Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூடுவிழாவா? மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை: பஞ்சாயத்து அமைப்புகளுக்கு மூடு விழா நடத்த நினைப்பதாக மத்திய அரசுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''அண்ணல் காந்தியடிகள், இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று சொன்ன உயர்ந்த கருத்தியலுக்கு மூடு விழா நடத்துகின்ற வகையில், மத்திய பா.ஜ.க அரசு ஜனநாயகத்தின் வேர்களாகக் கருதப்படுகின்ற பஞ்சாயத்து அமைப்புக்களை அடியோடு ஒழித்துக் கட்டுகின்ற அளவுக்கு முடிவெடுத்திருப்பதாக மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருப்பது மிகவும் வேதனையைத் தருகின்ற செய்தியாகும்; முன்னோக்கி வரும் ஜனநாயகத்தைப் பின்னோக்கி இழுக்கும் எதிர்மறை முயற்சியாகும்.

மக்களாட்சியில் அரசு நிர்வாகத்தை ஆலமரத்துக்கு ஒப்பிட்டால், அதன் வேர்களாகவும், விழுதுகளாகவும் உள்ளாட்சி அமைப்புகள் விளங்குகின்றன. மனிதனோடு ஒப்பிடும்போது அந்த அமைப்புகள் நாடி நரம்புகளாகவும், உயிர் மூச்சாகவும் இருக்கின்றன. அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்புகள் ஒரு சில ஆண்டுகள் தமிழகத்தில் செயல்பட முடியாமல் மூர்ச்சையாகிக் கட்டுண்டு கிடந்து, நான்காவது முறையாகக் கழக ஆட்சி 1996-ம் ஆண்டு அமைந்த பிறகு தான், உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகள், நகர் மன்றங்கள், ஊராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்தி, 1,16,747 மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சிகளில் நிர்வாகப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ளும் உன்னதமான நிலைமை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் முதன் முறையாக மகளிருக்கு உள்ளாட்சிகளின் அனைத்துப் பதவிகளிலும் 33 விழுக்காடு ஒதுக்கீடு செய்ததின் காரணமாக 44,143 பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளிலே பதவியேற்கும் உயரிய நிலையையும் கழக ஆட்சி செய்து காட்டியது.

இந்தியாவின் இளந்தலைவர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, ஜனநாயகத்தின் வேர்களைச் செழுமைப்படுத்திடும் நோக்கில், 'பஞ்சாயத்து ராஜ்' சட்டத்தைக் கொண்டு வந்தார் எனினும், இந்தச் சட்டம் அவருடைய மறைவுக்குப் பிறகு தான் 73-வது அரசியல் சட்டத்திருத்தமாக நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பு உள்ளாட்சிகள் இயங்கினாலும், அவை அனைத்தும் கிராமப்புறங்களில் உள்ள பழமைவாத ஆதிக்கச் சக்திகளின் கட்டுப்பாட்டிலே தான் இயங்கி வந்தன. ஆனால், 73-வது அரசியல் சட்டத்திருத்தத்திற்குப் பிறகு, அதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றில் சில சங்கடங்கள் இருந்தாலும், சமூக ரீதியாகப் பின்தங்கிய நிலையிலே உள்ள மக்களும், தங்களுடைய கிராமங்களின் நிர்வாகத்தை வழி நடத்தக் கூடிய தலைமைப் பதவியை வகிப்பதற்கான வாய்ப்புகள் உருவாயின. இந்த நிலையில் தான், இந்த பஞ்சாயத்து அமைப்புகளின் கால்களை ஒடித்து முடமாக்கி ஒழித்துக் கட்டும் வேலையில் மத்திய பா.ஜ.க அரசு இறங்கி உள்ளது. ஏனெனில், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மதவாதப் பாசிசச் சிந்தனையைப் பரப்பிட இந்த உள்ளாட்சி அமைப்புகள் இடையூறாகவும், தடையாகவும் இருக்கின்றன.

மத்திய பா.ஜ.க அரசின் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மிகப் பெரிய அளவில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிதி குறைக்கப்பட்டது. குறிப்பாக, பஞ்சாயத்து அமைப்புக்கள் மூலமாகச் செயல்படுத்தப்படும் பின்தங்கிய பகுதிகளுக்கான மானிய நிதி மற்றும் ராஜீவ் காந்தி பெயரிலமைந்த முக்கிய திட்டங்களை பா.ஜ.க அரசு மூடி விட்டது. இதனால், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும் விரைவில் மூடப்பட்டு, அது ஊரக வளர்ச்சியின் கீழ் இயங்கும் பல துறைகளில் ஒரு துறையாக மாற்றப்படலாம் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு 7 ஆயிரம் கோடி ரூபாய் என்பதிலிருந்து இந்த ஆண்டு வெறும் 96 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது, பஞ்சாயத்து அமைப்புகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதைப் போலத் தான் 2014-ம் ஆண்டு பா.ஜ.க அரசு அமைந்ததும், பண்டித நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட மத்திய திட்டக் குழுவையே கலைத்து விட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், அந்த நிதி ஆயோக் என்ன செய்யப்போகிறது என்பதைக் கூட இன்னும் தீர்மானிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் விஷயத்திலும் பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்கப் போகிறார்கள் என்ற செய்திகள் வந்து கொண்டுள்ளன.

ஒரு நாளேட்டில், அருமனையிலிருந்து ஒருவர் இதே பிரச்னைக்காக கடிதம் ஒன்றும் தீட்டியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், பஞ்சாயத்து ராஜ் துறையின் முக்கியத்துவத்தைக் குறைத்திட மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சி, பிரதமர் மோடியின் முழக்கமான “Minimum Government, Maximum Governance” (குறைந்த பட்ச அதிகாரம், அதிகப் பட்ச ஆளுமை) என்பதற்கு நேர் எதிரானது என்று அவர் தனது கடிதத்திலே குறிப்பிட்டிருப்பது தான், இந்தப் பிரச்னையிலே இந்திய மக்களின் ஏகோபித்த கருத்தாக இருந்திட முடியும். இதனை இனியாவது பா.ஜ.க அரசு, குறிப்பாக மாதம் ஒரு முறை 'மன்-கி-பாத்' என்ற முறையில் நாட்டு மக்களுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மனதிலே கொண்டு மக்களாட்சியின் உயிர் மையமான உள்ளாட்சி அமைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் முடிவினை உடனடியாக மாற்றிக் கொண்டு, அதனை நாட்டிற்கும் வெளிப்படையாகத் தெரிவிக்க முன் வர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close