Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' போயஸ் கார்டனில் விஷேசங்க...!' -களைகட்டும் கல்யாண வைபவம்

புதிய மணமகளின் வருகைக்காக காத்துக் கிடக்கிறது முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லம். இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனின் திருமண வேலைகள் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. ' ஆகஸ்ட் இறுதிக்குள் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது' என்கின்றனர் கார்டன் ஊழியர்கள்.

அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள் மத்தியில் உலவும் பவர்ஃபுல் பெயர்களில் மிக முக்கியமானது விவேக் ஜெயராமனின் பெயர். முதல்வர் ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக்கொண்டிருந்த சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஒருநாள் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டார். ஜெயராமனின் மனைவி இளவரசி மற்றும் அவரது மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, விவேக் என மூன்று குழந்தைகளோடு தனித்து விடப்பட்டார். ஜெயராமனின் மரணம் முதல்வர் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. இதன்பின்னர் இளவரசியை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டார் முதல்வர். கைக்குழந்தையாக இருந்தபோதே அப்பாவை இழந்ததால், விவேக் மீது மிகுந்த பிரியத்தோடு இருந்தார் ஜெயலலிதா. அவர் என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு செல்லப்பிள்ளையாகவே வளர்த்தார். ஆனால், ' தான் அதிகார மையத்தில் இருக்கிறோம்' என எந்த இடத்திலும் விவேக் காட்டிக்கொண்டது இல்லை. அதுவே அவருடைய மிகப் பெரிய பிளஸ்ஸாக மாறிப் போனது.

கோவையில் உள்ள சின்மயா மிஷன் சர்வதேசப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தார். இதே பள்ளியில்தான் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்தும் படித்தார். இதன்பின்பு, 2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்குவாரி பிசினஸ் பள்ளியில் இளங்கலை பிசினஸ் படிப்பை நிறைவு செய்தார். அதன்பின்னர், புனே, சிம்பயாஸிஸ் கல்லூரியில் 2013-ம் ஆண்டு எம்.பி.ஏ மார்க்கெட்டிங் படிப்பை முடித்தார். அப்போதே ஐ.டி.சி நிறுவனத்தில் இன்டன்ஷிப் அடிப்படையில் வேலை செய்தார். அதன்பின்னர், பெங்களூருவில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் மண்டல மார்க்கெட்டிங் ஒருங்கிணைப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

பெங்களூருவில் வேலை பார்த்த காலத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. அப்போது  உணவு, மருந்து, ஆடைகள் போன்றவற்றைக் கொடுக்க, நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட, விவேக் ஜெயராமனின் நினைவு முதல்வருக்கு வந்தது. சிறைக்குள் இருந்த 21 நாட்களும் உணவு, மருந்து என சர்வசாதாரணமாக வலம் வந்தார் விவேக். இதன்பின்னரும், கார்டனுக்குள் நுழையாமல் சாம்சங் நிறுவனத்தின் வேலையிலேயே தொடர்ந்தார். பிறகு ஒருநாள், முதல்வரின் ஆசீர்வாதத்தோடு கார்டனுக்குள் நுழைந்தார். அப்போதே அவருக்கு ஜாஸ் சினிமாஸ் கம்பெனியின் சி.ஈ.ஓ பொறுப்பை வழங்கினார் முதல்வர்.

இதையடுத்து, " சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னரே விவேக்கின் திருமணம் பற்றிய பேச்சு எழுந்துவிட்டது. 'விரைவில் விவேக் திருமணத்தை நடத்த வேண்டும்' என முதல்வர் திட்டமிட்டிருந்தார். தற்போது அதற்கான நேரம் கைகூடி வந்திருக்கிறது" என உற்சாகத்தோடு பேசுகின்றனர் கார்டன் ஊழியர்கள். அவர்கள் நம்மிடம், " பெண் பார்க்கும் படலத்தை முழுக்க திவாகரனே முன்னின்று செய்தார். ஏராளமான ஜாதகங்கள் தேடி வந்தன. இறுதியாக, மன்னார்குடியைச் சேர்ந்த பர்னிச்சர் தொழிலில் கொடிகட்டும் குடும்பத்தில் பெண் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஜாதகம், விவேக்கின் ஜாதகத்தோடு ரொம்பவே பொருந்திப் போனது. இதனால், உற்சாகமான இளவரசி, ' இந்த சம்பந்தத்தை உடனே பேசி முடியுங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். பெண்ணின் குடும்பம் தற்போது முகப்பேரில் வசித்து வசித்து வருகிறது.

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் மணப்பெண். மூன்று நாட்களுக்கு முன்னர் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள திவாகரன் வீட்டில் வைத்து சிம்பிளாக நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துவிட்டனர். ' ஆகஸ்ட் மாதத்திற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும்' என விவேக்கின் ஜாதகத்தைக் கணித்த ஜோசியர்கள் குறிப்பிட்டுள்ளனர். நிச்சயதார்த்த விழாவில், சசிகலா, திவாகரன், இளவரசி, இளவரசியின் மகள்கள், திவாகரன் மகன் ஜெயானந்த் என வெகு சிலரே கலந்து கொண்டனர். எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் திருமணத்தை நடத்துவது என முடிவு செய்துள்ளனர். இந்தத் திருமணத்தை முதல்வர் முன்னின்று நடத்தி வைக்க இருக்கிறார். 'எந்த தேதியில் திருமணம்? மண்டபம் எது?' என்பது பற்றி முடிவு செய்யப்பட்டுவிட்டது. இவ்வளவு நாட்கள் பிரிந்திருந்த சொந்தங்கள் விவேக் திருமணம் மூலம் இணைவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார் திவாகரன் மகன் ஜெயானந்த். அவரால்தான் மன்னார்குடி சொந்தங்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது" என்றார் விரிவாக.

இளவரசியின் புதிய இளவரசிக்காக காத்திருக்கிறது போயஸ் தோட்டம். ஆகஸ்ட் மாத திருவிழாவிற்காகக் காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள்.

ஆ.விஜயானந்த்


 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close