Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடரும் ஆணவக்கொலைகள்... பீதியில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பேத்தி

திண்டுக்கல்: ஆணவக் கொலையில் இருந்து தங்களைக் காப்பாற்றக்கோரி திண்டுக்கல் எஸ்பியிடம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சீனிவேலின் பேத்தி தன் கணவருடன் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தனா. சேலத்தில் சித்த மருத்துவம் பயின்று வருகிறார். இவர் மறைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சீனிவேலின் மகன் வயிற்றுப் பேத்தி. கீர்த்தனா சேலத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. செந்தில்குமாரும் கீர்த்தனாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அந்தஸ்து காரணமாக கீர்த்தனாவின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பெற்றோரின் எதிர்ப்புக்கு அஞ்சி கடந்த 24 ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட காதலர்கள் இருவரும், மதுரை காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சட்டப்படி இருவரும் திருமண வயதடைந்தவர்கள் என்பதால் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கீர்த்தனா, செந்தில்குமாரின் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.  அப்போது அந்த வீட்டிற்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 30 க்கும் மேற்பட்ட ரவுடிகள்,  பொருட்களை சேதப்படுத்தி, தம்பதியருக்கு கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் பீதியடைந்த காதல் ஜோடி திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். எஸ்.பி  சரவணனை சந்தித்து தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் பாதுகாப்பு தரவேண்டும் என்று கேட்டு மனு கொடுத்தனர்.

மனு கொடுத்தபின் பத்திரிகையாளர்களிடம் பேசிய கீர்த்தனா, தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தன்னுடைய பெற்றோரும், போலீசாருமே பொறுப்பு என தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆணவக்கொலைகள் பரவலாக அரங்கேறிவரும் நிலையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் பேத்தியே தங்கள் பெற்றோர் ஆணவக்கொலை செய்வதாக மிரட்டியதாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ