Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாஸ்மாக் டூ டாமின்! -கோட்டையைக் கலக்கும் 'மெகா' பிளான்

'அரசின் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை, கனிமவளத்துறைக்கு மாற்றும் முடிவில் அரசு திட்டம் வகுத்திருக்கிறது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். ' 500 கடைகளை மூடியதினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, இப்படியொரு திட்டத்தை செயல்படுத்தப் போகின்றனர்' என்கின்றனர் டாஸ்மாக் அதிகாரிகள்.

சட்டமன்றத் தேர்தலில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. அதற்கேற்ப ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, 500 கடைகள் மூடப்படும் என அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் 500 கடைகளைப் பட்டியலிட்டு மூடுவிழா நடத்தப்பட்டது. இந்தக் கடைகளில் பணிபுரிந்த 2,500 ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு சரியான மாற்றுப் பணியிடம் வழங்கப்படவில்லை. தற்போது இவர்கள் டாஸ்மாக் குடோன், அலுவலக வேலை, பறக்கும் படை உள்ளிட்ட பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 'ஐநூறு கடைகள் மூடப்பட்டதால், அரசுக்கு 252 கோடி ரூபாய் ஆண்டுக்கு நஷ்டம் ஏற்படும் எனக் கணக்கிட்டுள்ளனர். இதனை ஈடுகட்டத்தான் கனிமளவளத்துறையை குறிவைத்துள்ளனர் அதிகாரிகள்' என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.

அவர் நம்மிடம், " தேர்தல் பிரசாரத்தில் தாதுமணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்தார் முதல்வர். இந்தத் துறையில் தனியார்கள் சிலர் ஈட்டும் லாபத்தைக் கணக்கிட்டாலே, மது வருவாயை அரசு எதிர்நோக்க வேண்டியதில்லை என மது எதிர்ப்பாளர்கள் பேசி வந்தனர். தாதுமணல் விற்பனையைப் பொறுத்தவரையில், அரசு இன்னமும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. ஆனால், மாநிலம் முழுவதும், தமிழ்நாடு கனிமவள நிறுவனத்திற்கு(டாமின்) ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். இதுகுறித்து டாமின் நிறுவன அதிகாரிகள், தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், ' தாதுமணல் துறையைக் கவனிக்க தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தேவையில்லை. கண்காணிப்பு, அலுவலகப் பணி, களப் பணி உள்ளிட்டவற்றுக்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பட்டதாரி ஊழியர்கள் நிரம்பி உள்ளனர். இவர்களை டாமின் நிறுவனத்திற்கு மாற்றினால், ஆயிரம் கோடிக்கும் அதிகமாக லாபம் சம்பாதிக்க முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளை மூடியதால் ஏற்பட்டுள்ள இழப்பை, டாமின் மூலம் எளிதாக ஈடுகட்ட முடியும் என்பதால், இந்தப் பரிந்துரையை அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தொகுப்பு ஊதிய அடிப்படையில் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதே அடிப்படையில் டாமின் நிறுவனத்தில் இவர்களைப் பணியமர்த்தலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது" என்றார் விரிவாக.

" டாஸ்மாக் கடைகளை மூடியதால், உரிய பணியிடம் வழங்கப்படாமல் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தவித்து வருகின்றனர். அரசுத் துறைகளில் எங்கெல்லாம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவோ, அந்த இடங்களை டாஸ்மாக் ஊழியர்களின் கல்வித் தரத்தைப் பொறுத்த நிரப்ப வேண்டும். அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துறை ரீதியான தேர்வுகளை நடத்தி, பணியிடங்களை நிரந்தரம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநரிடமும், துறையின் அரசு செயலரிடமும் மனு கொடுத்திருக்கிறோம்" என்கிறார் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பழனிபாரதி.

போதை வியாபாரத்தில் இருந்து தெளிய வேண்டும் என்றே பல்லாயிரக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்கள் விரும்புகின்றனர். அரசு உருவாக்கப் போகும் மாற்றுப் பணியிடத்தை அவர்கள் ஆவலோடு எதிர்நோக்குகின்றனர்.

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ