Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முருகன், சாந்தனை சந்தித்த திருச்சி வேலுச்சாமி! -'திடீர்' சந்திப்பின் பின்னணி

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் முருகன், சாந்தனை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி.  ' இவர்களின் விடுதலைக்காக முதல்வரை சந்திக்க மனு கொடுக்க இருக்கிறேன்' என்கிறார் திருச்சி வேலுச்சாமி.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனைப் பெற்று 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர். பொதுவாக, வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் மட்டுமே, இவர்களைச் சந்தித்துப் பேசி வருவது வழக்கம். இவர்களின் விடுதலைக்காக மாபெரும் பேரணி ஒன்றும் கடந்த 11-ம் தேதியன்று நடந்தது.

இந்நிலையில், இன்று காலை வேலூர் சிறையில் முருகனையும் சாந்தனையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் திருச்சி வேலுச்சாமி. ' மறு விசாரணையில் இவர்கள் குற்றவாளி இல்லை என்றால் விடுலை செய்யலாம்' என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியிருந்தார். ஆனால், ராஜீவ் காந்தி படுகொலையைக் காரணம் காட்டியே, பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள், இவர்களின் விடுதலையை எதிர்த்து வந்தனர். இந்நிலையில், சிறையில் உள்ளவர்களை காங்கிரஸ் கட்சி பிரமுகர் சந்திக்க வந்திருப்பதை சிறை அதிகாரிகளால் நம்ப முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் முருகனிடம் பேசியிருக்கிறார் வேலுச்சாமி.

திருச்சி வேலுச்சாமியிடம் பேசினோம்.

" இதுநாள் வரையில் இவர்களை நான் சந்தித்தது இல்லை. சாந்தனின் அம்மா இலங்கையில் வசிக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக ஒருவேளை உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, கோவிலில் போய் படுத்துக் கொள்கிறார். அவரை கவனிப்பதற்கென்று யாரும் இல்லை. மகனின் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு என்னிடம் போனில் பேசினார் சாந்தனின் அம்மா. 'அவன் எந்தத் தப்பும் செய்யவில்லை. வெளிநாட்டிற்கு வேலைக்குப் போவதற்காக தமிழ்நாடு போனான். அவனைக் கைது செய்துவிட்டார்கள். என் கடைசி காலத்தில் அவன் என்னோடு இருக்கணும்னு ஆசைப்படறேன். முதலமைச்சரிடம் பேசுவீர்களா?' எனக் கதறி அழுதார்.

மிகுந்த வேதனையாக இருந்தது. இதையடுத்து, மனு போட்டு சாந்தன், முருகனை இன்று சந்தித்தேன். இலக்கியம், ஆன்மிகம் என இரண்டிலும் கரை தேர்ந்திருக்கிறார் சாந்தன். 'என் வாழ்நாள் முழுக்க தமிழ் இலக்கியத்திற்காக உழைப்பேன்' எனச் சொன்னார். ராஜீவ் படுகொலை வழக்கில்,  பொய்க் குற்றச்சாட்டில் எப்படியெல்லாம் பழிவாங்கப்பட்டோம் என்பதை விரிவாகப் பேசினார்.

இறுதியாக, ' நான் ஆன்மிகப் பாதையில் தீவிரமாக இருக்கிறேன். ஒருநாள் கட்டாயம் நான் வெளியே வருவேன்' என உறுதியாகப் பேசினார். முருகன் முழுக்க சாமியாராகவே மாறிவிட்டார். அவர் என்னிடம் பேசும்போது, ' தாய்மையை புனிதமாகப் போற்றக் கூடியவர்கள் தமிழ்ப் பெண்கள். அந்தக் காலகட்டங்களில் அதிர்ச்சி தரக் கூடிய எந்தக் காட்சியையும் பார்க்க மாட்டார்கள்,  கேட்க மாட்டார்கள். ராஜீவ் காந்தி படுகொலை நடந்தபோது, நளினி இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார். அப்படியொரு சம்பவம் நடக்கிறது என்பது எனக்குத் தெரிந்திருந்தால், என் மனைவியை அங்கே அனுப்பியிருப்பேனா?.. சொல்லுங்கள். அப்படி அனுப்பி வைத்துவிட்டு, என்னால் வீட்டில் நிம்மதியாக உறங்கியிருக்க முடியுமா? 25 ஆண்டுகளாக சிறையில் இருந்துவிட்டோம். இதற்கு மேலும் மறைக்க எங்களிடம் என்ன இருக்கிறது?' எனக் கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

மேலும், இந்த வழக்கிற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் இருந்தே பலவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார்கள். அதைப் பற்றி இப்போது தெரிவிக்க முடியாது. சாந்தனின் தாயார் தன்னுடைய இறுதிகாலத்தில் இருக்கிறார். தன் மகனின் முகத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரது ஆசையை நிறைவேற்றவாவது முதல்வரை சந்திக்க மனு கொடுக்க இருக்கிறேன்" என்றார் நிதானமாக.

25 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு பேரின் விடுதலைக்காக, அரசியல் கலப்பில்லாமல் அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வரும் வேளையில், காங்கிரஸ் பிரமுகரின் ' திடீர்' சந்திப்பை ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள் சிறை அதிகாரிகள்.

-ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ