Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: புதிய சட்ட மசோதா தாக்கலாகிறது!


மிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பான மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இந்த புதிய சட்ட மசோதா, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்களின் பாரம்பர்ய வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்  நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டி, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என விலங்குகள் நலவாரியம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஜல்லிக்கட்டுக்குக் கடந்த 2007ல் தமிழக அரசு அங்கீகாரம் அளித்து சட்டம் இயற்றியது. இதையடுத்து 2014 வரை பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்து, கடந்த ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மாட்டுவண்டி பந்தயங்களுக்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழக அரசு ஒரு பக்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதே நேரத்தில் மத்திய அரசும், தனது பங்கிற்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கும் வகையில் கடந்த ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில், பிராணிகள் நல வாரியத்தைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், தடை செய்யப்படும் பட்டியலில் இருந்து காளையை நீக்காமல், ஜல்லிக்கட்டு காளைக்கு விலக்கு அளிப்பது என்பது, சட்ட ரீதியாக ஏற்க முடியாது என்றும் கூறி மத்திய அரசின் அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது. இதனால், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இனிக்காத பொங்கலாகவே இருந்தது.

தற்போது, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பான மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு, சட்ட அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதிலும் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் வீரர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ