Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதி படுகொலை... காவல்துறைக்கு கருணாநிதி கண்டனம்!

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காவல்துறைக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் பட்டப்பகலில் நடைபெற்று வரும் படுகொலைகளில் ஒன்றாக, 24.6.2016 அன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண், பொதுமக்கள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கழகத்தின் சார்பில், பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின் சுவாதியின் இல்லத்திற்கே சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு வந்திருக்கிறார். பொது இடத்தில் நடைபெற்ற இந்த படுகொலை குறித்து தமிழகம் முழுவதும் பல கண்டனங்கள் காவல் துறைக்கு எதிராக வந்துள்ளன.

சென்னையில் சுவாதி கொலை செய்யப்பட்டதைப் போல, சேலத்தில் வினுப்பிரியா என்ற 22 வயது ஆசிரியையின் படத்தை யாரோ மாற்றி, ஆபாசமாக வெளியிட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் பெற்றோர் ஆட்சியரைச் சந்தித்து கதறியிருக்கிறார்கள்.

நாளேடுகள், கிழமை இதழ்கள் எல்லாம் தமிழகத்தில் பட்டப்பகலில் நடைபெறும் இப்படிப்பட்ட வன்முறைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன. இப்படிப்பட்ட சம்பவங்களின் காரணமாக மறைந்தவர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, காவல் துறையினர் ஆட்சியிலே இருப்போருக்குப் பாதுகாப்புப் பணியிலே ஈடுபடுவதும், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் மட்டுமே தங்கள் பணி என்று நினைக்காமல், சாதாரணப் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற பணியிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அப்படி ஈடுபடாமல் இருந்தமைக்காக என்னுடைய கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ