Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலீசுக்கு சைக்கிள்... கொக்கின் தலையில் வெண்ணெய்...என்கிறார் கருணாநிதி!


 

தொழில் நுட்பம் றெக்கைக் கட்டி பறக்கும் இந்தக் காலத்தில் போலீசாருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா சைக்கிள் வழங்கியிருப்பது கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் காரியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் அனுமதி இல்லாமல், பாலாற்றில் ஆந்திர மாநில அரசு அணைகளையோ, தடுப்பணைகளையோ கட்டக் கூடாது. இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு, குப்பம் என்ற இடத்தில் ஆந்திர மாநில அரசு அணை கட்டும் முயற்சியில் இறங்கியது. இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையிலே உள்ளது. பாலாற்றில் அணை கட்டும் திட்டத்தையும் ஆந்திர அரசு நிறுத்தி வைத்தது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை களைக் கட்டக் கூடாது என்று ஆந்திர மாநில அரசுக்கு மத்திய அரசின் நீர்வளத் துறையும் அறிவுறுத்தியுள்ளது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், கர்நாடக அரசும் ஏற்கனவே ஏராளமான தடுப்பணைகளைக் கட்டிவிட்டதால் பாலாறு அருகிப் போய் விட்ட நிலையில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில், புல்லூர் என்ற இடத்தில், தமிழக எல்லையில் ஐந்து அடி உயர தடுப்பணையை ஆந்திர மாநில அரசு கட்டியுள்ளது. இதற்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதா என்றும் தெரியவில்லை. தற்போது அந்தத் தடுப்பணையின் உயரத்தை 10 அடியாக உயர்த்தும் பணி, 45 இலட்சம் ரூபாய்ச் செலவில் துவக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருவதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதால், தமிழகத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலங்களில் பாசனம் பாதிக்கப்படும். மேலும் இவ்வாறு தடுப்பணை கட்டப்படுவதால், இந்து சமய அறநிலையக் கட்டுப்பாட்டின் கீழ், பாலாற்றின் கரையிலே உள்ள கனகநாச்சியம்மன் கோவில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது. பாலாற்றில் தடுப்பணையை உயர்த்தும் இந்தப் பிரச்சினையில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை கவனிக்காமல் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தியினை இன்று ஒரு ஆங்கில நாளேடு "Charging that this is a failure of the TN Government, Vellore farmers say that it would deprive even a mild flow of water in the river, which enters TN at Pullur Panchayat in Vellore District. A TN Government Official said that though the work had been going on for more than two months, no PWD official nor any other TN administration Official visited the Site". (இது தமிழ்நாடு அரசாங்கத்தின் தோல்வி என்று வேலுhர் விவசாயிகள் குற்றஞ்சாட்டு வதோடு, தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதால் சிறிய அளவில் வந்து கொண்டிருந்த தண்ணீரும் தடைப்பட்டு விடும் என்று கூறுகிறார்கள். இரண்டு மாதங்களாக தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், தமிழகப் பொதுப்பணித் துறையின் அதிகாரிகளோ அல்லது தமிழக அரசின் பொது நிர்வாக அதிகாரிகளோ, யாரும் அந்தப் புல்லூருக்கு வந்து ஆந்திர மாநில அரசு மேற்கொண்டிருக்கும் அத்துமீறலைப் பார்த்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசின் அதிகாரி ஒருவரே கூறியதாகவும் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுதியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு மீறல்கள் குறித்துத் தான் அ.தி.மு.க. அரசு அக்கறையற்ற தன்மையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது என்றால், விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் இது போன்ற பிரச்சினையிலும் கவலையற்ற போக்கிலே தான் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைமைச் செயலகத்திற்கு வருவதும், காவல் துறையினர் ரோந்து செல்ல சைக்கிள்களை வழங்குவது போன்ற பணியிலே ஈடுபட்டுள்ளார். காவல் துறையினர் சைக்கிளிலே சென்று குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது என்பது தொழில் நுட்பம் இறக்கை கட்டிப் பறக்கும் இந்தக் காலத்திற்குப் பொருந்தி வருமா என்று கூடச் சிறிதும் எண்ணிப் பார்க்காமல், "கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும்" காரியத்திலே ஈடுபட்டுள்ளார்கள். ஜெயலலிதாவின் பொறுப்பிலே உள்ள காவல் துறையில் உள்ள தலைமைக் காவலர் ஒருவர் வழக்கு விசாரணையை பதிவு செய்யவே செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா எதற்கெடுத்தாலும் மற்றவர்கள் மீது குறை சொல்லித் தப்பிக்கும் போக்கினை கை விட்டு, காவேரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்கும் பிரச்சினை ஆனாலும், முல்லைப் பெரியாறு பிரச்சினை ஆனாலும், பாலாற்றுப் பிரச்சினை ஆனாலும் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தமிழகத்திலே உள்ள விவசாயிகள் நிம்மதியாக வாழ்வதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close