Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு... இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வதும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 29 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 104 படகுகள் இலங்கை அரசின் பிடியில் உள்ளது. சிறையில் உள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர், பிரதமருக்கு பல முறை கடிதம் எழுதியும் ஒன்றும் நடக்கவில்லை.

இதனிடையே கடந்த 29-ம் தேதி தி.மு.க எம்.பி திருச்சி சிவா தலைமையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர் சங்க தலைவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து மீன்வர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தினர். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், தமிழக மீனவர்கள் இடையூறு இன்றி மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் வகையில் மாற்று திட்டங்கள் ஏற்படுத்துவதுடன் பாரம்பரிய பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாக இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தையை தொடங்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி கொடுத்த 2 நாட்களுககுள்ளாகவே இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளது. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்து உள்ளனர். மேலும், தங்களிடம் பிடிபட்ட நம்புரெத்தினம் என்பவருககு சொந்தமான விசைபடகினையும், அதில் மீன்பிடிகக சென்ற கணேஷ், மாரிமுத்து, தனம், வேலாயுதம், சாரதி ஆகிய 5 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
 
ஏற்கனவே, தமிழக மீனவர்கள் 29 பேர் இலங்கை சிறையில் உள்ள நிலையில், மேலும் 5 மீனவர்கள் சிறை பிடித்து செல்லப்பட்டிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
-இரா.மோகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ