Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.ஜே.கே. நிர்வாகியை ஏன் விசாரிக்கவில்லை? மதன் வழக்கில் ஐகோர்ட் கிடுக்கிப்பிடி


 

வேந்தர் மூவிஸ் மதன், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ.ஜே.கே கட்சியின் முக்கிய நிர்வாகி ராஜபாஷ்யத்திடம் ஏன் போலீஸார் விசாரிக்கவில்லை என்று அரசு வழக்கறிஞரிடம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வேந்தர் மூவிஸ் மதன், காசியில் சமாதி அடையப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகி விட்டார். அந்தக் கடிதத்தில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் குறித்த தகவல்களையும் குறிப்பிட்டு இருந்தார். மதன் மூலம் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தில் மருத்துவ சேர்க்கைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். புகாரின் பேரில் மதன், அவரது உதவியாளர் சுதீர், எஸ்.ஆர்.எம். குழுமம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மதனின் தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மதன் சம்பந்தமான வழக்குகளை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணை விசாரணை அதிகாரியாக நியமித்தது. தனிப்படை அமைத்து போலீஸார் மதனை தேடி வருகின்றனர்.

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு இன்று வந்தது. தங்கம் தரப்பில் வழக்கறிஞர் இன்ஃபெண்ட் தினேஷ் ஆஜரானார். போலீஸ் தரப்பில் இதுவரை மதன் வழக்கில் நடந்த விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். மதனை கண்டுப்பிடிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நீதிமன்றம், இரண்டு வாரம் கால அவகாசம் வழங்கியது.

இதுகுறித்து வழக்கறிஞர் இன்ஃபெண்ட் தினேஷ் கூறுகையில், "இன்று நடந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள், 'தமிழக போலீஸார் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இதனால் அவர்கள் விரைவில் மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். காலதாமதம் ஏற்படும் போது, வேறு பிரிவிடம் இந்த வழக்கை ஒப்படைக்கும் சூழ்நிலை ஏற்படும். மதன் தொடர்பாக யாரிடம் எல்லாம் விசாரணை நடத்தியுள்ளீர்கள் என்று போலீஸாரிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு போலீஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. தொடர்ந்து மதன், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ.ஜே.கே கட்சியின் முக்கிய நிர்வாகி ராஜபாஷ்யத்திடம் ஏன் போலீஸார் விசாரிக்கவில்லை என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு போலீஸ் தரப்பில், அவர், வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இதனால் அவரிடம் விசாரிக்க வில்லை என்று பதிலளித்தனர். இந்த வழக்கில் பணம் கொடுத்து ஏராளமான மாணவர்கள் ஏமாந்துள்ளனர். அவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மதனை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். மேலும் வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும். இதற்காக போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை அறிக்கையை கவரில் போட்டு அதை சீல் வைத்து பதிவாளர் அறையில் வைக்க வேண்டும். ஏனெனில் அது வெளிப்படையாக இருந்தால் அந்த தகவல் எதிர் தரப்பினுக்கு தெரிந்துவிடும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்" என்றார்.


எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ