Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுகவுக்கு யார்தான் தலைவர்?! பேரவையில் பற்ற வைத்த முதல்வர்

திமுக உறுப்பினர்களுக்குத் தலைவர் யார்? தி.மு.க.வின் தலைவர் என்று குறிப்பிடுகின்ற கருணாநிதியா? அல்லது இங்கே அமர்ந்திருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவரா? யார் தலைவர் என்பதிலேயே குழப்பம் என்று சட்டப்பேரவையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் முதல்வர் ஜெயலலிதா.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரையில், "1974ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றியும், அதனைத் தடுக்க கருணாநிதி தவறி விட்டது பற்றியும் விரிவாக நான் இந்த மாமன்றத்தில் 20.6.2016 அன்று எடுத்துக் கூறினேன். 21.6.2016 அன்று கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கச்சத்தீவை தாரை வார்க்க தான் எந்த காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை, உடன்பட்டதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு மே மாதம் டெசோ அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நான் கேட்கும் கேள்விகள் என்னவென்றால், 1974ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தவுடன் தான் அது பற்றி தெரியும் என்று சொன்னதும், 15.4.2013 அன்று டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திமுக அரசு வலியுறுத்தி தான் சில ஷரத்துகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன என்று கூறுவதும், ஒன்றுக்கொன்று முரண்பாடானதில்லையா? சில ஷரத்துகள் சேர்க்கும்படி சொல்லப்பட்டது என்றாலே, தாரை வார்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது தானே பொருள்?

நான் இந்தக் கேள்விகளை கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் பதில் சொல்லட்டும், நீங்கள் அமருங்கள். I am not yieling. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சமாதானம் செய்து, (அப்போது திமுக உறுப்பினர்கள் அமளி) பதில் சொல்ல முடியவில்லை என்றால், கூச்சல் போடுவதா? பதில் சொல்லமுடியவில்லை என்றால், கூச்சல் போடுவதால் என்ன ஆகப்போகிறது? உங்கள் தலைவர் பதில் சொல்லட்டும். உங்கள் தலைவர், தலைவர்தானா? அல்லது இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர்தான் உங்கள் தலைவரா? கூச்சல் போடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நான் கேட்கும் கேள்விகளைக் கேட்டே தீருவேன். எனக்குப் பேச அனுமதி தாருங்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அவர்கள் யார் பேச வாய்ப்பு கேட்கிறார்கள்? அவர்களது தலைவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த அவையின் உறுப்பினர். அவர் இங்கே வந்து பதில் சொல்லியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு வெளியே அறிக்கை கொடுத்துக்கொண்டிருக்கிறார். அந்த அறிக்கையைப் பற்றித்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களால் முடியவில்லை என்றால் உட்காருங்கள். அறிக்கை கொடுத்தவரே இங்கே வந்து பதில் சொல்லட்டும். நீங்கள் உட்காருங்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்னும் சில நிமிடங்களில் எனது பதிலுரையை முடித்துவிடுவேன். அதன் பின்னர் அவர்கள் என்ன பேச விரும்பினாலும் தாங்கள் அனுமதிக்கலாம். கிட்டதட்ட ஒன்றரை மணிநேரம் இதுவரை எதிர்க்கட்சி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்து எனது உரையைக் கேட்டார்கள். ஆனால் கச்சத்தீவு என்று சொன்னவுடனே அவர்களால் பதில் சொல்ல முடியாது என்பது தெரியும். கச்சத்தீவைப் பற்றி சில கேள்விகளை நான் எழுப்ப விரும்புகிறேன் என்று சொன்னவுடன் ஓட்டம் பிடித்துவிட்டார்கள். இதைத்தான் எதிர்பார்த்தேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால், கச்சத்தீவை பற்றி நான் பேசினால், முதலில் கூச்சல் போட வேண்டியது, அதன் பின்னர் அந்த கூச்சலால் இங்கே எதையும் தடை செய்ய முடியவில்லை என்றதும், ஓட்டம் பிடிக்க வேண்டியது.

ஒன்றை நான் அனைவருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கச்சத்தீவு பிரச்னை பற்றி கடந்த 20ம் தேதி அன்று நான் இங்கே சில கருத்துகளைத் தெரிவித்தேன். அதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த அவைக்கு வெளியே ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். 21ம் தேதி அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கச்சத்தீவைப் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அனைவருக்கும் நான் நினைவுபடுத்த விரும்புவது கருணாநிதி இந்த அவையின் உறுப்பினர் ஆவார். சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு இந்த அவைக்கு வருவதற்கு எல்லா உரிமையும் உண்டு. அவர் இந்த அவைக்கு வந்திருக்கலாம்; அவருடைய கருத்துகளைத் தெரிவித்திருக்கலாம். நான் கேட்கும் கேள்விகளுக்கு அவரே இங்கே பதில் அளித்திருக்கலாம். ஆனால், அவர் இங்கே வராமல், வெளியில் இருந்துகொண்டு அறிக்கை விடுகிறார். கருணாநிதி விட்ட அறிக்கை தொடர்பாகத்தான் நான் பேசி கொண்டிருக்கிறேன்.

நான் கேட்கின்ற கேள்விகள் கருணாநிதியை பார்த்துத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதற்குப் பதில் சொல்ல வக்கிருந்தால், இங்கே இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்ல வக்கில்லை என்றால், அவர்களுடைய தலைவரை இங்கே அழைத்து வரவேண்டும் இங்கே பதில் சொல்வதற்கு. அவர்களுக்குத் தலைவர் யார் என்ற குழப்பம் வேறு. அவர்களுடைய தலைவர் யார்? தி.மு.க.வின் தலைவர் என்று குறிப்பிடுகின்ற கருணாநிதியா? அல்லது இங்கே அமர்ந்திருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவரா? யார் தலைவர் என்பதிலேயே குழப்பம். அந்தத் தலைவர் கருணாநிதி, வேண்டுமென்றால் இந்த அவைக்கு வரலாம்; பதில் சொல்லலாம். இவர்களுக்கு கச்சத் தீவைப் பற்றி எதுவும் தெரியாது என்றால், பேசாமல் இருக்கலாம். எப்படி முதல் அறிக்கையை கருணாநிதி வெளியில் இருந்துகொண்டு விட்டாரோ, அதேபோலவே, இன்று நான் எழுப்பும் கேள்விகளுக்கும் கருணாநிதியே பதில் சொல்லட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால், அதற்கு மாறாக, கச்சத்தீவு என்று சொன்னவுடனேயே ஓட்டம் பிடித்துவிட்டார்கள். நான் கேட்க வேண்டிய கேள்விகளை இப்போது நான் கேட்டு முடிக்கிறேன்" என்று பேசினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ