Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் 8 கேமராக்கள்! -ரூ.62 கோடியில் அதிரடி பிளான்

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு நிர்பயா நிதியில் இருந்து 62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. " பொதுமக்களின் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்புப் படையில் சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன" என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற ஐ.டி நிறுவன ஊழியர் படுகொலைக்குப் பிறகு, ரயில் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி வலுவாக எழுந்துள்ளது. அதிலும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் ரயில்களால், ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகின்றன. ' அதற்கு ஏற்ற வகையில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே நிர்வாகம் கவலைப்படுவதில்லை. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பயணிகளின் உயிரோடு விளையாடுகின்றனர்' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலைய படுகொலைக்குப் பிறகு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறது தென்னக ரயில்வே. " நிர்பயா நிதியில் இருந்து 62 கோடி ரூபாய் தமிழக ரயில் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை கோட்டத்திற்கு மட்டும் 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உள்பட சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 80 ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரத்திற்கு எட்டு கேமராக்கள் வரையில் பொருத்தப்பட உள்ளன" என்கிறார் ரயில்வே அதிகாரி ஒருவர்.

மேலும் அவர் நம்மிடம், " ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில் நிலைய காவல்நிலையங்களில் போதுமான எண்ணிக்கையில் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி இருக்கிறோம். இப்போது வரையில் ஆயிரம் போலீஸார்தான் சென்னை கோட்டத்திற்குட்பட்டு இயங்குகின்றனர். இவர்களால் போதுமான அளவுக்குப் பாதுகாப்பு பணியில் கவனம் செலுத்த முடிவதில்லை. நுங்கம்பாக்கம் சம்பவத்தால் ரயில்வே அமைச்சகம் மிகுந்த கவலையில் ஆழ்ந்துவிட்டது.  இதையடுத்து, கண்காணிப்பை பலப்படுத்துவது குறித்த ஆய்வு அறிக்கையை எங்களிடம் கேட்டனர். ரயில்நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்களைப் பட்டியலிட்டிருக்கிறோம்.

அதில், பேசின் பிரிட்ஜ், எழும்பூர், சென்ட்ரல், மாம்பலம், தாம்பரம், மயிலாப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொருத்துவதற்காக 140-க்கும் அதிகமான சி.சி.டி.வி கேமராக்கள் தேவைப்படுகிறது எனத் தெரிவித்திருந்தோம். இதையடுத்து, உடனடியாக 62 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர். சென்னை கோட்டத்திற்குட்பட்ட 80 ரயில்வே ஸ்டேசன்கள் மற்றும் ஆம்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும் வேலைகள் தொடங்கப்பட உள்ளன. இதுதவிர, குற்றச் செயல்கள் அதிகம் நடக்கும் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை மற்றும் ரயில் நிற்காத ரயில் நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்த இருக்கிறோம்" என்றார் விரிவாக.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவர், " ரயில் நிலையத்தைக் கண்காணிப்பதற்கு ஏற்ற வகையில் போலீஸார் இல்லை. வரும் நாட்களில் சேத்துப்பட்டு முதல் தாம்பரம் சானிடோரியம் வரையிலான ரயில் நிலையங்களில் அதிரடி ஆய்வு நடத்த ஆர்.பி.எஃப் இன்ஸ்பெக்டர் தலைமையில் நான்கு போலீஸார் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எப்போது வேண்டுமானாலும், ரயில் நிலையங்களில் ஆய்வு செய்வார்கள். இதுதவிர, குற்றச் சம்பவம் நடக்கும் இடங்களுக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும் வகையில், போதிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். தன்னார்வ குழுக்களை ஒருங்கிணைத்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டால் குற்றச் செயல்களைப் பெருமளவு தடுக்க முடியும்" என்கிறார் ஆதங்கத்தோடு.

ஒரு மரணத்திற்குப் பிறகே ரயில்வே நிர்வாகம் விழித்தெழுகிறது. நிர்பயா நிதியைப் பயன்படுத்தி டிசம்பர் இறுதிக்குள் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும் பணியை நிறைவு செய்ய இருக்கிறார்கள். இனியாவது பயணிகளின் பாதுகாப்பு குறித்து அக்கறையோடு செயல்பட்டால் சரிதான்...!

ஆ.விஜயானந்த்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ