Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மரங்களை வெட்டும் அரசு... போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த மலையையே லிங்கமாக கருதி பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 110 விதியின் கீழ் அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில் 'திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கிரிவலம் யாத்திரை செல்லும் பாதை 7 மீட்டர் அகலமாக இருக்கிறது, அதனை 10 மீட்டராக மாற்றப்படும், பக்தர்களுக்கு தங்கும் வசதிகளும் செய்துதரப்படும். இதன் மொத்த மதிப்பு ரூ.65 கோடி' என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த ஆண்டு (2016) ஜனவரி மாதம் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜூரஞ்சன் கிரிவலப்பாதை அகலப்படுத்துவதற்காக பாதையை நேரில் ஆய்வு செய்தார். அதன் முதற்கட்டமாக கிரிவலப்பாதையில் உள்ள மரங்களையும், மூலிகை செடிகளையும் வெட்டி வேரோடு சாய்க்கத் துவங்கியுள்ளனர் நெடுஞ்சாலைத்துறையினர். இது பக்தர்களுக்கும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் கலெக்டரிடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பேசிய மாவட்ட கலெக்டர் ஞானசேகரன், பணியினை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால், பணி நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில சமூக ஆர்வலர்கள் சென்று கேள்வி கேட்டவுடன் தற்காலிகமாக நிறுத்துவது போல நிறுத்திவிட்டு, மீண்டும் பணி இரவு, பகலாக தொடருகிறது.

இதையடுத்து, இன்று (1-ம் தேதி) காலையில் திரண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்டக்கூடாது என தடுத்தனர். இதை பொருட்படுத்தாத குத்தகைதாரர்கள் 'நாங்கள் மரங்களை வெட்டியே தீருவோம், உங்களால் முடிந்ததை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு மரம் அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மனிதச்சங்கிலி போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப்போராட்டத்தில் வெளிநாட்டவர்களும் இணைந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், மரம் வெட்டுவோர் மட்டும் தங்களது வேலையை நிறுத்தியதாக தெரியவில்லை.

இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், டி.ஜி.பி பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, அவர்களை கலெக்டரிடம் அழைத்து சென்றார். அப்போது கலெக்டர், தற்காலிகமாக மரங்களை வெட்டுவதை நிறுத்த சொல்லியிருக்கிறார். இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதற்கு முன்பும் இதே கலெக்டர்தான் மரங்களை வெட்டுவதை நிறுத்த சொன்னார். மீண்டும் மரங்கள் வெட்டப்பட்டன. இனிமேலும், மரங்கள் வெட்டப்படுவது நிறுத்தப்படுமா? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

நிகரன், கா.முரளி

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ