Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதனுக்கு வந்த 'மனைவிகள்' பிரச்னை..! கதிகலக்கிய அதிர்ச்சி புகார்


சென்னை வானகரத்தில் உள்ள மதனின் வீட்டை அவரது இரண்டு மனைவிகள் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேந்தர் மூவிஸ் மதன் மாயமாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை உறுதியான எந்தத் தகவலும் இல்லை. தற்போது நேபாளத்தில் மதன் இருப்பதாக வந்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். இந்நிலையில், மதன் மாயமானதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் மதனின் தாயார் தங்கம், கடந்த 24ம் தேதி மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், வானகரத்தில் தனக்கு சொந்தமான வீட்டை சிலர் அத்துமீறி நுழைந்து தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வீட்டுக்கு மதனின் இரண்டு மனைவிகள் சிந்து, சுமலதா ஆகியோர் சொந்தம் கொண்டாட முயற்சி தருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து முதல் மனைவி சிந்து தரப்பினர் கூறுகையில், "மதன், பள்ளி நாட்களிலேயே காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் பல போராட்டங்களை கடந்து சிந்துவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதிகா என்ற மகள் சென்னையில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மதன், சிந்துவின் குடும்ப வாழ்க்கையில் புயலாக வந்தவர் சுமலதா. இவர், மலையாள சின்னத்திரை நடிகை. மதனின் பணப்புழக்கத்தை தெரிந்த சுமலதா, அவரை அவரிடம்  ஒட்டிக்கொண்டார். மதனிடம் சிந்துவை விவாகரத்து செய்ய பலமுறை வற்புறுத்தியுள்ளார் சுமலதா. மதன் மாயமான நாளன்று இரவோடு, இரவாக காசி சென்றவர் சிந்து. அங்கு போலீஸில் புகார் கொடுத்து விட்டு படகில் அவரை தேடினார். அப்போது அங்கு வந்து சுமலதா, சிந்துவிடம் தகராறு செய்துள்ளார். இருவரையும் மதனின் நண்பர்கள் சமரசம் செய்துள்ளனர்.

சென்னை வந்த சுமலதா, எந்த கவலையும் இல்லாமல் மதனின் வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு காரை  எடுத்து சென்று விட்டார். இரண்டு நாட்கள் கழித்து அலுவலகத்தில் உள்ள ஜெனேரட்டர், ஏசி இயந்திரத்தை கழற்றி செல்ல சுமலதா முயன்றுள்ளார். இவ்வாறு மதனின் அனைத்து சொத்துக்களையும் கைப்பற்ற சுமலதா முயன்று வருகிறார். அதில் ஒரு கட்டமாக சிந்து, மகளுடன் 15 வருடமாக குடியிருந்து வரும் வீட்டை அபகரிக்க சுமலதா, மாமியார் தங்கம் மூலம் மதுரவாயல் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். மதன் வந்த பிறகு தான் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்" என்றனர்.

இதுகுறித்து தங்கத்தின் வழக்கறிஞர் இன்ஃபெண்ட் தினேஷ், "சிந்து தரப்பினர் சொல்வதில் உண்மையில்லை.  தங்கத்தின் பெயரில் தான் வானகரம் வீடு உள்ளது. தங்கத்துக்கு மதன் உள்பட இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அப்படி இருக்கையில் சிந்துவுக்கு மட்டும் அந்த வீட்டை எப்படி கொடுக்க முடியும். சிந்து, தேவையில்லாமல் சுமலதாவின் பெயரை அசிங்கப்படுத்துகிறார். சிந்து, மதன் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, சிந்து, இந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாட முடியாது. இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

எஸ்.முத்துகிருஷ்ணன், எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ