Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' தமிழக அரசின் மீதான அவநம்பிக்கை அதிகரிக்கிறது!' -தொடர் மரணங்களால் தகிக்கும் திருமா

திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை குறித்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். "இந்த உத்தரவு தமிழக அரசின் மீதான அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

சேலம், பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக இருந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா, மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். அவரது மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. ' போலீஸ் அதிகாரியை மரணத்திற்குத் தூண்டியதே உயர்  அதிகாரிகள்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அனைத்து தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், விஷ்ணுபிரியாவின் தந்தை தொடர்ந்த வழக்கில், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இதுபற்றிப் பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், " விஷ்ணுபிரியா மர்மமான முறையில் மரணமடைந்ததையொட்டி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடக்கம் முதலே நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். அதை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினோம். தற்போது அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் கூறினார்கள்.

சேலம் கோகுல்ராஜ், சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை மட்டுமன்றி, மில் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கையும் அவர் தீவிரமாக விசாரித்து வந்திருக்கிறார். அந்த வழக்கின் விசாரணையில், அதிகாரிகள் மற்றும் அரசியல்ரீதியாக அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகவும் விஷ்ணுபிரியாவின் தந்தை புகார் கூறியிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் அந்த வழக்கில் உரிய நீதி கிடைக்காது என்பதனால், சி.பி.ஐ-யிடம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வந்தோம். ஆனால் தமிழக அரசு,  சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மட்டுமே உத்தரவிட்டிருந்தது.

மரணம் நிகழ்ந்து ஒன்பது மாதங்கள் கடந்த பின்னரும், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால்தான் தற்போது உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தமிழக காவல்துறையின் மீதான அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. விஷ்ணுபிரியாவின் மரணம் மட்டுமின்றி, அண்மையில் நடந்த சுவாதி படுகொலையும், சேலம் வினுப்ரியாவின் தற்கொலையும் தமிழகக் காவல்துறை மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்துள்ளன. இதை தமிழக அரசு கவனத்தில்கொண்டு, இத்தகைய கொடும் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு தமிழக முதலமைச்சர்  உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். விஷ்ணுபிரியாவின் வழக்கை விசாரிக்க இருக்கும் மத்திய புலனாய்வு அமைப்பு, வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரணம் தொடர்பான வழக்கில் அலட்சியம் காட்டி காலம் கடத்தியதைப்போல இல்லாமல், உயர் நீதிமன்றம் விதித்துள்ள மூன்று மாத காலத்திற்குள் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் என நம்புகிறோம்" என்கிறார் ஆதங்கத்தோடு.

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ