Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்னையை தீர்க்க... சுஷ்மா குறித்த காலக்கெடு!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் சம்பவங்கள் தினம்தோறும் அரங்கேறி வருகின்றன. அதை தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்காத இந்திய அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, டெல்லிக்குப் போய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசியபோதெல்லாம் அவர், இவர்கள் மீது கோபத்தைக் காட்டுவாராம். 'நீங்கள்தான் சட்டத்தை மீறி நடந்துகொள்கிறீர்கள்' என்று காட்டமாக பேசுவாராம்.

இருந்தாலும், மனம்தளராத மீனவர்கள் இந்தமுறை நாடியது தி.மு.கழக ராஜ்யசபா எம்.பி-யான திருச்சி சிவாவை. ராமேஸ்வரம், ராமநாதபுரம், நாகை, புதுகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகளை டெல்லி வரச் சொன்னாராம். இவர்கள் வருவதை அமைச்சர் சுஷ்மாவிடம் முன்கூட்டியே சொல்லி, ஜூன் 29-ம் தேதி அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கிறார் சிவா. அதன்படி, மீனவர் சங்கப் பிரதிநிதிகள் டெல்லிக்கு போயிருக்கிறார்கள். அவர்களுடன் அமைச்சரை சந்திக்கப் போயிருக்கிறார் சிவா. இவரை மட்டும் தனியாக அழைத்து, பத்து நிமிடங்கள் தனியாக பேசி முடித்துவிட்டு, பிறகு மீனவர் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்திருக்கிறார் அமைச்சர் சுஷ்மா.

இந்த சந்திப்பு பற்றி திருச்சி சிவா கூறும்போது,

''தமிழக மீனவர்களின் பிரச்னைகளை காதுகொடுத்துக் கேட்டவர், ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கை தரும்வகையிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். 'தமிழக மீனவர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் ஐந்து கட்டங்களாக பிரச்னையை அணுகப்போகிறேன். அதுவும் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நடத்திக்காட்டுவேன்' என்றார். அமைச்சர் இப்படி பேசியபோது, நம் மீனவர்களின் முகங்களில் மகிழ்ச்சி. நாங்கள் சந்தித்த அன்றே இந்தியத் தூதரை அழைத்து, தற்போது சிறையில் வாடும் மீனவர்களை விடுவிப்பது, 103 படகுகளை ரிலீஸ் செய்வதுப் பற்றி பேசிவிட்டு, தகவலை என்னிடம் தெரிவித்தார்.

இரண்டாவது கட்டமாக,  அடுத்த இருபது நாட்களுக்குள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், கடலோர காவல்படை, மத்திய மற்றும் மாநிலங்களில் உள்ள மீனவத்துறை அதிகாரிகள் ஆகியோரை அழைத்து மீட்டிங் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.

மூன்றாவது கட்டம்... அடுத்த ஒருமாத காலத்தில் இருநாட்டு மீனவர்களை சந்திக்க வைத்து, பிரச்னைகள் குறித்து பேசுவது. நான்காவது கட்டம்... இலங்கையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சரை டெல்லிக்கு வரவழைத்து பேசப்போகிறார். ஐந்தாவது கட்டம்... இந்திய மீனவர்கள், ஆழ்கடலில் மீன் பிடிக்கும் வகையில் நவீன திட்டத்தை நிறைவேற்றுவது. இதற்கு ஆயிரம், இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவு பிடித்தாலும் பரவாயில்லை. அதை நிறைவேற்ற ஏற்பாடு செய்வேன் என்றார்.

இந்தத் திட்டம் நாகை, காரைக்கால் போன்ற பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ராமநாதபுரம் மீனவர்களின் பிரச்னையே கச்சத்தீவு பற்றியது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரால் கருத்து சொல்லமுடியவில்லை என்றும் சொன்னார். அமைச்சர் சொன்னபடி நடவடிக்கைகளில் இறங்கி விட்டார். நல்ல சேதிக்காக நானும், மீனவர்களும் காத்திருக்கிறோம்" என்றார்.

- ஆர்.பி.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ