Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேலம் கண் அறுவை சிகிச்சை விவகாரம்: முன்கூட்டியே தெரிந்தும் சட்டசபை நடந்ததால் அமுக்கப்பட்டதா...?

 

கண்களை இழந்து விட்டால் வாழ்க்கையே இருண்டு விடும். அதுவும் நேற்று வரை இந்த உலகத்தை ரசித்து பார்த்தவர்கள், இன்று பார்க்க முடியவில்லை என்கின்றபோது ஒரு கணம் உயிர் துடிப்பே நின்று விடும். அப்படி ஒரு சம்பவம்தான் மேட்டூரில் நடந்துள்ளது. 
 
சேலம் மாவட்டம், மேட்டூரை சுற்றியுள்ள ஜலகண்டாபுரம், வனவாசி, ஓமலூர், மேச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள முதியவர்கள் கண்களில் புரை எடுப்பதற்காகவும், கண் பார்வை நன்றாக தெரிவதற்காகவும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 14,15 மற்றும் 16 ஆகிய 3 நாட்களில், 23 பேர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்கள். இதில் 18 பேருக்கு மீண்டும் கண் பார்வை வராமல் கண்கள் செயலிழந்து போய்விட்டன. இந்த தகவல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கு...

சிகிச்சையில் கண்களை இழந்துள்ள மேரி, ‘‘எனக்கு வயசு 48 ஆகுது. என் கணவர் பெயர் ஆறுமுகம். எங்களுக்கு ஒரே பையன். அவனுக்கும் திருமணம் ஆயிடுச்சு. அவங்க தனிக்குடித்தனம் போயிட்டாங்க. என் கணவருக்கு கடந்த 3 வருஷமா உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கிறார். அவரு இன்னைக்கோ, நாளைக்கோன்னு இருக்கிறார். நான்தான் கொத்து வேலைக்கு சித்தாளாக போய் வேலை செய்து கிடைக்கிற காசுல குடும்பத்தை ஓட்டிட்டு இருந்தேன்.

ஒரு மாதமாக சாயந்திரம் கண் வலித்தது. கண் பார்வையெல்லாம் நல்லாதான் இருந்தது. சரி மருந்து ஊத்திட்டு வரலாமுன்னுதான் ஆஸ்பத்திரி போனேன். அங்கு, 'கண் ஆப்ரேஷன் பண்ணிக்குங்க... கண் நல்லா வெளிச்சமா தெரியுமு'ன்னு சொன்னாங்க. அதைக் கேட்டுதான் 15ம் தேதி மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் ஆப்ரேஷன் செய்து கொண்டேன். என் கூட 8 பேர் ஆப்ரேஷன் செய்து கொண்டார்கள். அனைவருக்கும் சுபா டாக்டர்தான் ஆப்ரேஷன் செஞ்சாங்க.

அடுத்த நாள் மதியம் வீட்டுக்கு போங்கன்னு சொன்னாங்க. கண் வலி தாங்க முடியவில்லை. கண்ணை அவிழ்த்து பார்க்கும்போது நான் வலி தாங்க முடியாமல் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அன்னைக்கு ஆஸ்பத்திரியிலேயே இருக்க சொல்லிட்டாங்க. வெள்ளிக்கிழமை வீட்டுக்கு போயிட்டு, திங்கட்கிழமை வரச்சொன்னாங்க. ஒவ்வொரு நாளும் கண் வலி தாங்க முடியவில்லை. கண் பார்வையும் தெரியவில்லை. இருட்டா போயிடுச்சு. கத்திக் கதறியதைப் பார்த்து என் மருமகள் வந்து உதவி செய்தாள். 

ஒரு வாரமாக ஆஸ்பத்திரியும், வீடுமாக அலைந்து கொண்டிருந்தேன். இப்பதான் சேலம் அரவிந்த் மருத்துவமனைக்கு கொண்டுட்டு வந்திருக்காங்க. என்ன ஆகுமுன்னு தெரியலை. ஆப்ரேஷனுக்கு முன்னாடி பார்த்ததுதான். இன்றுவரை கண் வெளிச்சம் தெரியில்லை. தற்கொலை பண்ணிட்டு செத்து போயிடலாம் போல இருக்கு. மீண்டும் வெளிச்சம் வருமா வராதா தெரியவில்லையே. நான் என்னத்த  பிழைப்பேன்.’’ என்று தலை தலையாக அடித்துக் கொண்டு அழுதார்.

அநாதையான எனக்கு ஆதரவாக இருந்தது கண்கள்:

மேரியைவிட கொடுமை சின்னம்மாவுக்கு. ‘‘நான் மேட்டூர் குமரன் நகரில் இருக்கிறேன். எனக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை. நான் அநாதையாக ஒரு குடிசை வீட்டில் இருக்கிறேன். தினமும் கொத்து வேலைக்கு போயி அதில் கிடைக்கும் பணத்தில்தான் வயிற்றை கழுவிட்டு இருக்கிறேன். எனக்கு வயசு 58 ஆகுது. கண் வெளிச்சம் மங்கலாக தெரிந்தது.

அதனால் கண்ணில் புரை விழுந்து விட்டதுன்னு புரை எடுக்கப் போனேன். முதலில் வலது கண்ணுல புரை எடுக்கலாமுன்னு சொன்னாங்க. 14ம் தேதி ஆப்ரேஷன் செய்து கொண்டு, 15ம் தேதி வீட்டுக்கு வந்துட்டேன். வலி தாங்க முடியவில்லை. அநாதையான எனக்கு ஆதரவாக இருந்தது இந்த இரண்டு கண்கள். இப்ப இந்த கண்ணும் தெரியவில்லை என்றால் வாழ்வதை விட சாவதே மேல்’’ என்று விம்பினார்.


உரிய மேல்சிகிச்சை அளிக்கவில்லை...

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ‘‘இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருகே வயதான கூலி வேலை செய்யும் ஏழைகள். பெரும்பாலும் மேட்டூர் மற்றும் மேட்டூரைச் சுற்றியுள்ள ஜலகண்டாபுரம், வனவாசி, ஓமலூர், எடப்பாடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேட்டூர் அரசு மருத்துவமனையில் 14ம் தேதி 7 பேருக்கும், 15ம் தேதி 8 பேருக்கும், 16ம் தேதி 8 பேருக்கும் என 3 நாட்களில் மொத்தம் 23 பேருக்கு மேட்டூர் அரசு மருத்துவமனையின் கண் மருத்துவர் சுபா என்பவர் ஆப்ரேஷன் செய்திருக்கிறார். இதில் 18 பேருக்கு கண்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஐந்தாறு பேருக்கு கண் அழுகியும் போயிருக்கிறது.

கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்னை நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. ஆப்ரேஷன் செய்து கொண்ட பிறகு கண் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மேல் சிகிச்சை செய்யாமல் அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியிலேயே கண் டாக்டர் சுபாவும், அதிகாரிகளும் செயல்பட்டிருக்கிறார்கள். இத்தகவல் 22ம் தேதியே மாநில சுகாதாரத் துறை செயலருக்கு தெரிந்தும், சட்டசபை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இந்நேரத்தில் இந்த பிரச்னை வெளியில் வந்தால்  எதிர்கட்சியான தி.மு.க., பிரச்னை செய்வார்கள் என்பதால் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார்கள். நேற்று சட்டசபை முடிந்த பிறகு இந்த பிரச்னை வெளியே வந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய வசதி இல்லாமல் வைத்திருக்கும் இந்த அரசாங்கமும், டாக்டரின் அலட்சியமும்தான் காரணம்.

40 மேற்பட்டவர்கள் பார்வை இழந்துள்ளனர்:

மேட்டூர் அரசு மருத்துவமனையில் உள்ள கண் டாக்டர் சுபா ஆப்ரேஷன் செய்த 14,15,16 ஆகிய மூன்று நாட்களில் ஆப்ரேஷன் செய்தவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர் கடந்த 3 மாதங்களாக செய்த பல ஆப்ரேஷனில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்கள் தெரியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள் என்பதால் இது வெளியில் தெரியவில்லை’’ என்றார்கள்.  

ஆலோசனைக் கூட்டம்:

இதனிடையே நேற்று மாலை 7 மணி முதல் இரவு 9:00 மணி வரை சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில், மாவட்ட கலெக்டர் சம்பத், பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மாநில திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட திட்ட இயக்குநர் சோலையம்மா தேவி, உதவி கலெக்டர் விஜய்பாபு, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநர் இன்பசேகரன் (பொறுப்பு), துணை இயக்குநர் பூங்கொடி, மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் மற்றும் சுகாதரத்துறையை சேர்ந்த அதிகாரிகள், மருத்துவர்கள் இணைந்து தீவிர ஆலோசனை செய்தார்கள்.

அம்மா உத்தரவின் பேரில் போர்க்கால நடவடிக்கை: 

ஆலோசனை கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் சம்பத், ‘‘மேட்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 14,15,16 ஆகிய 3 நாட்களில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 7 பேருக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் நன்றாக இருக்கிறார்கள். 16 பேருக்கு சற்று கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. அதை உடனே நிவர்த்தி செய்வதற்காக தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் உயர்மட்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேற்கொண்டு நீங்கள் மாநில திட்ட இயக்குநர் ரேவதியிடம் கேட்டுக் கொள்ளலாம்’’ என்றார்.

இழந்த பார்வை மீண்டும் வர வாய்ப்பு உண்டு:

பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மாநில திட்ட இயக்குநர் ரேவதி, ‘‘16 பேர் கண்களில் ஏதாவது நோய் தொற்று அல்லது அலர்ஜி இருக்கிறதா என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எப்படி நோய் தொற்று வந்தது என்பதை தற்போது சொல்ல முடியாது. ஓரிரு நாட்கள் விசாரணை செய்த பிறகுதான் தெரியவரும். அதற்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கண் பார்வை வர எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டு இருக்கிறோம். தற்காலிகமாக மேட்டூரில் கண் அறுவை சிகிச்சை செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறோம்.


சென்னையில் இருந்து நாளை உயர்மட்ட மருத்துவக் குழுவினர் வர இருக்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய இருக்கிறார்கள். இழந்த பார்வை மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்த மருத்துவர் சுபாவும் கைத்தேர்ந்த மருத்துவர்தான். கடந்த ஆண்டில் மட்டும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 5201 கண் அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம். அதில் 961 கண் அறுவை சிகிச்சைகள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளன. இது தவிர தொண்டு நிறுவனங்கள் நடத்திய முகாம்கள் மூலமாக 10,250 பேருக்கும், தனியார் மருத்துவமனையின் மூலம் 9722 பேருக்கும் கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கண் அறுவை சிகிச்சைகளும் சிறந்த முறையில் செய்யப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாகத்தான் இருக்கிறார்கள். தற்போதுதான் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

மருத்துவர்கள் சொல்லும் காரணங்கள்:

இதுப்பற்றி சில மருத்துவர்களிடம் பேசியபோது, ‘‘1. ஆப்ரேஷன் செய்வதற்கான கருவிகளை சுத்தமாக வைக்காமல் இருப்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. 2. ஆப்ரேஷன் செய்யும் குழாய் மூலமாக மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அதில் ஏதாவது கிருமி தொற்று இருந்தால் கூட கண்கள் பாதிக்கும். 3. காலாவதியான சொட்டு மருந்துகளால் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது’’ என்றார்கள். 

இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசு!

-வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ