Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவையில் 2 லட்சம் சிம்கார்டுகள் போலி ஆவணங்களால் பெறப்பட்டவையா?

கோவை: தனிநபர்களின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி எண்ணற்ற சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதாக கோவை போலீசாருக்கு புகார்கள் குவிந்துள்ள நிலையில், இவ்வாறு புழக்கத்தில் விடப்பட்ட சிம் கார்டுகளின் எண்ணிக்கை சுமார் 2 லட்சம் இருக்கலாம் என காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கணக்கு காட்டுவதற்காக, தனிநபர்களின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் போலி சிம்கார்டுகளை பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக கோவை, செல்வபுரம் அருகே உள்ள குமாரபாளையத்தைச் சேர்ந்த எஸ். கநந்தினி என்ற பெண், காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் குற்றப்பிரிவுக்குச் சென்று நேற்று புகார் தெரிவித்திருந்தார். ஆனால், சைபர் கிரைம் குற்றப்பிரிவின் கீழ் இந்த வழக்கு வராது என்பதால், அவரை குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்குமாறு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸில் அவர் புகார் அளித்தார்.

அந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தனது ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி போலி சிம்கார்டுகள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில், பீளமேடு பி.ஆர்.பி. கார்டன் நகரைச் சேர்ந்த அனூப் பாபு என்பவர் புகார் அளித்தார்.

அதில், "எனது வாக்காளர் அடையாள அட்டை, எனது மனைவி, மகள் ஆகியோரின் ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 25 சிம்கார்டுகள் போலியாக வாங்கப்பட்டுள்ளன. இது சமீபத்தில் எனக்கு தெரிந்தது. இது தொடர்பாக டிராய் அமைப்புக்கு கடிதம் எழுதினேன். இதையடுத்து, அந்த சிம்கார்டுகளை அவர்கள் முடக்கினர்.

இதேபோல், கோவை பீளமேடு பிஆர்பி கார்டன் நகரில், சுமார் 85 குடும்பங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18-ம் தேதி காங்கேயம், எல்.ஜி.ஜி.எஸ் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், எங்கள் குடியிருப்புகளைச் சேர்ந்த நபர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி 585 சிம்கார்டுகள் வேறு மாநிலங்களைச்சேர்ந்த நபர்களுக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அந்த சிம்கார்டுகள் அனைத்தும் பயன்பாட்டில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே, பீளமேடு பகுதியில் உள்ள துரைசாமி லே அவுட், மங்குத்தாய் அம்மன் கோயில், கிரி அம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் முகவரியில் சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகளை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் புழக்கத்தில் விட்டுள்ளது. எனவே, பயன்பாட்டில் உள்ள சிம்கார்டுகளை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனக் கூறி இருந்தார்.

அவரது புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனக்கு தெரிந்து சுமார் 2 லட்சம் போலி சிம்கார்டுகள் கோவையில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கக்கூடும் என்று பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவன முன்னாள் ஊழியர் ஒருவர், கோவை காவல்துறையிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம்கார்டு விற்பனையில் ஈடுபடும் டீலர்களின் கடைகளில் போலீஸார் ஆய்வு நடத்தியதாக தகவல் பரவியது. இருப்பினும், போலீஸ் தரப்பில் தாங்கள் எந்த ஆய்வும் நடத்தவில்லை எனத் தெரிவித்தனர். இது குறித்து மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.லக்ஷ்மி கூறும்போது, நாங்கள் இதுவரை எந்த ஆய்வும் நடத்தவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதனிடையே போலி சிம்கார்டு விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறிக் கொண்டு வரும் புகார்தாரர்கள், நேராக சைபர் கிரைம் போலீஸூக்குச் சென்று புகார்களை அளிக்க முற்பட்டு வருகின்றனர். ஆனால், இது போன்ற குற்றம் சைபர் கிரைம் குற்றத்தின் கீழ் வராது என கோவை சைபர் கிரைம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜன் தெரிவித்தார்.

"கணினி, செல்போன் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி மோசடி நடந்தால்தான் சைபர் கிரைம் குற்றப்பிரிவுக்கு கீழ் வரும். போலி சிம்கார்டு வழக்குகள் என்பது ஒருவரின் ஆவணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்குவதாகும். இது போன்ற வழக்குகள் மோசடி, ஆவணங்களை போலியாக தயாரித்து ஏமாற்றுதல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ்வருகின்றன. எனவே, இந்த புகார்கள் குற்றப்பிரிவின் கீழ்தான் விசாரணை நடத்தப்படும். எனவே, இது போன்ற புகார்களை சைபர் கிரைம் பிரிவுக்கு கொண்டு வந்து பொதுமக்கள் அலைய வேண்டாம். அவர்கள் சார்ந்துள்ள பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு போலீஸிலேயே கொடுக்கலாம்" என்று அவர் மேலும் கூறினார்.

ச.ஜெ.ரவி,
.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ