Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டாலினை உலுக்கிய சுவாதி பெற்றோரின் கதறல்!

சுவாதியின் தந்தை, சந்தான கோபாலகிருஷ்ணன் என்னிடம் ஒரு வேண்டுகோள்விடுத்தார். அது தனது மனதை உலுக்கிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி பட்டப்பகலில் இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, வாலிபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். தப்பியோடிய கொலையாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சூளைமேட்டிலுள்ள சுவாதியின் வீட்டுக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று சென்று அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என சட்டசபையில் முதலமைச்சர் கூறியது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. சென்னை கொலை நகராக மாறியுள்ளது. சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாதியின் கொலை தமிழக போலீசுக்கு விடுக்கப்பட்ட சவால்.

மேலும், சுவாதியின் தந்தை, சந்தான கோபாலகிருஷ்ணன் தன்னிடம் ஒரு வேண்டுகோள்விடுத்தார். அது தனது மனதை உலுக்கிவிட்டது. ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும், இனிமேல் இப்படி யாருக்கும் நடக்க கூடாது என்பதை என்னிடம் வலியுறுத்தி கூறினார். அவரது அந்த பெருந்தன்மை எனது மனதை உலுக்கி விட்டது" என்றார்.

அண்மையில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களை பட்டியலிட்ட ஸ்டாலின், பெண்கள் பாதுகாப்பு குறித்த 13 அம்ச திட்டம் செயல்பாட்டில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். வீதியிலே செல்லும் பெண்கள் மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ