Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அ.தி.மு.க டெபாசிட் வாங்காததற்கு நானா பொறுப்பு?! -கொந்தளிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ.

" விளவங்கோடு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் தோற்றதன் பின்னணியிலேயே என் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது" எனக் கொந்தளிக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி. இதுதொடர்பாக, நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வந்தவரால், நீதிபதியை சந்திக்க முடியவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் சந்தைத் திடலில் 2015 செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் மீது அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஞானசேகரன், நாகர்கோவில், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கடந்த ஜூன் 15ம் தேதி விஜயதரணி ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஜயதரணிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, தலைமை குற்றவியல் நீதிபதி சசிகுமார் உத்தரவிட்டார். இது அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுபற்றி சட்டமன்றத்தில் பேசிய விஜயதரணி, ' இந்த வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுவதற்கு அரசு வழக்கறிஞர் கொடுத்த அழுத்தம்தான் காரணம். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், செயின் பறிப்பு என நாள்தோறும் எவ்வளவோ விஷயங்கள் நடந்து வருகின்றன. அதில் தொடர்புடையவர்களையெல்லாம் கண்டுபிடிக்க, எந்த பிடிவாரன்ட்டும் பிறப்பிக்கப்படுவதில்லை. நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர். எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை. அவதூறு வழக்கு ஒன்றிற்காக என் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கு சம்மன் மட்டும் அனுப்பினால் போதும் என உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் இருக்கின்றன' எனக் குறிப்பிட, இடைமறித்த சபாநாயகர் தனபால், ' நீதித்துறை தொடர்பான விஷயங்களை இங்கு பேச வேண்டாம்' என முடித்துக் கொண்டார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், " சட்டமன்றத் தேர்தலில் 33 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் விஜயதரணி வென்றார். இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் நாஞ்சில் டோம்னிக் சேவியோ ஜார்ஜ் டெபாசிட் வாங்கவில்லை. அவர் வாங்கிய ஓட்டுக்கள் 24,801. விஜயதரணி வாங்கியது 68,789 வாக்குகள். இதில் பா.ஜ.கவின் தர்மராஜ் இரண்டாவது இடத்திற்கும் சி.பி.எம்மின் செல்லச்சாமி மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டார். தமிழ்நாட்டின் எல்லையில் இப்படியொரு படுதோல்வியை அ.தி.மு.க சந்தித்ததை, கட்சித் தலைமை விரும்பவில்லை. அதற்காகத்தான் என்றைக்கோ விஜயதரணி பேசிய வழக்கில், சட்டசபை கூடும் நேரத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க டெபாசிட் வாங்காததற்கு அவரா பொறுப்பு? சட்டரீதியாகவே இந்த வழக்கை அவர் சந்திப்பார்" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விஜயதரணி, " நான் எங்கும் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. மிகச் சாதாரண வழக்கை நெருக்கடி மிகுந்த ஒன்றாகக் காட்டிவிட்டனர். வழக்கில் ஆஜராக அவசரம் அவசரமாக நேற்று நாகர்கோவில் கோர்ட்டுக்கு வந்தேன். போக்குவரத்து செலவே பத்தாயிரம் ரூபாயைத் தாண்டிவிட்டது. வக்கீல்களின் கோர்ட் புறக்கணிப்பால், நீதிபதி யாரிடமும் மனு வாங்கவில்லை. மக்கள் பணிகளைச் செய்வதற்கே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதுபோன்ற வழக்குகளால் நேர விரயம்தான் ஏற்படுகிறது" என வேதனைப்பட்டார்.

ஆ.விஜயானந்த்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close