Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கினாரா எம்.ஜி.ஆர்? - நடந்ததை சொல்கிறார் முன்னாள் அமைச்சர்!

ந்தியா -  இலங்கை இடையேயான ஒப்பந்தத்தின்படி, 1976 ம் ஆண்டு இலங்கை அரசுக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட விவகாரம்தான், இப்போது சட்டமன்றத்தை அனலடிக்கச் செய்துவருகிறது.

'கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு விட்டுத்தர அப்போதைய முதல்வர் கருணாநிதிதான் காரணம்' என காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திமுகவை நோக்கி வீசப்பட்ட இந்த 'கச்சத்தீவு விவகாரம்' இப்போது பூமராங்காக அதிமுகவுக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது.

இலங்கை அதிபருடன் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி செய்து கொண்ட ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தை அதிகாரபூர்வமாக நிறைவேற்ற வசதியாக வரைபடத்தையே மாற்றி அமைத்தது எம்.ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான்' என அண்மையில் குபீர் குற்றச்சாட்டு கிளம்பியது.

“1983 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியின்போதுதான் அன்றைய ராமாநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி  உத்தரவு பிறப்பித்தார். அதன் உத்தரவு நகல் எண்: RCF 23-75/83)” என அதிர்ச்சி கிளப்பியிருந்தார் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்சி சிவராஜன்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து,  எம்.ஜி.ஆர் அரசில்  அமைச்சராக அங்கம் வகித்த அரங்கநாயகத்திடம் பேசினோம். கச்சத்தீவு இலங்கைக்கு தரப்படுவது தொடர்பாக, அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்திற்கு, அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரால் அனுப்பிவைக்கப்பட்டவர் அரங்கநாயகம்.

“கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு என்பது எள்ளளவும் இல்லை. இது முழுக்க முழுக்க கருணாநிதியின் நடவடிக்கை. அன்றைக்கு பல அரசியல் நெருக்கடிகளுக்குள்ளாகி இருந்தார் கருணாநிதி. அதன் காரணமாக பிரதமர் இந்திரா எதைச் சொன்னாலும் தலையாட்டும் நிலையில்தான் இருந்தார். இந்திராவை திருப்திப்படுத்துவதற்காக அவர் வளைந்துகொடுத்ததே கச்சத்தீவு நம்மை விட்டுப் போக காரணம்" என்றார் தடாலடியாக. 

அன்றைய தினம் நடந்ததென்ன என்பது குறித்தும், எம்.ஜி.ஆர் மீதான குற்றச்சாட்டு குறித்தும் அவரிடம் கேட்டோம்.


“1976 ம் ஆண்டு, ஜூன் 24 ம் தேதி கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதற்கு மத்திய அரசால் ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு முன்னதாக, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு,  அதுகுறித்து விவாதிக்க 1974 ம் ஆண்டு, ஜூன் மாதம் 29 ம் தேதியன்று  அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றிற்காக நானும் எம்.ஜி.ஆரும் அப்போது திருச்சியில் இருந்தோம்.

விஷயமறிந்த எம்.ஜி.ஆர், 'கருணாநிதி என்னவோ திட்டமிடுகிறார். எதிர்க்கட்சியாக அதை நாம் முறியடிக்கவேண்டும்' என்றதோடு, எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதமும் கொடுத்தார்.

அதன்படி அதிமுக சார்பில் அக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், ம.பொ.சி மற்றும் இன்னபிற தலைவர்களும் வந்திருந்த அக்கூட்டத்தில், ஆரம்பம் முதலே கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு சாதகமான முடிவெடுப்பதுபோலவே கருணாநிதியின் நடவடிக்கை இருந்தது. காரணம், முன்னரே கச்சத்தீவு விவகாரத்தில் சாதகமான முடிவை அளிப்பதாக பிரதமர் இந்திராவுக்கு உறுதியளித்திருந்ததே. அதை அன்றைய மத்திய மந்திரி சவான், நாடாளுமன்றக் கூட்டத்திலேயே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில், 'கச்சத்தீவு என்பது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம்' என்று பேசி,  அதை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதற்கு அதிமுகவின் பலமான  எதிர்ப்பை பதிவு செய்தேன். 'கச்சத்தீவு எக்காரணம் கொண்டும் கைவிட்டுப்போகக்கூடாது. அதில் எந்த மாற்றம் தெரிந்தாலும் வெளிநடப்பு செய்யுங்கள்' என எம்.ஜி.ஆர் என்னிடம் முன்னரே அறிவுறுத்தியபடி, கருணாநிதியின் அந்த முடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து, வெளியேறினேன்.

மற்ற கட்சி உறுப்பினர்களும் அதே கருத்தில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த, கருணாநிதி வேறு வழியின்றி, " சில ஷரத்துக்களுடன், கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்ற ரீதியில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்.

அதிமுகவின் பலமான எதிர்ப்பினால்தான், கச்சத்தீவு விவகாரத்தில் அனைத்துக்கட்சியினரின் சம்மதத்தின்படி, மத்திய அரசுக்கு சாதகமான தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருந்த கருணாநிதியின் திட்டம் பலிக்காமல் போனது. அதன்பின் சட்டமன்றத்திலும் தொடர்ந்து எங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஆலடி அருணா, கோவை செழியன் ஆகியோர் கச்சத்தீவு விவகாரத்தில், அதிமுகவின் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்துவந்தனர்.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நடந்தவற்றை பொதுவெளியில் வராதவாறு, கருணாநிதி தனது அதிகாரத்தை  பயன்படுத்தி சாமர்த்தியமாக மறைத்துவிட்டார். இதற்கு பின் மாநில சட்டமன்றத்தில் அதிகார்பூர்வ தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையிலேயே,  தன்னிச்சையாக கச்சத்தீவை இலங்கைக்கு சொந்தமாக்கியது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை அப்போது பெரிய அரசியல் பிரச்னையாக்கப்படவில்லை. விடுதலைப்புலிகளின் தமிழ் ஈழ போராட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டதால், கச்சத்தீவு விவகாரம் பின்னுக்கு சென்றுவிட்டது. இதுதான் நடந்த உண்மை.

இப்படி கச்சத்தீவு விவகாரத்தில், தமிழகத்திற்கு எதிராக எந்த ஒரு காலகட்டத்திலும் எம்.ஜி.ஆர் செயல்படவில்லை. ஒருவேளை அன்று சட்டமன்றத்தில் அப்படி அலுவல் ரீதியான ஒரு தீர்மானம் நிறைவேற்ற  இடம்கொடுத்திருந்தால், இன்று நாம் வழக்கு போட்டு நம் உரிமையை கோர சட்டப்படியான தகுதியைப் பெற்றிருக்கமுடியாது என்பதுதான் நிஜம். அதற்கு காரணம் எம்.ஜி.ஆர்தான்” என்றார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் வரைபடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கச்சத்தீவை நீக்கியது குறித்து கேட்டோம்.

“ அதிகாரபூர்வமாக கச்சத்தீவை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஒப்பந்தப்படி ஒப்படைத்து விட்டபிறகு, அதை மாநில அரசு தன் வரைபடத்தில் இருந்து நீக்குவது சாதாரண ஒரு அலுவலக நடைமுறைதான் என்பது, நிர்வாக நடைமுறை அறிந்த யாருக்கும் நன்கு தெரியும்.” என முடித்துக்கொண்டார் அரங்கநாயம்.

திராவிடக் கட்சிகள், கச்சத்தீவு விவகாரத்தில் இன்னமும் லாவணி பாடிக்கொண்டிருக்காமல் சட்டப்படி  அதை மீண்டும் தமிழகத்திற்குரியதாக்க முயல்வதுதான் ஆரோக்யமான அரசியலாக இருக்கும். வாக்களித்தவர்களின் விருப்பமும் அதுதான்!

- எஸ்.கிருபாகரன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close