Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கச்சத்தீவு பிரச்னை: ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு கருணாநிதி காட்டமான பதில்!

சென்னை: பட்டுக்கோட்டைக்கு வழி எது என்று கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்கிறார் ஜெயலலிதா என தி.மு.க தலைவர் கருணாநிதி காட்டமாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''முதலமைச்சர் ஜெயலலிதா கச்சத் தீவு பற்றி எவ்விதத் தேவையோ, அடிப்படையோ இல்லாமல் மீண்டும் தமிழகச் சட்டப்பேரவையில் எனக்குக் கேள்வி எழுப்பியிருக்கிறார். சாதாரணமாக அமைச்சர்களை நோக்கித்தான் பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால், ஜெயலலிதா என்னிடம் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்கிறார். நான் இரண்டு பக்கங்களுக்கு முரசொலியில் கச்சத் தீவு பற்றி விரிவாக விளக்கங்களை அளித்த பிறகும், அதில் ஜெயலலிதா எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதை நியாயப்படுத்திக் குறிப்பிட்டது பற்றிச் சுட்டிக்காட்டிய பிறகும் அதைப் படிக்காமல் என்னிடமே கேள்வி கேட்கிறார்.

பேரவையில் என்னுடைய விளக்கங்களைப் படித்துக் காட்ட முன் வந்த துரைமுருகனையும் பேசுவதற்கு அனுமதிக்காமல் ஜெயலலிதா, அவருக்கு எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்திருக்கிறார். அவர் கேட்டுள்ள கேள்விகளுக்கான விளக்கத்தை என்னுடைய உடன்பிறப்புகளுக்கான நீண்ட மடலில் அளித்து விட்டேன். அளித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பிரதமர்கள் நரசிம்மராவுக்கும், வாஜ்பாய்க்கும் எழுதிய கடிதங்களில் அவரைக் காட்டிக் கொடுப்பதாக உள்ள வாசகங்களை அப்படியே ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டு, அதற்கு விளக்கம் கேட்டிருந்தேனே, அதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் விளக்கம் அளித்திருக்க வேண்டாமா? அதற்கு விளக்கமளிக்காமல், வினாக்களை மட்டும் தொடுத்துக் கொண்டிருந்தால், அவரிடம் விளக்கமளிக்க வேறெதுவும் இல்லை என்றுதானே பொருள்?

ஜெயலலிதா தனது முதல் கேள்வியாக, 1974-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தவுடன்தான் அதுபற்றி தெரியும் என்று சொன்னதும், 15-4-2013 அன்று டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தி.மு.க. அரசு வலியுறுத்தித்தான் சில ஷரத்துகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன என்று கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானதில்லையா என்று கேட்டுள்ளார். இந்தக் கேள்வியை ஜெயலலிதா இப்போது புதிதாகக் கேட்கவில்லை. பல முறை ஜெயலலிதா கேட்டு, ஒவ்வொரு முறையும் நான் அதற்கு விளக்கமாகப் பதிலளித்திருக்கிறேன்.

சான்றோடு சொல்ல வேண்டுமேயானால், 3-5-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசும்போதே, “1974-ல் கருணாநிதி கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன், பதறிப் போனேன் என்கிறார். ஆனால், 2013-ல் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவர் சொல்லித்தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார். இது என்ன பித்தலாட்டம்?” என்று பேரவையில் பேசி, அது அவை நடவடிக்கைக் குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதாவின் இந்தக் கேள்விக்கு 5-5-2013 அன்றே 'வாய் நீளம் தோற்றுப் போகும்; வாய்மையே வெல்லும்' என்ற தலைப்பில் விளக்கமாகப் பதில் எழுதி, அது சிறு கையேடாகவும் வெளிவந்தது.

கச்சத் தீவு பற்றிய வழக்கில் மத்திய அரசு, கச்சத் தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது, இந்திய எல்லைக் கோட்டுக்குள் இருந்த கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது என்று வாக்குமூலம் தாக்கல் செய்த போதுகூட, அதைக் கண்டித்து 1-9-2013 அன்று நான் அறிக்கை விடுத்தேன்.

ஆனால், இதே ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு, உயர் நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு வழக்கறிஞர் பி.ஸ்டாலின் தொடுத்த பொது நல வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில் என்ன சொன்னார்கள் தெரியுமா? '1974-ம் ஆண்டிலும், 1976-ம் ஆண்டிலும் இலங்கை அரசுடன் கச்சத் தீவு சம்பந்தமாகச் செய்து கொண்ட ஒப்பந்தம், தமிழக அரசோடு கலந்தாலோசனை செய்யாமலும், பாக். நீரிணையில் பல்லாண்டு காலமாக மீன் பிடிப்பதன் மூலம் வாழ்வாதாரத்தைத் தேடி வரும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமலும் செய்யப்பட்ட ஒன்றாகும் என்று திரும்பத் திரும்ப தமிழக அரசு சுட்டிக் காட்டி வருகிறது' (The Government of Tamil Nadu has also repeatedly made it clear that the Execution of 1974 and 1976 Agreements with Sri Lanka regarding the Katcha Theevu was signed without consulting Tamil Nadu and without due consideration to the welfare of thousands of Fishermen family who depend on fishing in the Palk-bay area for centuries together) என்று தமிழக அரசே நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது.

எனவே, ஜெயலலிதா தமிழக மீனவர்கள் தினமும் அனுபவித்து வரும் வாழ்வாதாரப் பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தோடு, திட்டமிட்டு இந்தக் கச்சத் தீவுப் பிரச்னையில் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரே தவிர வேறல்ல. நானும் ஒவ்வொரு முறை அவர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகின்ற நேரத்திலும் விளக்கம் அளித்திருக்கிறேன். ஆனால், அந்த விளக்கம் எதையும் அவர் படிப்பதில்லையோ அல்லது படித்தும் புரிந்து கொள்ளவில்லையோ அல்லது புரிந்தும் வேண்டுமென்றே அரசியல் நோக்கத்திற்காக இப்படிப் பேசுகிறாரோ என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது.

என்னைக் கேள்வி கேட்பதற்கு முன்பு, 22-ம் தேதிய எனது அறிக்கையில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டாமா? அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு அல்லவா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க முன்வந்திருக்க வேண்டும்.

கச்சத் தீவை நான் தாரை வார்த்து விட்டதாகச் சொல்லும் ஜெயலலிதா, 'கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை' என்று கூறியது உண்டா இல்லையா? 'கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்' என்று பிரதமர் நரசிம்மராவுக்கு ஜெயலலிதா எழுதியது உண்டா இல்லையா? 

பட்டுக்கோட்டைக்கு வழி எது என்று கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுகிறார் ஜெயலலிதா! எங்கள் கட்சிக்கு தலைவர் யார், எங்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்பதை எங்கள் கட்சியிலே உள்ள உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அது புரியவில்லை என்றால், அவர் நல்ல மருத்துவர்களை உடனடியாக நாடுவதே நல்லது!'' எனக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close