Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம்... சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதி!

சென்னை: காவிரி நதிநீர் வழக்கில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதிபட தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ''நதிநீர் பிரச்னைகளில் எனது தலைமையிலான அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும். முல்லைப்பெரியாறு பிரச்னையைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான, நியாயமான தீர்ப்பினை பெற்றதன் அடிப்படையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 21-11-2014 அன்று முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது. கடந்த ஆண்டும் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது.

புதிய முல்லைப்பெரியாறு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அளித்திருந்த அனுமதியை எனது தொடர் வற்புறுத்தலினால் மத்திய அரசு நிறுத்தி வைத்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவான 152 அடிக்கு நீரைத் தேக்கிட தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்துள்ளது.

மத்திய நீர்வளக் குழுமத்தின் திருப்திக்கு அணையை வலுப்படுத்திய பின்னர், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, தனிப்பட்ட வல்லுனர்கள் பரிந்துரையைப் பெற்று, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம், அதன் முழு நீர்த்தேக்க அளவான 152 அடிக்கு உயர்த்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத்தில் இறுதி உத்தரவு 2007 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த இறுதி உத்தரவை மத்திய அரசிதழில் வெளியிடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, மத்திய அரசு தனது இதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை வெளியிட்டது.

ஆனாலும், இதனை நடைமுறைப்படுத்த தேவையான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசிலும் அமைக்கப்படவில்லை. இப்போதைய பா.ஜ.க. அரசாலும் உருவாக்கப்படவில்லை. இவற்றை அமைக்க வேண்டும் என பிரதமரை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். கடந்த ஜனவரியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், மேலாண்மை வாரியத்தையும், நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைப்பது குறித்து மத்திய சட்டம்-நீதித் துறையுடன் கலந்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதியன்று பிரதமரை டெல்லியில் சந்தித்து அளித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியன அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசால் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நீண்ட கால நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றில் காவிரி நதிநீர்ப் பிரச்னையும் ஒன்றாகும். உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வின் முன் காவிரி பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள் 28-3-2016 அன்று விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் இவ்வழக்குகளை 19-7-2016 அன்று பட்டியலிடும்படி ஆணையிட்டுள்ளது. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வரும்போது, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வலியுறுத்தப்படும். அதில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ