Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திராவிடர்களுக்கு பாதுகாப்பான இயக்கம் தி.மு.க.! - கருணாநிதி விளக்கம்

திருவாரூர்: திராவிடர்களுக்கு பாதுகாப்பான இயக்கம் தி.மு.க. என்று திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 93வது பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு பேசும்போது, ''திருவாரூரில் இன்று நடப்பது விழாவா அல்லது மாநாடா என்ற அளவுக்கு எனது மனதில் மகிழ்ச்சி ததும்புகிறது. இந்த விழா சீரும், சிறப்போடும், எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் வகையில் நடைபெறுகிறது.

என்னை பொறுத்தவரை நான் நீண்ட நேரம் பேச வாய்ப்பில்லாத நிலை உள்ளது. காரணம் எனக்கு தொண்டை ஒத்துழைக்க மறுக்கிறது. தொண்டை மறுத்தாலும் நான் ஆற்ற வேண்டிய தொண்டை நிறுத்தப்போவது இல்லை. நான் ஆற்ற வேண்டிய தொண்டை ஆற்றியே தீருவேன். தி.மு.க. வெற்றி விழாவை கொண்டாட முடியாமல் தமிழக மக்கள் 1 சதவீதம் தவற விட்டுவிட்டார்கள். அதனால் ஆட்சி அமைக்கும் விழாவாக அல்லாமல் இந்த விழாவை நடத்துகிறோம்.

திருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக மண்ணின் மைந்தர் என்ற உரிமையுடன் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 473 ஓட்டுக்கள் அளித்து வெற்றி வாய்ப்பை கொடுத்துள்ளீர்கள். திருவாரூர் தொகுதியில் தி.மு.க.வுக்கு அளித்த வெற்றியை இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் நமக்கும், வெற்றி பெற்ற அ.தி.மு.க.வுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 1.1 சதவீதம் தான். இதை எண்ணிப்பார்க்கும்போது நமக்கு கிடைத்தது தோல்வியே அல்ல. இதுபோன்ற தோல்வி தான் அடுத்த வரும் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையும். இப்போது ஏற்பட்டது தோல்வியே அல்ல. தி.மு.க.வுக்கு கிடைத்து வெற்றி தான். எனவே எந்த தொண்டனும் சோர்வடையாமல் தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

மத்திய அரசின் செல்வாக்கை பெற்று, பிரதமர் ஆதரவை பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை. ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து சக்திகளும் செயல்பட்டன. கடந்த தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள்ளேயே பிரதமர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தந்தி அனுப்பியது ஏன்?. இந்தியாவில் நடந்த தேர்தல்களில் தமிழகத்தில் மட்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பல சக்திகள் இணைந்து செயல்பட்டன.

கடந்த தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள்ளேயே பிரதமர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தந்தி அனுப்பியது ஏன்?. இந்தியாவில் நடந்த தேர்தல்களில் தமிழகத்தில் மட்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பல சக்திகள் இணைந்து செயல்பட்டன. தி.மு.க.வை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று எண்ணினார்கள். என்ன காரணம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திராவிட இயக்கம் வளரும். திராவிட இயக்கம் வளர்ந்தால் திராவிடன் தோள்தட்டி நிற்பான். அதனால் தான் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று கருதினார்கள்.

ஆனால் உண்மையிலேயே வீழ்த்தவில்லை. வீழ்த்த முடியாது. தி.மு.க.வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. தி.மு.க. 4 பேரை, 5 பேரை வைத்துக் கொண்டு நாங்களும் தேர்தலில் நிற்கிறோம் என்று கூறும் இயக்கம் அல்ல. இந்த இயக்கம் வலிமையான, வளமான, பகுத்தறிவு இயக்கம். பெரியாரால் வளர்க்கப்பட்டு, அண்ணாவால் வாழவைக்கப்பட்டு, இந்த இயக்கத்தை எங்களைப்போன்ற தொண்டர்களால் தொடர்ந்து வளர்க்கும் இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாது.

அவர்கள் பெற்ற வெற்றி, நமது தோல்விக்கு காரணம் என்று யாரும் கருதாதீர்கள். தோல்வி என்ற படிக்கட்டில் இருந்து தான் வெற்றி என்ற படிக்கட்டை மிதிக்க வேண்டும். அது சில ஆண்டுகளில் ஏன் சில மாதங்களில் கூட நடைபெறலாம். அதற்கு நாம் நமது உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்கிறோம். தி.மு.க. சமுதாய இயக்கம், திராவிடர்களுக்கு பாதுகாப்பான இயக்கம். இந்த இயக்கத்தை அழித்து விடுகிறேன் என்று யார் சவால் விட்டாலும் அழிக்க முடியாது.

தேர்தலை ஒட்டி ரூ.570 கோடி கண்டெய்னர் லாரியில் சென்றது யாருடையது என்று சட்டப்பேரவையில் ஸ்டாலின், துரைமுருகன் போன்றவர்கள் கேட்டதற்கு, பதில் சொல்லாமல் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதையடுத்து, கட்சி வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் டி.எஸ்.பி., விஷ்ணுப்பிரியா கொலைக்கும் உரிய விசாரணை வேண்டும். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நீதிமன்றம் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நீதியே, நீயும் இருக்கின்றாயா.. இல்லை கொலைக்களத்தில் இறந்து விட்டாயா என்று கோவலன் இறந்தபோது கவுந்திஅடிகள் பாடியது போன்றுதான் சொல்லத்தோன்றும்" என்றார்.

படங்கள்: க.சதீஷ்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close