Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேயர் தேர்வு விவகாரம்... சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

சென்னை: சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கான மேயர்களை நேரடித் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், " சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளுக்கான மேயர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மேயர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஜனநாயக உரிமை பறிப்பு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தில் 1996 முதல் தொடர்ச்சியாக நடைபெறும் தேர்தல்களில் 1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் கவுன்சிலர்களால் மேயர் தேர்வு நடைபெற்றது. 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மேயரை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது. 2006ம்  ஆண்டு திமுக ஆட்சியில் மேயரை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் வகையில் மீண்டும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நேரடி தேர்தலுக்கு வகை செய்து மீண்டும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது 2016ல் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களுக்கு மாறாக தற்போது கவுன்சிலர்களே மேயரை தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

உண்மையிலேயே இது மக்கள் நலனை முன்னிறுத்தியோ, மாநகரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை முன்னிறுத்தியோ செய்யப்பட்டதல்ல. அஇஅதிமுகவின் சுயநல அரசியல் ஆதாயம் மற்றும் தோல்வி பயம் கருதியே இந்த சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் பண பலத்தை பயன்படுத்தியதைப் போல், இந்த தேர்தலிலும் பண பலத்தை பயன்படுத்தி மக்களையும், வார்டுகளில் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களையும் விலை பேசி பதவிகளை கைப்பற்றுவதற்கான மறைமுகத்திட்டமாகவே  இது தெரிகிறது. ஜனநாயகத்திற்கு புறம்பாக மக்களின் தேர்ந்தெடுக்கும் உரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்த தாக்குதலை திரும்பப் பெற வேண்டுமென்றும், மேயர்களை நேரடியாகவே தேர்ந்தெடுக்கும் நடைமுறை உறுதி செய்யவேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்றே பாமக உள்ளிட்ட மேலும் பல கட்சிகளும் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ