Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேயர் தேர்தலை தமிழக அரசு ரத்து செய்ததற்கு இதுதான் காரணம்..! ராமதாஸ் பகீர்


5 மாநகராட்சிகளின் எல்லைகளுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும்கட்சியான அதிமுக கடந்த தேர்தலில் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. அதனால் அம்மாநகராட்சிகளில் மேயர் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாகவே மறைமுகத் தேர்தல் மூலம் மேயரை தேர்வு செய்யும் முடிவை அதிமுக எடுத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர் பதவிக்கு நேரடியாகத் தேர்தல் நடத்தும் முறைக்கு முடிவு கட்டி,  மறைமுகத் தேர்தல் மூலம் மேயரை தேர்வு செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில்  இன்று நிறைவேற்றப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் பிற்போக்குத்தனமானதாகும். பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்பாலிகா சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் 1996ம் ஆண்டிலிருந்து  தமிழகத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தேர்தல்களில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஆகிய இரு பதவிகளைத் தவிர மீதமுள்ள அனைத்துப் பதவிகளும் நேரடித் தேர்தல் மூலமாகவே நிரப்பப்பட்டு வந்தன. 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு,  தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிகளையும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பும் வகையில் சட்டத்திருத்தம் செய்தது. 2011ம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்கள் அனைவருமே நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்தது. ஆனால், அதே அ.தி.மு.க. இப்போது மேயர்கள் மட்டும் மறைமுகத் தேர்தலில் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று கூறி சட்டத் திருத்தம் கொண்டு வருவது விந்தையாக உள்ளது.

சில மாநகராட்சிகளில் உறுப்பினர்களின் ஆதரவு மேயருக்கு அவ்வளவாக இல்லை என்பதால் மாமன்றங்கள் முறையாக செயல்படுவதில்லை என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதைக் கருத்தில் கொண்டே மாநகராட்சி உறுப்பினர்கள் மூலம் மேயர்களை தேர்வு செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கத்தை ஏற்க முடியாது. கடந்த 2011ம் ஆண்டில் மேயர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் முறையை மாற்றி நேரடியாக தேர்வு செய்யும் வகையில் அதிமுக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. 2011ம் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி இதற்கான சட்டத் திருத்த முன்வரைவை தாக்கல் செய்து பேசிய அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி,‘‘ மாநகராட்சி மேயர்கள் மறைமுகமாக தேர்வு செய்யப்படுவதால் மாநகராட்சி உறுப்பினரே மேயராக தேர்வாகிறார். அவ்வாறு தேர்வாகும் மேயர் ஒட்டுமொத்த மாநகராட்சிக்கும் மேயராக செயல்படாமல், தாம் தேர்வான வட்டத்திற்கு மட்டும் மேயராக செயல்பட்டு அங்கு அதிக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, மாநகராட்சி மேயர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படும் போது சிறப்பான நிர்வாகத்தை வழங்கவும், மக்களுக்கு விரைவாக சேவைகளை வழங்கவும் வாய்ப்பு ஏற்படும்’’ என்று கூறியிருந்தார். இப்போது மேயர்களை மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க ஆட்சியாளர்கள் முடிவு செய்திருக்கும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன் கே.பி.முனுசாமியால் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து தவறுகளும் மீண்டும் நடப்பதை அரசே ஊக்குவிக்கிறதா என்ற வினாவுக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்.

உள்ளாட்சித் தலைவர்கள் அனைவரும் நேரடியாக தேர்வு செய்யப்படுவது தான் முறையானதாக இருக்கும்; அது தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக 1986ம் ஆண்டில் தமிழகத்தில் மாநகராட்சிகள் தவிர்த்து பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் கூட அனைத்து உள்ளாட்சித் தலைவர் பதவிகளும் நேரடியாகத் தான் நிரப்பப்பட்டன. இப்போது மறைமுகமாக நிரப்பப்படும் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவி கூட அப்போது நேரடியாகத் தான் நிரப்பப்பட்டது. அதனால் தான் அப்போது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் மிக வலிமையாக செயல்பட்டன. உள்ளாட்சிகளில் ஜனநாயகமும் தழைத்தோங்கியது. ஆனால், அதற்கு மாறாக மறைமுகத் தேர்தல் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவானால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் எதிரணியிலுள்ள மாநகராட்சி உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் கலாச்சாரம் பெருகும். அது ஜனநாயகப் படுகொலைக்கும், ஊழலுக்கும் வழி வகுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சிகளில் சென்னை, நெல்லை, திருச்சி, வேலூர், தூத்துக்குடி ஆகிய 5 மாநகராட்சிகளின் எல்லைகளுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும்கட்சியான அதிமுக கடந்த தேர்தலில் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. அதனால் அம்மாநகராட்சிகளில் மேயர் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாகவே இப்படி ஒரு முடிவை அதிமுக எடுத்திருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அரசின் இந்த முடிவு தமிழகத்திற்கு நல்லதல்ல. எனவே, மாநகராட்சி மேயர்களை மாநகராட்சி உறுப்பினர்களைக் கொண்டு மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். இப்போது நடைமுறையில் உள்ளவாறு மேயர்களை மக்களால் நேரடியாக தேர்வு செய்யும் முறையே தொடர அரசு வகை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ