Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மரங்களை வெட்டினால், மக்கள் கிரிவலம் வரமாட்டார்கள்' - திருவண்ணாமலை திகுதிகு!

ரு நாட்டுக்கு பொருளாதாரம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல காட்டுக்கு மரங்கள் மிக முக்கியம். ஏற்கனவே நாற்கரச்சாலை என்ற பெயரில் ரோட்டின் இருபுறமும் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்தியதன் விளைவினை புவி வெப்ப உயர்வு என பல விளைவுகளை இன்று நாம் அனுபவிக்கிறோம். பசும்சோலையாக இருந்த நெடுஞ்சாலைகள், பாலைவனமாக காட்சியளிக்கிறது. முன்பை விட விபத்துக்களும் அதிகமாக நிகழ மரங்கள் வெட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டதும் ஒரு காரணம்.

இதேபோல, திருவண்ணாமலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி வீழ்த்த ஆரம்பித்துள்ளனர். தற்போது 15 மரத்திற்கு மேல் வெட்டப்பட்ட நிலையில், மீதமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் பரிதாபமான நிலையில் காட்சியளிக்கின்றன. அதனைப் பார்க்கும்போது எத்தனை மனிதர்கள் கடந்துபோக நாங்கள் நிழல் கொடுத்திருப்போம். சாலை விரிவாக்கம், நவீன வசதிகளுக்காக எங்களை அழிப்பது நியாயமா? என்று கேட்பதுபோல இருந்தது. உண்மைதானே மனிதனின் அடிப்படை வாழ்வியலில் மரங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த மலையையே லிங்கமாக கருதி பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 110 விதியின் கீழ் அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில் 'திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கிரிவலம் யாத்திரை செல்லும் பாதை 7 மீட்டர் அகலமாக இருக்கிறது, அதனை 10 மீட்டராக மாற்ற வேண்டும் எனவும், பக்தர்களுக்கு தங்கும் வசதிகளும் செய்துதரப்படும். இதன் மொத்த மதிப்பு ரூ.65 கோடி' என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த ஆண்டு (2016) ஜனவரி மாதம் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜூரஞ்சன் கிரிவலப்பாதை அகலப்படுத்துவதற்காக பாதையை நேரில் ஆய்வு செய்தார். அதன் முதற்கட்டமாக கிரிவலப்பாதையில் உள்ள மரங்களையும், மூலிகை செடிகளையும் வெட்டி வேரோடு சாய்க்கத் துவங்கியுள்ளனர் நெடுஞ்சாலைத்துறையினர். இது பக்தர்களுக்கும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சில அமைப்பினர்கள் கலெக்டரிடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பேசிய மாவட்ட கலெக்டர் ஞானசேகரன், பணியினை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால், பணி நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில சமூக ஆர்வலர்கள் சென்று கேள்வி கேட்டவுடன் தற்காலிகமாக நிறுத்துவது போல நிறுத்திவிட்டு, மீண்டும் பணி தொடருகிறது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய, திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் அமைப்பின் தலைவர் செந்தமிழ் அரசு, பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வந்து மக்கள் வழிபட்ட வண்ணம் உள்ளனர். மலையின் ஆன்மீக சிறப்பை உணர்வதுடன் கிரிவலப்பாதையையொட்டி உள்ள மரங்கள், மலை மீதுள்ள மூலிகையின் நறுமணங்களை சுவாசித்து வருவது பக்தர்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். ஏற்கனவே மலை மீதும், மலையை சுற்றியுள்ள பகுதிகளையும் பசுமையாக்கும் முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் மலையின் பெரும் பகுதி பசுமையாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக கிரிவலப்பாதை ஓரம் அமைந்துள்ள புளிய மரங்கள், சிறப்பு வாய்ந்த கொன்றை மரங்கள் போன்றவற்றை வெட்டி சாய்த்து வருகின்றனர். திருவண்ணாமலை-செங்கம் சாலையில் எமலிங்கம் தொடங்கி நுகர்பொருள் வாணிப கிடங்கு வரை சுமார் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.

கிரிவலப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு நிழல் தந்து உதவுவதே இருபுறமும் உள்ள மரங்கள்தான். சாலையின் இருபுறமுள்ள மரங்களால்தான் பக்தர்கள் சோர்வின்றி நடக்க வசதியாக உள்ளது. இந்த நிலையில் சாலை விரிவாக்கம் எனும் பெயரில் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களையும், மூலிகைச் செடிகளையும் முழுமையாக அகற்றுவது பக்தர்களின் நலனுக்கும், கிரிவலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சலையோர மரங்களை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு மாற்று முயற்சியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

சாலை விரிவாக்கம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. மரங்களை நடுவில் விட்டுவிட்டு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக மறுபுறம் சாலை அமைக்கலாம். வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக குறுகிய காலத்தில் வளரக்கூடிய மரங்களை நடவேண்டும். வனத்துறையும் எங்கள் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டக்கூடாது என எச்சரித்துள்ளது. வெட்டப்படுவதற்காக குறியீடு செய்யப்பட்ட மரங்களோடு சேர்த்து எல்லா மரங்களையும் வெட்டி சாய்க்கிறார்கள். இவர்களது முக்கிய குறிக்கோள் மரங்களை வெட்டி சாய்க்க வேண்டும். வெட்டும் மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் முறையாக இரும்பு கூண்டுகள் அமைத்து வைப்பதில்லை. கிரிவலப்பாதையின் பசுமையை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஞானசேகரனிடம் பலமுறை தொடர்புகொண்டு பேச முயற்சித்தபோது, அவரது தொலைபேசி எண் பிசியாகவே இருந்தது.
      
நெடுஞ்சாலைத்துறை பாதை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டி வீழ்த்துவதை இனியாவது நிறுத்துமா? எதிர்கால தண்ணீர் தேவைக்கு மரங்கள்தான் முக்கியம் என்பதை 'மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்' என உரக்கப்பேசும் அரசு, கவனத்தில் கொள்ளுமா? 'நவீனம்' என்ற பெயரில் இப்படி மரங்களை வெட்டி வீழ்த்துவது நியாயமா? என இன்னும் ஏராளமான குரல்கள் சமூக ஆர்வலர்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதன் எதிரொலி அரசின் காதுகளில் விழுமா என்பதுதான் தெரியவில்லை...

- நிகரன், கா.முரளி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close