Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாக்கெட்டில் பிளேடுடன் வலம் வந்த ராம்குமார் வளைக்கப்பட்ட திக்... திக்... நிமிடங்கள்!

கொலை வழக்கு தொடர்பாக தன்னைத் தேடி போலீஸ் வந்தால், தற்கொலை செய்துகொள்வதற்கு தயாராக கொலை நடந்த நாளிலிருந்து எப்போதும் தன் பாக்கெட்டில் ஒரு பிளேடுடன் ராம்குமார் வலம் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை இளம்பெண் சுவாதி படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ராம்குமாரை, தென்காசி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் உயிருடன் பிடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் கிளம்பியது போலீஸ் டீம்! 'ஆப்ரேஷன் ராம்' என்று பெயரிட்டு, ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்தவர் நெல்லை டி.ஜ.ஜி தினகரன். மாவட்ட எஸ்.பி விக்ரமன் அவசரமாக தனிப்படையை அமைத்திருக்கிறார்.

அதில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ - சகாய செல்வின், தலைமைக்காவலர் காளிமுத்து, போலீஸ்காரர்கள் ஷேக், சண்முகநாதன் ஆகியோர் மாறு வேடத்தில், நள்ளிரவு நேரத்தில் மீனாட்சிபுரத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அதன் பிறகு நடந்தவற்றை தனிப்படையில் இடம்பெற்றிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம்.

“அன்றைக்கு இரவு சென்னை போலீஸிடமிருந்து ரகசிய தகவல் வந்தது. அவர்கள் சொன்ன முகவரியில் உள்ள நபரை உடனே பிடிக்கவேண்டும் என்பதுதான் அசைன்மெண்ட். அந்த வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பது கூட எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. இருந்தாலும், ஒருவித தைரியத்தில்தான் களத்தில் இறங்கினோம். கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்தோம். கும்மிருட்டு நிலவியது. செல்போன் லைட் வெளிச்சத்தில் அந்த குறிப்பிடட வீட்டை முற்றுகையிட்டோம். வீடியோ போட்டோகிராபர் சகிதம் தயாராகவே சென்றிருந்தோம். வீட்டின் நாலாபுறமும் போலீஸாரை நிறுத்தினோம். திடீரென வீட்டிற்குள் இருந்து யாராவது தப்பி ஒடிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

ஆனால் அவர்கள் வீட்டு நாய், எங்கள் டீமை பார்த்ததும் குரைக்க ஆரம்பித்துவிட்டது. வீட்டின் உள்ளே ராம்குமார் படுத்திருந்தான் போலிருக்கிறது. வராந்தாவில் மற்றவர்கள் படுத்திருந்தனர். எங்களின் மூவ்மெண்டை பார்த்தும், 'போலீஸ்..போலீஸ்' என்று ஒரு குரல் கேட்டது. அதைக்கேட்டதும், ராம்குமார் பின்பக்க கதவை திறந்துகொண்டு  ஒடிவிட்டார்.

இதை எதிர்பார்த்து பின் பக்கம் காத்திருந்த எங்கள் படையினரின் கண்ணில் ராம்குமார் முதலில் தென்படவில்லை. கும்மிருட்டு... புதர்கள் வேறு! சில செகண்டுகள்தான். போலீஸுடம் சிக்காமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற திட்டத்தில், சட்டை பாக்கெட்டில் எப்போதும் பிளேடுடன் வலம் வந்திருக்கிறார் ராம்குமார். இது எங்களுக்கு தெரியாது. ஒரு உருவம் வீட்டிற்குள்ளே இருந்து வெளியே ஒடிவருவதைப் பார்த்த எங்கள் படையினர் உஷாரானார்கள்.

பிளேடை எடுத்து, கழுத்தை அறுத்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டார். ரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டது. மீண்டும் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொள்ள முயல...சட்டென சுதாரித்து அவர் கையை பிடித்து தடுத்துவிட்டனர்.

இதெல்லாமே வீடியோவில் பதிவு செய்துள்ளோம். அவரது குடும்பத்தினர் முன்னிலையில்தான் எல்லாமே நடந்தது. ராம்குமாரின் இந்த எதிர்பாராத செயலால் நாங்கள் பதறிப்போய்விட்டோம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றோம். அவர் கழுத்தில் உள்ள முக்கியமான நரம்பு கட் ஆகவில்லை என்று டாக்டர் கூறிய பிறகுதான் நிம்மதி அடைந்தோம்

ராம்குமாரின் கேரக்டரை விசாரித்தீர்களா?

கிராமத்தில் ஊமைக்குசும்பன் என்பார்களே...அப்படித்தான் ராம்குமாரை சொல்கிறார்கள். யாருடனும் பேசாத டைப். ஆனால், ராம்குமாரின் அறையில் சுவாதி சம்மந்தப்பட்ட செய்திகள் வெளியான தினப்பத்திரிகைகளை வாங்கி மார்க் பண்ணி வைத்திருந்தார். பகலில் வீட்டிற்கு வருவதில்லை. கிராமத்தின் வயல் வரப்பு பக்கம் போய் பதுங்கியிருக்கிறார். இரவு ஆனதும் வீட்டிற்கு வந்திருக்கிறார். சுவாதியின் செல்போனை அவரது அறையிலிருந்து கைப்பற்றினோம். அது ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. சென்னை மேன்சனுக்கு பணம் செலுத்தியதற்கான ரசீதுகளை கைப்பற்றினோம். இந்த வீட்டில் இருந்த அரிவாளைத்தான் ராம்குமார் சென்னைக்கு எடுத்துப்போயிருக்கிறார்.

ராம்குமாரை போலீஸ் தேடும் தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிந்திருந்ததா?

நிச்சயமாக தெரிந்திருக்கும்.  டி.வி, பத்திரிக்கைகளில் ராம்குமார் படம் வெளியானதை பார்த்திருக்காமல் இருக்கவே முடியாது. எங்கள் படையினர் வீட்டிற்குள் நுழைந்தபோது, 'போலீஸ் வந்திருச்சு...' என்று கத்தி ராம்குமாரை ஏன் அலர்ட் செய்யவேண்டும்? அப்படியானால், போலீஸ் வருகையை அவர்கள் எதிர்பார்த்துதான் இருந்திருக்கவேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

ராம்குமார் மீது தற்கொலை முயற்சி வழக்குப் போட்டிருக்கிறீர்களா?

ஆமாம். ஐ.பி.சி. 309 கீழ் ராம்குமார் மீது வழக்குப் போட்டிருக்கிறோம். தற்போது சென்னை போலீஸ் அவரை கைது செய்திருக்கிறது. அவர்கள் விசாரணை முடிந்ததும், தென்காசி அழைத்துவந்து சட்ட சம்பிரதாயங்களை நாங்கள் செய்வோம். கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம். இந்த தற்கொலை முயற்சி வழக்கிலும் நாங்கள் துரிதமாக செயல்பட்டு ராம்குமாருக்கு  3 முதல் 7 வருடங்கள் சிறைத்தண்டனை வாங்கிக்கொடுப்போம்” என்றார் அந்த அதிகாரி உறுதியுடன்.
 
- ஆர்.பி

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ