Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எங்களுக்கே வருமானம் போதலை, நீ வேறயா?' - 500 டாஸ்மாக் கடைகளின் அடுத்த எபிசோட்


 

அ.தி.மு.க மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன், டாஸ்மாக் கடைகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டது. அடுத்து 500 டாஸ்மாக் கடைகளை சமீபத்தில் மூட ஜெயலலிதா உத்தரவிட்டார். மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய சுமார் 2,500 ஊழியர்கள் வேறு கடைகளில் பணியமர்த்தப்பட்டனர். அங்கு இப்போது ஊழியர்களுக்கிடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் 6,500 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இதில் சூப்பர்வைசருக்கு 6,500 ரூபாயும், சேல்ஸ்மேனுக்கு 5,500 ரூபாயும், உதவியாளருக்கு 4,800 ரூபாயும் மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. (இந்த குறைந்த சம்பளத்தில் வாழ்க்கையை நடத்துவது என்பது கேள்விகுறியே) இதை சமாளிக்க பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தி விற்கப்படுகிறது. இதனால் அவ்வப்போது தகராறும் ஏற்படுவதுண்டு. கூடுதல் விலைக்கு விற்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுண்டு. கூடுதல் விலை உள்ளிட்ட சில தில்லாங்கடி வேலை காரணமாக அதிகமாக வசூலாகும் கடைகளில் தினமும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊழியர்கள் கல்லா கட்டுவதுண்டு.

இந்நிலையில் மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தினமும் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலாகும் கடைகளில் பணி வழங்கப்பட்டுள்ளது. சிலரை பறக்கும் படையில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. 10 சதவிகிதம் ஊழியர்களை 'ரிசர்வ்' என்று டாஸ்மாக் நிறுவனம் கையில் வைத்துள்ளது. இவர்களை எதாவது ஒரு கடையில் ஆள்பற்றாக்குறை ஏற்படும் போது அங்கு பயன்படுத்த டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. இதன்காரணமாக சில கடைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இதர வருமானத்தை பங்கு பிரிப்பதில் சில கடைகளில் ஊழியர்களுக்கு இடையே குடுமிபிடி சண்டை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த பிரச்னை தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள கடைகளில் அதிகம் உள்ளது.  கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட வசூல் குறைவாக உள்ள கடைகளில் ஊழியர்களுக்கு இடையே கடும் பனிப்போர் நிலவுவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊழியர்களை பணியமர்த்துவதில் ஆளுங்கட்சியினரின் தலையீடும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிக வசூலாகும் கடைகளில் ஊழியர்களை பணியமர்த்த ஆளுங்கட்சியினர் ஒரு வசூல் வேட்டை நடத்தி இருக்கிறார்களாம். இந்த தகவல் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. மேலும், பள்ளிக்கூடம், கோயில்கள், பொது மக்கள் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சசிபெருமாள் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தியும் அந்த கடைகள் மூடப்படவில்லை என்கிறார்கள் மக்கள். வசூல் குறைவாக உள்ள கடைகளால் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய 500 கடைகளுக்கு மூடு விழா நடத்தப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் நாடகம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலுசாமி கூறுகையில், "மூடப்பட்ட கடைகளில் பணியாற்றியவர்களில் 90 சதவிகிதத்தினருக்கு வேறு கடைகளில் பணி வழங்கப்பட்டுள்ளது.  எந்தப்பணியும் வழங்காத ஊழியர்களின் நிலைமை கேள்விகுறியாக உள்ளது. கடைகளை மூடும் போது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடு குறித்த திட்டம் அரசிடம் இல்லை. டாஸ்மாக் தவிர இதர அரசு துறைகளில் இந்த ஊழியர்களுக்கு வேலை வழங்கலாம். இன்னும் வரும் காலங்களில் கூடுதலாக கடைகள் மூடப்படும் பட்சத்தில் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பதோடு விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்றார்.


எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ