Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' வினுப்பிரியா பற்றி அவதூறு பரப்புகிறது சேலம் போலீஸ்!' -கொதிக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள்

சேலம், வினுப்பிரியா தற்கொலை வழக்கின் குற்றவாளியைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. அதேநேரத்தில், ' வினுப்பிரியா குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் வேலையில் காவல்துறையில் உள்ள சிலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயல்கின்றனர்' எனக் கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி அண்ணாதுரையின் மகள் வினுப்பிரியாவின் புகைப்படத்தை மார்பிஃங் செய்து, சிலர் ஃபேஸ்புக்கில் உலவவிட்டுள்ளனர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் வினுப்பிரியா. மகளின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அண்ணாதுரை கொடுத்த புகாரை போலீஸார் கிடப்பில் போட்டுவிட்டனர்.

கூடவே, இரண்டாயிரம் பணத்தையும் செல்போனையும் போலீஸார் லஞ்சமாக வாங்கியிருக்கும் தகவல் வெளியானது. இதன்பிறகும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால், வினுப்பிரியாவின் பெற்றோர் சடலத்தை வாங்காமல் போராட்டத்தில் இறங்கினார். இதையடுத்தே, காவல்துறை உயர் அதிகாரிகள் களமிறங்கினர். இந்த சம்பவத்தில் அண்ணாதுரையிடம் லஞ்சம் வாங்கிய ஏட்டு சுரேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி சுரேஷ் என்பரை இன்று மாலை ஐந்து மணிக்கு சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இந்நிலையில், வினுப்பிரியா மரணத்தில் போலீஸாரின் செயல்பாடு பற்றி நம்மிடம் பேசிய மனித உரிமை ஆர்வலர் முகிலன், " ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படியொரு புகைப்படம் வலம் வருகிறது என்ற தகவல் கிடைத்ததும், எஸ்.பி அமித்குமார் சிங்கிடம்தான் வினுப்பிரியாவின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். அவர் அந்தப் புகாரை டி.எஸ்.பிக்கு அனுப்பிவிட்டார். டி.எஸ்.பியோ, சைபர் கிரைம் துறைக்கு புகாரை அனுப்பிவிட்டார். சைபர் கிரைம் போலீஸார் நினைத்திருந்தால், அன்றைக்கே அந்த ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கியிருக்க முடியும். வேண்டுமென்றே அண்ணாதுரையை அலைக்கழித்துள்ளனர்.

ஏழை நெசவாளியான அவரிடம் இருந்து முடிந்தவரைக்கும் பணம் பறிக்கும் வேலையில் சைபர் கிரைம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். வினுப்பிரியா இறந்த பிறகும் உடனடியாக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டுநாள் தீவிர போராட்டத்திற்குப் பிறகே நடவடிக்கை எடுக்க முன்வந்தார்கள். அப்படி செய்யாமல் இருந்திருந்தால், இந்த வழக்கை ஒரு பொருட்டாகவே கருதியிருக்க மாட்டார்கள். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நிறுவனமாகக் காவல்துறை இருக்கிறது.

முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் காவல்துறையில், இப்படியொரு செயல் நடந்திருப்பது பற்றி எந்தப் பதிலும் சொல்லாமல் முதல்வரும் மௌனமாக இருக்கிறார். இப்போது வரையில் ஒரு பெண்ணின் இறப்புக்கு முதல்வர் எந்த இரங்கல் செய்தியும் தெரிவிக்கவில்லை. இதைவிடக் கொடுமை, இன்றைக்கு காலையில் இருந்தே, வினுப்பிரியாவின் செயல்பாடுகள் பற்றி அவதூறான தகவல்களை காவல்துறையில் உள்ள சிலர் பரப்புகின்றனர்.

அந்தப் பெண் பயன்படுத்திய செல்போனில் இருந்து, 'இவருக்குப் பேசினார், அவருக்குப் பேசினார்' என வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத வகையில் பொய்ப் பிரசாரம் நடந்து வருகிறது. இதன்மூலம், தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்சப் புகாரில் இருந்து தற்காத்துக் கொள்ள முயல்கிறது சேலம் காவல்துறை. இனியும், இதுபோன்ற அவதூறுகளைப் பரப்பும் பொறுப்பற்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபடக் கூடாது. இந்த வழக்கில் போதுமான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், மாநிலம் முழுவதும் உள்ள சமூக இயக்கங்களை ஒருங்கிணைத்து, அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்துவோம்" என்றார் கொந்தளிப்போடு.

-ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ