில் இருந்தால் கொங்கு மண்டல ஓட்டு பாதிக்கும் என்பது தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலரின் கருத்தாக இருந்தது. அதை நம்பினார் ஸ்டாலின். ஆனால், வி.சி.க இருந்தபோது இருந்த நிலையைவிட, இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது தி.மு.க. எந்த காரணத்துக்காக வி.சி.கவை தி.மு.க புறந்தள்ளியதோ, அந்த பிரதான காரணமே பொய்யாகிப் போனது.


2. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய கூட்டணியை தி.மு.க உருவாக்கியது. அந்தத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டன. சிதம்பரத்தில் திருமா வென்றார். விழுப்புரத்தில் ஆயிரம் ஓட்டுக்களில் நாங்கள் தோல்வியடைக் காரணமே, பொன்முடிதான். இந்தத் தேர்தலில் வி.சி.க இரண்டு சீட்டுகளை வென்றிருந்தால், காங்கிரஸ் அமைச்சரவையில் திருமா இடம் பெற்றிருக்க முடியும். அதைக் கெடுத்தது தி.மு.க நிர்வாகிகள்தான்.

3. அதுவே, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 36 தொகுதிகளில் தி.மு.க தனித்துப் போட்டியிட்டது. மிகப் பெரிய கூட்டணி அப்போது உருவாகவில்லை. இதில், எங்களுக்கு சீட் ஒதுக்குவதில் தி.மு.க பாரபட்சம் காட்டியது. ஒரே ஒரு தொகுதிதான் முதலில் ஒதுக்கினார்கள். இதனை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். வீரமணி தலையிட்டு திருவள்ளூர் தொகுதியை வாங்கிக் கொடுத்தார். அந்த நேரத்தில், வி.சி.கவை தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர் கிண்டலடித்ததையும் நாங்கள் மறக்கவில்லை.

4. ஏற்காடு இடைத் தேர்தலில் தி.மு.கவுக்காக வலியப் போய் பிரசாரம் செய்தார் திருமா. அந்தத் தொகுதி தி.மு.க நிர்வாகிகள், திருமாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உரிய மரியாதையும் கொடுக்கவில்லை. அவரே தனியாகப் போய் பிரசாரம் செய்து வந்தார். எங்களை உரிய முறையில் நடத்தியிருந்தால், கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவுக்கு நாங்கள் வந்திருக்க மாட்டோம். இந்தத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி என்ற கருத்து விதையை திருமா தூவாமல் இருந்திருந்தால் ம.தி.மு.கவும், இடதுசாரிகளும் வேறு அணிக்குச் சென்றிருப்பார்கள். குறிப்பாக, தி.மு.கவுடன் ம.தி.மு.க அணி சேர்ந்திருக்கும். நாங்கள் அணியில் இருந்திருந்தால், 200 தொகுதிகளில் தி.மு.க வென்றிருக்கும். அந்த வகையில் தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக, புதிய அணியைக் கட்டமைத்தது திருமா மட்டும்தான். அவரால்தான் ஆறு கட்சி கூட்டணி முதன்முறையாக ஏற்பட்டது. இப்படியொரு கூட்டணி அமையாமல் இருந்திருந்தால் தி.மு.க கட்டாயம் வெற்றி பெற்றிருக்கும். இதனை தி.மு.க தலைவர் கருணாநிதி உணர வேண்டும்.

5. வரும் காலங்களில் தி.மு.க,  தான் செய்த தவறுகளை உணர வேண்டும் என்பதற்காகத்தான், ' மக்கள் நலக் கூட்டணி தொடர்கிறது' எனத் தொடர்ந்து பேசி வருகிறார் திருமா. திருமாவின் நோக்கத்தை தி.மு.க புரிந்து கொண்டால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத பா.ஜ.கவுக்கு எதிரான ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மாபெரும் அணியைக் கட்டமைக்க முடியும். அது திருமாவால் மட்டுமே முடியும்" என விவரித்தார்.

ஆனால், இதுகுறித்து நம்மிடம் பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், " தி.மு.கவை நோக்கிப் பயணப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து தேர்தலை சந்தித்து, பல தொகுதிகளில் நல்ல வாக்குகளை வாங்கியிருக்கிறோம். எங்களின் இந்தப் புதிய முயற்சியை வி.சி.க தொண்டர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். அடுத்து வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள மூன்று தொகுதிகளை அடையாளம் கண்டு, அந்தத் தொகுதியில் இப்போதிருந்தே தேர்தல் பணிகளைத் தொடங்குமாறு தலைவர் திருமா உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்காக, ' வேர்களைத் தேடி' என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் சென்று தொண்டர்களை சந்திக்க இருக்கிறார். மீண்டும் தி.மு.க, அ.தி.மு.க என கூட்டணி வைத்துக் கொண்டு, ஒரே ஒரு தொகுதியை வாங்கிக் கொண்டு மாநிலம் முழுவதும் உழைப்பதைவிடவும், எங்களுக்கான தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை பெறும் முயற்சியில் இருக்கிறோம். தொண்டர்களின் நிலைப்பாடும் அதையொட்டியே இருக்கிறது. அந்தவகையில், இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து தேர்தல் வேலைகளை சந்திப்பதையே தலைவர் திருமா விரும்புகிறார்" என்கிறார் உறுதியாக.

' சிறுத்தைகள் எடுத்து வைக்கும் அடுத்தடுத்த காலடித் தடங்களே, மக்கள் நலக் கூட்டணியின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும்' என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

-ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ