Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓசூர் காவலரை கொன்ற குற்றவாளிகள் சுற்றிவளைப்பு? கண்காணிப்பு வளையத்தில் வழக்கறிஞர் வீடு!

சென்னை: ஓசூர் காவலர் முனுசாமியை கொன்ற குற்றவாளிகளை, காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த 15-ம் தேதி ஆசிரியையிடம் நகை பறித்த கொள்ளைக் கும்பலை பிடிக்க சென்ற தலைமைக் காவலர் முனுசாமி, கொள்ளையர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழக காவல்துறை வட்டாரத்தில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. ‘உயிரிழந்த காவலர் முனுசாமியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியும், அவரின் மகள் படிப்பு செலவையும் அரசே ஏற்கும்’ என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக புஜ்ஜி (எ) மூர்த்தி (19) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் காவல்துறையின் விசாரணையின் போதே இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவனது கூட்டாளிகள் இரண்டு பேரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். குற்றவாளிகளை சுட்டுபிடிக்கவும் காவல்துறை வட்டாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் இருவர் இன்று (23-ம் தேதி) மாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு ஜே.எம். நீதிமன்றம்-1ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் மூலம் சரணடைய வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் சரண் அடைவதை நீதிபதி சிட்டிபாபு ஏற்கவில்லையாம். இதனால், அடுத்த நிமிடமே அவர்கள், வழக்கறிஞர் ஒருவரின் காரில் அங்கிருந்து கிளம்பியிருக்கின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த வழக்கறிஞரின் வீட்டை சுற்றி காவலர்களை நிறுத்தி வைத்துள்ளனர். வழக்கறிஞர் என்பதால் காவல்துறையினர் அந்த வீட்டின் உள்ளே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். குற்றவாளிகள் தப்பிக்க முடியாதவாறு பல மணி நேரமாக வழக்கறிஞரின் வீட்டை சுற்றி போலீஸ் காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் அந்த வழக்கறிஞரின் வீட்டிலிருந்து தப்பித்து சென்றுவிட்டார்கள் என்றும், நாளை காலையில் மீண்டும் வேறு கோர்ட்டில் சரண் அடைவார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால், குற்றவாளிகள் சரண் அடைவதற்குள் அவர்களை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கறிஞர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். ஆனாலும் அந்த வீட்டை சுற்றி காவல்துறையினர், பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி கண்காணித்து வருகின்றார்கள்.

-பா.ஜெயவேல்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close