Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக முதலீட்டாளர் மாநாட்டால் தமிழகத்துக்கு வந்த நன்மைகள் என்ன? -வெள்ளை அறிக்கை கேட்கும் ஸ்டாலின்!

சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வந்த நன்மைகள் என்ன? என்பது பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதும், அவரது பேச்சில் குறுக்கிட்டு அமைச்சர்கள் அளித்த பதில்களும்...

மு.க.ஸ்டாலின்: வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தின் இரு பக்கங்கள். இந்த தேர்தலில் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் இருவருமே உணர்ந்திருக்கிறோம். வெளிப்படையான நிர்வாகத்தை அரசு வழங்க வேண்டும், அதை தி.மு.க. உறுதி செய்ய வேண்டும் என்ற மக்களின் முடிவுதான் இந்த தேர்தலில் வெளிப்பட்டுள்ளது.

சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். சிறு, குறு விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டாலும், யார் யாருக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட தொகையையும் அதில் காட்ட வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலும் பெற்ற விவசாய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

அமைச்சர் செல்லூர் ராஜூ: ரூ.5 ஆயிரத்து 780 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்திருக்கிறோம். இணையதளத்தில் வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்படும்.

மு.க.ஸ்டாலின்: பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து முழு அளவு பாலையும் கொள்முதல் செய்ய வழிவகை செய்ய வேண்டும். 20 சதவீத பாலை திருப்பி அனுப்பிவிடுவதாக சம்பந்தப்பட்ட சங்கங்களில் இருந்து புகார் வருகிறது.

அமைச்சர் சண்முகநாதன்: அனைத்து பாலையும் பால் கூட்டுறவு சங்கங்கள் பெற்றுக் கொள்கின்றன. கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பாலையும் அரசு வாங்குகிறது. அவர்களுக்கு பாதிப்பு இல்லை. சில வியாபாரிகளுக்குத்தான் பாதிப்பு.

மு.க.ஸ்டாலின்: எது உண்மை என்பது சம்பந்தப்பட்ட மக்களுக்கு தெரியும். சென்னையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடிக்கு சென்றிருந்தேன். அங்கு துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணை போன்றவற்றின் விலைப்பட்டியலை 2011–ம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால், பல மடங்கு உயர்ந்திருக்கிறது. எனவே விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது என்று எப்படி கூறமுடியும்?

அமைச்சர் காமராஜ்: பொது வினியோகத் திட்டத்தில் அனைவருக்கும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவை சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விலைவாசியை கட்டுப்படுத்த பண்ணை பசுமைக் கடைகளும் இயங்கி வருகின்றன. அதுதவிர, அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகங்கள், அம்மா குடிநீர், அம்மா உணவகம் போன்ற திட்டங்களும் செயல்படுகின்றன. கூட்டுறவு, அமுதம் சிறப்பங்காடிகள் மூலமாகவும் அடக்கவிலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தக்காளி விலையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 ஆக விலை குறைந்துள்ளது. உணவுத் துறைக்கு மானியத் தொகையையும் தி.மு.க. அரசைவிட இந்த அரசு கூடுதலாக ஒதுக்கியுள்ளது.

அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்: தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்தபோது, மக்களின் வருமானம் உயர்ந்தால் விலைவாசி உயரத்தான் செய்யும் என்று பேசியதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அமைச்சர் காமராஜ்: விலைகட்டுப்பாட்டு நிதியத்தை அ.தி.மு.க. அரசு உருவாக்கியுள்ளது. எனவே தமிழகத்தில் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது.

மு.க.ஸ்டாலின்: உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தனதாக அறிவிக்கப்பட்டது. அதன் நிலை என்ன?

அமைச்சர் சம்பத்: 98 ஒப்பந்தங்களில் 60 ஒப்பந்தங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. 7 ஒப்பந்தங்களுக்கான திட்டங்கள் முழுமையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 48 ஆயிரத்து 148 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்: இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக தமிழகத்துக்கு கிடைத்துள்ள நன்மைகள் என்ன என்பது பற்றிய வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அமைச்சர் சம்பத்: அதற்கு அவசியம் இல்லை.

மு.க.ஸ்டாலின்: கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மின் திட்டங்கள் எவை? மின்சாரம் இருந்தால்தான் புதிய தொழில்கள் இங்கு வரும். கொலைக்கான கூலிப்படையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரித்து மக்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும்.

அமைச்சர் செல்லூர் ராஜூ: தமிழகத்தில் மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள்.

அவை முன்னவர்: சட்டம்–ஒழுங்கு தொடர்பாக ஏதாவது சம்பவங்கள் நடந்தால் அதை குறிப்பிட்டு கூறலாம். பொதுவாகக் கூற வேண்டாம். உங்கள் ஆட்சியில்தான் நில அபகரிப்பு, மதுரை பத்திரிகையில் ஊழியர்கள் கொலை என சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது.

அமைச்சர் தங்கமணி: தமிழகத்தின் மின்தேவை 14 ஆயிரம் மெகாவாட் தான். ஆனால் 16 ஆயிரத்து 966 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. மேலும், தனியார் உற்பத்தியில் 900 மெகாவாட் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம். எனவே இங்கு தொழிற்சாலைகள் வருவதில் எந்த பிரச்னையும் இருக்காது.

மு.க.ஸ்டாலின்: முதலமைச்சரையும் விசாரிக்கக் கூடிய அளவில் லோக் ஆயுக்தா இங்கு கொண்டு வரப்பட வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் நிதி முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை. எனது தொகுதியில் ஒதுக்கப்பட்ட நிதியில் 60 சதவீதத்துக்கு மேல் செலவு செய்யப்படவில்லை.

அமைச்சர் வேலுமணி: சில திட்டங்களுக்கான இடம் உடனே கிடைப்பதில்லை. எனவே தான் அந்த நிதியை பயன்படுத்த முடியாமல் போயிருக்கும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ