Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தி.மு.கவை உடைத்து அ.தி.மு.கவை துவக்கினார் எம்.ஜி.ஆர்!' - சர்ச்சை கிளப்பும் அ.தி.முக

எம்.ஜி.ஆர், திமுகவிலிருந்து நீங்கினாரா நீக்கப்பட்டாரா என்ற சர்ச்சையை அவர் வளர்த்தெடுத்த அதிமுகவே தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் தவறாகப் பதிவு செய்து, பரபரப்பை பற்றவைத்துள்ளது அரசியல் களத்தில்.

பெண்ணுரிமைப் பேசிய பெரியார் தனது முதுமை பருவத்தில்,  26 வயதுடைய ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, அவருடன் முரண்டுபிடித்து கொடிபிடித்தனர் அவரது அத்யந்த தளபதிகள். பெரியார் பின்வாங்காமால்போனதால், வேறு வழியின்றி கண்ணீருடன் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அண்ணா அறிவித்தார்.

கொட்டும் மழையில், ராபின்சன் பூங்காவில் அண்ணா வின் தலைமையில் திமுக உருவானபோது, அதை 'கண்ணீர்த்துளி கட்சி' என கிண்டலடித்தார் பெரியார். 'கண்ணீர்த்துளிகள் கண்ணீர்கடலாகி,  அதில் பெரியார் சிக்கித்தவிப்பதாக' நாசூக்காக ஒரு கார்ட்டூனை தனது திராவிடர் நாடு பத்திரிகையில் வெளியிட்டு, பெரியாருக்கு பதிலடி கொடுத்தார் அண்ணா. தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் திராவிட நீட்சிகளின் ஆரம்பகால வரலாறு இதுதான். திராவிடர் கழகம் சந்தித்த அதே பிரச்னையை பின்னாளில் திமுக 1972 ல் சந்திக்க நேர்ந்தது. அது திமுக -  எம்.ஜி.ஆர் பிளவு...

1952 ல் நடிகமணி டி.வி நாராயணசாமியால் அண்ணாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டு, அவரது பேச்சாலும் எழுத்தாலும் கவரப்பட்டு திமுகவில் இணைந்தவர் எம்.ஜி.ஆர். பின்னாளில் இதை அழுத்தமாக பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

மாநாடுகள், பொதுக்கூட்டங்கள்  எனப் பல பொது மேடைகளில், எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காத முக்கியத்துவத்தை வழங்கி,  எம்.ஜி.ஆரின் சினிமா பிரபல்யத்தை திமுக வளர்ச்சிக்கு சாதுர்யமாக பயன்படுத்தியவர் அண்ணா. 67 தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி, தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியபோது, அமைச்சர்களின் பட்டியலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு இரண்டாம் கட்ட தலைவர்களிடம் கொடுத்து அனுப்பினார் அண்ணா. அங்குதான் குண்டடிபட்டு எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்றுவந்தார்.

தனக்கு அண்ணா அளித்த கவுரவம் எம்.ஜி.ஆருக்கு கண்ணீரை வரவழைத்தது. அதன் எதிரொலியாக உடல்நலம் தேறியபின் நடந்த ஒரு கூட்டத்தில்,  'தான் சாகும்போது தன் மீது  திமுக கொடியைதான் போர்த்தவேண்டும்' என்று நா தழுதழுத்தார்.

முத்தாய்ப்பாக, 'எம்.ஜி.ஆர் என் இதயக்கனி..மரத்தில் பழம் பழுத்து தொங்கிக்கொண்டிருந்தது. அது தங்கள் மடியில் விழாதா என பலரும் காத்திருந்தனர். அது என் மடியில் விழுந்தது. எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டேன்' என எம்.ஜி.ஆரின் முக்கியத்துவத்தை லட்சக்கணக்கானோர் திரண்ட ஒரு மேடையில், தனது தம்பிமார்கள் முன்னிலையில் சொல்லி, எம்.ஜி.ஆரை பரவசப்படுத்தினார் அண்ணா. அண்ணாவின் இந்த சாதுர்யத்தை அவரது தம்பிகள் கைகொள்ளாததன் விளைவாக எழுந்த பிரச்னைகள்தான், பின்னாளில் தமிழக அரசியல் வரலாற்றில் வேறு அத்தியாயத்திற்கு வழிவகுத்தது.  

திமுகவிற்கு எம்.ஜி.ஆர் பயன்பட்டார். ஆனால் எம்.ஜி.ருக்கு திமுக பயன்படவேண்டிய சூழல் இல்லை. அப்படி ஒரு பேச்சு எழுந்தபோது, திமுகவில் இருந்தபோதே அதை மறுத்தவர் எம்.ஜி.ஆர். 1972 ம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம், மலேசியாவிலிருந்து வெளிவந்த தமிழ் நேசன்  நாளிதழுக்கு அளித்த நீண்ட பேட்டியில்,  அப்படி ஒரு கேள்வி எழுந்தபோது, 'நான் கதாநாயகனாக நடித்த என் முதல் படம் ராஜகுமாரி. வெளியான ஆண்டு 1944. அப்போது திமுகவே தோன்றவேயில்லையே' என அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைத்தார் எம்.ஜி.ஆர். 1968 ல் ஒரு சினிமா பத்திரிக்கைக்கு அவர் அளித்தபேட்டியிலும் இதை ஆணித்தரமாக மறுத்திருந்தார் அவர்.

இப்படி எம்.ஜி.ஆரால் பயன்பெற்ற திமுக, அண்ணாவின் இறப்புக்குப்பின் கருணாநிதி கைக்கு வந்தபோது எம்.ஜி.ஆர்- கருணாநிதிக்கு இடையே மனவருத்தங்கள் உருவானது. பிரச்னை முற்றிய நிலையில், திருக்கழுக்குன்றத்தில் அதே ஆண்டு செப்டம்பரில் நடந்த ஒரு கூட்டத்தில், ' ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி திமுகவினர்  சொத்து சேர்த்துவிட்டதாக எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தர, கட்சியின் தலைவர்கள் தங்கள் சொத்துக்கணக்கை தரவேண்டும்' என முழங்கினார் கட்சியின் பொருளாளர் எம்.ஜி.ஆர்.

விஷயம் விபரீதமானது...கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டார் எம்.ஜி.ஆர். ஷோகாஸ் நோட்டீஸ், செயற்குழு, பொதுக்குழு என அடுத்தடுத்த பரபரப்புகள் தொற்றிக்கொள்ள, அதே ஆண்டு அக்டோபர் 14 ம் தேதி, கட்சியின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவித்ததாக கூறி, கட்சியிலிருந்து அவரை நீக்கி அறிவித்தது திமுக தலைமை. உடைந்துபோனார் எம்.ஜி.ஆர். 20 ஆண்டுகாலம் தான் உழைத்த கட்சியிலிருந்து, தாம் தூக்கியெறியப்பட்டதில் வேதனையியின் உச்சிக்குப் போனார் அவர். கருணாநிதி - எம்.ஜி.ஆர் பிளவை தவிர்க்க, முரசொலி மாறன் பல இரவுகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. எம்.ஜி.ஆர் திமுகவிற்கு வேண்டாதவராகிப்போனார் ஒரேநாளில்.

'அண்ணா ஒப்படைத்துவிட்டுச்சென்ற கனியில் வண்டு துளைத்துவிட்டது...வேறு வழியின்றி கனியை எறியவேண்டியதானது' என வழக்கம்போல் தனது பேச்சு சாமர்த்தியத்தினை இந்த விஷயத்தில் காட்டினார் கருணாநிதி.

அதன்பின் அதிமுக என்ற புதுக்கட்சியை துவக்கிய எம்.ஜி.ஆர்,  தன் இறுதி அரசியல்மேடை வரை 'ஒன்றும் செய்யாத நான் கட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன்' என உருக்கத்துடன்தான் மக்களை சந்தித்தார். அதிமுக பெற்ற முதல் வெற்றியான திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தலில், அதையே திரும்ப திரும்பச் சொல்லி மக்களை உணர்ச்சிவயப்படவைத்தார், வெற்றி கண்டார்.

அந்த வகையில் தூக்கியெறியப்பட்டதாக அவர் சொன்ன வார்த்தைதான் உணர்ச்சிகரமான ஒரு எழுச்சியை எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக எழுப்பியது. கட்சி துவக்கவும், அந்த கட்சி ஆட்சியை பிடிக்கவும், தொடர்ந்து 10 ஆண்டுகள் அசைக்கமுடியாத சக்தியாக எம்.ஜி.ஆர் திகழவும் ஒற்றைக்காரணம் அந்த நிகழ்வுதான். கருணாநிதி அன்றுமுதல் இன்றுவரை எம்.ஜி.ஆர் -  திமுக பிளவுக்கு யார் யாரையோ பலிகடாவாக்கி காரணங்களையும் பலவாறாக அடுக்கி வந்தார். 

 

மத்தியில் காங்கிரஸ் கோலோச்சிய அக்காலகட்டத்தில்,  தமிழகத்தில் மட்டுமே காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடந்துகொண்டிருந்ததை குறிப்பிட்டு, அதை ஒழிக்க பலம்வாய்ந்த மேலிடம் செய்த சதி வலையில் ம.கோ.இரா (எம்.ஜி.ஆர் தாங்க!) விழுந்துவிட்டார் என்றார் ஒருநாள். தனக்கு விருப்பமான பெண்மணியை கட்சியில் நுழைக்க முயன்று தோல்வியில் முடிந்தததால் அந்த கோபத்தில் கட்சியை உடைத்தார் எம்.ஜி.ஆர் ' என்றார் இன்னொரு நாள். மந்திரி பதவி தராத ஆத்திரத்தின் விளைவுதான், எம்.ஜி.ஆர் கட்சியை உடைத்த பின்னணி என்று நெஞ்சுக்கு நீதியில் பதிவு செய்தார்.

இப்படி எம்.ஜி.ஆரை நீக்க நடந்த முயற்சிகளை தவிர்த்துவிட்டு, நீக்கியதாக எங்கும் குறிப்பிடாமல்,  'எம்.ஜி.ஆர் தன் சுயநலனுக்காக அண்ணா வளர்த்த கட்சியை  உடைத்தார்' என்ற தொனியில் இன்றுவரை பேசியும் எழுதியும், எம்.ஜி.ஆர்- திமுக பிளவை மறுதலித்து வந்தார் கருணாநிதி.

இதெல்லாம் அரசியல், விட்டுவிடுவோம்...அரசியல் போரில் எதிர்களத்தில் நிற்கிற ஒருவரின் வழக்கமான அஸ்திரம்தான் இது. ஆனால் எம்.ஜி.ஆர் வளர்த்தெடுத்த அதிமுகவே, இன்றைக்கு அப்படி ஒரு தகவலைத்தான் வரலாற்றுத்திரிப்பாக பதிவு செய்கிறது என்பதுதான் இப்போதைய அதிர்ச்சி.

அதிமுகவின் அதிகாரபூர்வ இணையதளத்தில், அக்கட்சி உருவான வரலாற்றை குறிப்பிடும் பகுதியில் 'எம்.ஜி.ஆர் கட்சியை உடைத்து அவரது ஆதரவாளர்களுடன் வெளியேறி துவங்கிய கட்சிதான் அதிமுக' என்ற தொனியில் அதிமுகவின் வரலாற்றை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறது அக்கட்சி. இது,  கட்சி என்ற வரையறையைத் தாண்டி எம்.ஜி.ஆர் ஆர்வலர்கள் அனைவரையும் காயப்படுத்தியுள்ளது.

கட்சிசாராத எம்.ஜி.ஆரின் தொண்டர்களிடையே மட்டுமல்லாது, எம்.ஜி.ஆரின் குடும்பத்தினரிடையேயும் இது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து எம்.ஜி.ஆர் குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவரிடம் பேசினோம்.

“தலைவருக்கு கட்சியை உடைக்கும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. அண்ணாவையும் அவர் வளர்த்த கட்சியையும் அத்தனை உள்ளன்போடு நேசித்தார். கட்சியில் ஈடுபாடு காட்டுவது தன் திரையுலக வாழ்வை பாதிக்கும் என தெரிந்தும் அண்ணாவின் மீது கொண்ட அன்பினால் பிரபலமான நடிகராக இருந்தும், தன் சினிமா வாழ்க்கையை பின்னுக்குத் தள்ளி திமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். திரைப்படத்தில் அண்ணாவின் படத்தைyum, அவரது கொள்கைகளையும்,  கட்சிக்கொடியையும் தனது திரைப்படங்களில் இடம்பெறச் செய்தும், பொது இடங்களில் கறுப்பு சிவப்புத் துண்டு அணிந்தும்  கட்சியை  வளர்ப்பதில் ஈடுபாடு காட்டினார்.

ஆனால் அண்ணாவின் காலத்திற்குப்பிறகு அவர் திட்டமிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது வேதனையை மக்கள் பகிர்ந்துகொண்டு ஆதரித்ததால், அந்த ஆதரவின் அடிப்படையில் கட்சி துவக்கவேண்டிய கட்டாயம் உருவானது. இதுதான் வரலாறு. ஆனால் அவர் அத்தனை துன்பங்கள் துயரங்களுக்கு மத்தியில், கருணாநிதியின் அத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து, அதிமுகவை வளர்த்தெடுத்து, இன்றுவரை மக்கள் அபிமானம் பெற்ற கட்சியாக அதை நிலைநிறுத்திச் சென்றிருக்கிறார். ஆனால் அதிமுக இணையதளத்தில் இடம்பெற்றுள்ள அதிமுக வரலாறு, இப்படி அவரது நோக்கத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது வேதனையளிக்கிறது" என்றார்.

எதிர்கால இளையதலைமுறையினருக்கு கட்சியையும், அதன் போராட்ட வரலாற்றையும் அறிமுகப்படுத்தவேண்டிய பொறுப்பில் உள்ள அதிமுக இணையதளம், இப்படி கட்சியின் வரலாற்றை தவறாக பதிவுசெய்திருப்பது அரசியல் களத்தில் எம்.ஜி.ஆரின் அத்தனை போராட்டங்களையும் அவமதிப்பதாகவே உள்ளது என கொதிக்கின்றனர் எம்.ஜி.ஆர் ஆர்வலர்கள்.

கட்சியின் வரலாறு என்பது எதிர்கட்சியினருக்கு தெரியாமல் இருக்கலாம். தெரிந்து மாற்றிச் சொல்லலாம்; அதுதான் அரசியல். ஆனால் சொந்தக்கட்சிக்கே அது தெரியாமல் இருக்கலாமா...?

- எஸ்.கிருபாகரன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close