Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சுவாதிக்காக இதை மட்டும் செய்யுங்கள் ப்ளீஸ்..!'- வேண்டுகோள் வைக்கும் சகோதரி

சுவாதியைப் பற்றி யூகத்தின் படி பலரும் பலவிதமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுவது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவள் பெயரில் சமூக வலைத்தளங்களில் யாரும் எந்தவித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என்று சுவாதியின் சகோதரி நித்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் சகோதரி நித்யா இணையதளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "எனது தங்கை சுவாதி பற்றி யூகத்தின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகிறது.அவளின் மூத்த சகோதரி என்ற முறையில் சுவாதி பற்றி சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அவள் மிகவும் குழந்தைத்தனமான குணம் கொண்டவள். மென்மையாகப் பேசும் சுபாவம் கொண்டவள். கடவுளுக்கு பயந்து நடந்தவள். சுந்தரகாண்டம், பஞ்சாங்கம்  படிக்காமல் மற்றும் அட்சதை தூவிக் கொள்ளாமல் அவள் ஒரு நாள் கூட வீட்டை விட்டு வெளியில், காலடி எடுத்து வைத்ததில்லை. தினமும் ரயிலில் வேலைக்கு செல்லும் போது விஷ்ணு சகஸ்ரநாமம் உச்சரித்தபடியேதான் செல்வாள். அவள் வேலைக்குச்  செல்லும் வழியில் சிங்கபெருமாள் கோயில் இருப்பதால் தவறாமல் நரசிம்மர் ஆலயத்துக்குச்  செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தாள். அது போல திருமளிகையில் உள்ள ஆச்சாரியர் முதலியாண்டான் சுவாமிகள் ஆலயத்துக்கும் அவள் செல்வதுண்டு. மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது சூளைமேட்டில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலுக்குச்  செல்லாமல் அவள் வருவதே கிடையாது. அந்த அளவுக்கு அவள் தெய்வ பக்தி நிறைந்தவள்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்த நாங்கள், எங்களின் பாரம்பரிய வழிபாடுகளில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். அடிக்கடி யாத்திரை சென்று நிறைய கோயில்களில் வழிபாடு செய்துள்ளோம். கடைசியாக நான் என் தங்கையுடன் மசினக்குடியில் உள்ள ஆலயத்திற்கு சென்று இருந்தோம். அங்குள்ள இயற்கை அழகை கண்டு என் தங்கை சுவாதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவள் இயற்கையை மிகவும் விரும்புவாள். ஓரிரு தடவை மலையேற்றத்துக்கும் அவள் சென்று வந்துள்ளாள். சுவாதிக்கு என் குடும்பத் தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் அதிக பாசமுண்டு.

அவளுக்கு நண்பர்கள் வட்டாரம் என்று தனியே கிடையாது. சில நட்புகளே உண்டு. தேவையில்லாமல் அவள் எந்தப் பொழுது போக்குகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டாள். இத்தகைய பண்புடன் வளர்ந்த அவள் பற்றி, யூகத்தின் படி பலரும் பலவிதமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுவது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவள் பெயரில் சமூக வலைத்தளங்களில் யாரும் எந்தவித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் யூகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் இந்த வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் சுவாதி பற்றி கருத்துக்களை வெளியிடுவதற்கு பதில் அவள் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாற ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். எங்கள் அனைவரின் வேண்டுகோளுமே, இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான். துரதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்ட எனது தங்கையின் குணத்தையும், இமேஜையும் பாதிக்கும் வகையில், நாம் யாரும் தேவையில்லாமல் செயல்பட வேண்டாம். அதுபோல 'ஸ்பிரிட் ஆப் சென்னை' மறைய நாம் அனுமதிக்க கூடாது. என்ன காரணத்தினாலோ சுவாதியை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. அவற்றை இனி மறந்து விடுவோம்.

இனியாவது இத்தகைய கொடூரம் நடக்கும் போது அதை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் முன்வர வேண்டும் என்று ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்வோம். மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டுமல்ல, பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்கலாம். சுவாதியின் கொலை சம்பவம் இந்த விஷயத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.

சுவாதியின் கடைசி ஆசை தான் இறந்த பின்னர் உடல்உறுப்புகளை தானம் செய்ய வேண்டுமென்பது. ஆனால் அது நிறைவேறவில்லையென அவரது தந்தை வேதனை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close