Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் குறித்து மருத்துவமனை டீன் தகவல்



ஆலங்குளம் பொறியியல் கல்லூரியில் படித்தபோது



சென்னை நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் கொலையாளி குறித்து எந்த துப்பும் கிடைக்காத நிலையில், குற்றவாளியின் மேம்படுத்தப்பட்ட புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர். அனைத்து காவல்நிலையங்களுக்கும் புகைப்படம் அனுப்பப்பட்டதுடன், ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டு, குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், மேன்சனில் தங்கியிருந்த ராம்குமார் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக மேன்சன் வாட்ச்மேன் தகவல் அளித்தார். சென்னைக்கு வேலை தேடி வந்த ராம்குமார். ஒரு துணிக்கடையில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை போலீசார் தன்னை நெருங்கிவிட்டதை அறிந்த ராம்குமார் வீட்டின் உள்ளேச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போலீசார், ரத்தவெள்ளத்தில் விழுந்துக் கிடந்த ராம்குமாரை  மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

க‌ழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட ராம்குமார், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ராம்குமாருக்கு கழுத்துப் பகுதியில், மொத்தம் 13 தையல் போடப்பட்டு உள்ளது. வலது பக்கம் 9 தையலும் இடது புறத்தில் 4 தையலும் போடப்பட்டுள்ளது. ஆனாலும், அவன் சுயநினைவுடன் சுற்றிலும் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டு இருக்கிறான். அவனால் தற்போது பேச இயலவில்லை.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  ராம்குமாருக்கு சிகிச்சை நடைபெறும் மருத்துவமனை...
படம்: எல்.ராஜேந்திரன்



சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் ஆலங்குளத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து பட்டம் பெற்றவர் என்று கூறப்படுகிறது. ஒருதலை காதல் விவகாரத்தினாலேயே இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையில் ராம்குமாரின் நண்பருக்கும் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுவாதி படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தனது மகன்தான் என ராம்குமாரின் தந்தை அறிந்திருந்ததாக கூறப்படுவதால், செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரின் தந்தை மற்றும் தாயாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அவரது உறவினர்கள் சிலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை சென்னை அழைத்துவந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் வைத்தே ராம்குமாரிடம் போலீசார்  வாக்குமூலம் பெற முயற்சித்து வருகின்றனர். சென்னை காவல்துறையினரும் நெல்லைக்கு விரைந்துள்ளனர். வாக்குமூலம் பெறும் போது நீதிபதியும் உடனிருக்க வேண்டும் என்பதற்காக நீதிபதி வரவழைக்கப்படும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

உடல் நிலை குறித்து நெல்லை மருத்துவக் கல்லூரி டீன்   சித்தி அத்திய முனவரா கூறுகையில் 'ராம்குமார் உயிருக்கு ஆபத்து இல்லை... குரல் வளையத்தில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் குணம் அடைந்துவிடும்.  இரு நாட்களில் சகஜமாக பேச முடியும்' என்று தெரிவித்துள்ளார்.

- ஆண்டனிராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ