Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட்... முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தன!

சென்னை: தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் மாதம் 29-ம் தேதி வருகிறது. தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் தங்கி பணிபுரிபவர்கள் மற்றும் சென்னையில் குடியேறியவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனாலும், பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால், ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. ரயிலில் முன்பதிவு செய்வதற்கும் கடும் போட்டியும் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, ஊருக்கு புறப்படும் நாளுக்கு 120 நாட்கள் (4 மாதம்) முன்னதாகவே முன்பதிவு செய்யும் வசதியை தற்போது ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, தீபாவளி அக்டோபர் 29-ம் தேதி சனிக்கிழமை வருவதால், விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளவர்கள் அதற்கு இரண்டு நாள் முன்னதாக, அதாவது அக்டோபர் .27-ம் தேதி சொந்த ஊருக்கு தீபாவளிக்காக புறப்பட நினைப்பவர்கள் இன்று (29.06.16) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருந்ததது.

இதையடுத்து, இன்று காலை 8 மணிக்கு முன் பதிவு துவங்கியது. அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட் முன் பதிவு செய்தனர். முன் பதிவு துவங்கிய 5 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.

பெரும்பான்மையான முன்பதிவு, இணையதளங்கள் மூலம் நடந்தாலும், இணையதள வசதி இல்லாத பயணிகள் காலை முதலே முன்பதிவு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி சென்றாலும், பலர் டிக்கெட் கிடைக்காமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ