Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சுவாதி வழக்கில் கைதானவரைப் பற்றி என்ன சொல்வது?' -கமிஷனர் பதில்


மென்பொறியாளர் சுவாதியை, ராம்குமார் சில நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். அவரிடம் பழக முடியாததால் கொலை செய்துள்ளார் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்தது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது, அவர் கூறுகையில், "கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் விசாரித்தனர். அங்கிருந்து எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுவாதி கொலை தொடர்பாக பலகட்ட புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டது. சுவாதியின் குடும்பத்தினர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். வெளிநாடுகளில் இருந்தும்  எங்களுக்கு தகவல்கள் வந்தன.



அந்த தகவல்களின் அடிப்படையில் நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இன்ஜினீயரை கைது செய்துள்ளோம். காவல்துறையினர் அவரை கைது செய்ய முயன்றபோது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார். காவல்துறையினர் உடனடியாக அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்து அங்கிருந்து பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலே மேல் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். சென்னையில் இருந்து சென்ற சிறப்பு விசாரணை குழுவும் திருநெல்வேலி சென்று விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இந்த புலன் விசாரணை செய்ய உதவியாக இருந்த மக்களுக்கும், சுவாதியின் பெற்றோருக்கும் இதற்கு உதவியாக இருந்த உங்களுக்கும் (ஊடகங்கள்) எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ராம்குமார், சுவாதி பயணம் செய்து கொண்டிருக்கும்போதும் சரி, வீட்டிற்கு போகும்போதும் சரி பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். அவரோடு இவர் பழக வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கவே இத்தகைய நிகழ்வு நடந்திருக்கிறது. முழு விவரமும் விசாரணைக்கு பின்னர் வெளியே வரும். இந்த கொலையில் ராம்குமாருக்கு யாரும் உடந்தையாக செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் படத்தை இப்போது வெளியிட முடியாது" என்றார்.

ராம்குமாரை கைது செய்தது எப்படி, குற்றவாளியை நெருங்கியது எப்படி உள்ளிட்ட கேள்விகளுக்கு காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், வழக்கு விசாரணையில் இருப்பதால் இது தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது என்று பதில் அளித்தார்.

எஸ்.மகேஷ்

படம்: ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ