Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெடிக்க காத்திருக்கும் வெடிபொருள் குடோன்கள்... ஆபத்தை அறியாத சிவகாசி மக்கள்!

சிவகாசி அருகே அனுமதியின்றி இயங்கிவந்த பட்டாசு குடோனினில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியானார்கள். அருகிலிருந்த வீடுகள் மற்றும் கடைகள் தரைமட்டமாகின. இந்த சம்பவத்தின் மூலம் சிவகாசி நகரில் எது நடந்து விடக்கூடாது என உள்ளூர் மக்கள் அஞ்சிக்கொண்டிருந்தார்களோ, அந்த சம்பவம் நடந்தே விட்டது.

சிவகாசி நகருக்குள், ஆபத்தான பட்டாசு மூலப்பொருள்களை அனுமதியின்றி பதுக்கி வைத்து வியாபாரம் செய்யும் கடைகள் ஏராளமாக உண்டு. சிவகாசி அருகே உள்ள நாராணாபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் ( 40). இவர் சிவகாசி பை-பாஸ் சாலையில், 'முத்து ஏஜென்சி' என்ற பெயரில் பட்டாசு சில்லரை விற்பனைக் கடை நடத்தி வந்தார்.

சில்லரை விற்பனைக் கடைக்கென அரசின் லைசென்ஸ் பெற்று கடையைத் தொடங்கிய ஜெகதீசன்,  பட்டாசுக் கடையை ஒட்டி குடோன் ஒன்றையும் திறந்தார். அதில் அனுமதியின்றி பட்டாசு உற்பத்திக்கு தேவைப்படும் மிகவும் ஆபத்தான  அலுமினியம் பவுடர், வெடி உப்பு, பாஸ்பரஸ், சல்பர் வெடி உப்பு போன்றவற்றை சேமித்து வைத்து, கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.

அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பவர்கள், கள்ளத்தனமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்கள்தான் இவரது வாடிக்கையாளர்கள். இது தவிர மிகவும் ஆபத்தான ‘‘மணி மருந்தையும் ’’ தயாரித்து குடோனில் ஸ்டாக் வைத்து, கள்ளத்தனமாக விற்றிருக்கிறார்.
 
கடந்த ஜூலை 2 ம் தேதி, ஜெகதீசனின் குடோனில், ஊழியர்கள் கள்ளத்தனமாக வெடி மருந்துகளை தயாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது மூலப்பொருட்கள் இருந்த பகுதியில், இலேசாக புகை கிளம்பியதாக சொல்லப்படுகிறது. உடனே ஊழியர்கள் ஜெகதீசனிடம் தகவலைச் சொல்ல, அதிர்ச்சி அடைந்த அவர், அவசர அவசரமாக கடையைப் பூட்டி விட்டு தலைமறைவானார்.

அன்று இரவு 10 மணிக்கு, குடோனில் இருந்த மூலப்பொருள்கள் வெடிக்கத் தொடங்கின. இதில் ஜெகதீசனின் பட்டாசுக் கடை, குடோன், அதை ஒட்டியுள்ள 5 கடைகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் அந்த காம்பளக்ஸின் பின்புறம் இருந்த 5 வீடுகளும் இடிந்து விழுந்து தரை மட்டமாகின. கட்டடங்கள் வெடித்து சிதறியதில், சிவகாசி பை- பாஸ் ரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்த  உசேன் காலனியைச் சேர்ந்த தங்கவேலு, அவரது உறவினரான ராமேஸ்வரத்தை சேர்ந்த முத்தையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அப்போது அந்த வழியாக டூ வீலரில் கடந்து சென்ற பலரும் பலத்த காயமடைந்தனர்.
 

தகவல் அறிந்துவந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கப் போராடினர். குடோனில் இருந்த பட்டாசு மூலப்பொருள்கள் தொடர்ந்து வெடித்தன. டன் கணக்கில் ஆபத்தான மூலப்பொருள்கள் அங்கே இருந்ததால், விபரீதத்தை உணர்ந்த அதிகாரிகள் அந்த குடோனை சுற்றியுள்ள பாரதிநகர், சாமிபுரம் காலணி, மீனாட்சிபுரம் ஆகிய தெருக்களில் இருந்த 300க்கும் அதிகமான குடும்பங்களை அவசர அவசரமாக வெளியேறச்செய்து, சிவகாசியிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.

3 தினங்களுக்குப் பின் இப்போதுதான் தீ ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இதையடுத்து கட்டட இடிபாடுகளை அகற்றி, வெடிபொருள்களை கைப்பற்றி அழிக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் இறங்கியுள்ளனர்.

தலைமறைவான ஜெகதீசனை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் வீட்டில் போட்டதை போட்டபடி விட்டுவிட்டு,  உயிருக்கு பயந்து கடந்த 5 நாளாக திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 300 குடும்பங்கள், வழக்கமான பணிகளில் ஈடுபட முடியாமல் முடங்கியுள்ளனர். அவர்களது குழந்தைகள், பள்ளிக்கு செல்ல  முடியாமலும், ஆண்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். வருவாய்த்துறையினர் அவர்களுக்கு சாப்பாடு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.
 

ஆனாலும் கடந்த 5 நாட்களாக திக்...திக்.. என்று பீதியில் உறைந்து போயிருக்கின்றது சிவகாசி.
இது தொடர்பாக பட்டாசு ஆலை உற்பத்தியாளர்களிடம் பேசினோம். அவர்கள் சொன்ன தகவல்கள் அத்தனையும் 'பகீர்' ரகம்.

“அரசு அனுமதி பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளிலேயே, பட்டாசு உற்பத்தி செய்யும்போது விபத்து ஏற்பட்டு உயிர்ப் பலிகள் ஏற்படுகின்றன. அதுபோல் பட்டாசு ஆலைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளிலேயே பட்டாசு மூலப்பொருள்களை ஸ்டாக் வைத்திருப்போம். ஆனால் சிவகாசி நகரில் இதுபோன்று பலர் கள்ளத்தனமாக பட்டாசு மூலப்பொருள்களை டன் கணக்கில் இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறை, வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் கண்டு கொள்வதில்லை.
 
ஜெகதீசனுக்கு சொந்தமான ஒரு குடோனில் உள்ள மூலப்பொருள்கள் வெடித்திலேயே இவ்வளவு சேதம் என்றால், சிவகாசியில் தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி இதுபோல் இயங்கும் கள்ளத்தனமான குடோனில் விபத்துக்கள் ஏற்பட்டால் எவ்வளவு உயிர்ப்பலி ஏற்படும் என்ற ஆபத்தை நினைத்து பார்த்தாலே குலை நடுங்குகிறது.

மொத்தத்தில் சிவகாசி நகரின் அடிவயிற்றில் ஆபத்தான பெரிய வெடிகுண்டு கட்டி வைக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அது என்றைக்கு வெடித்து தனது கோரமுகத்தை காட்டப்போகிறதோ தெரியவில்லை. இந்த ஆபத்தை  உணராமல்தான் சிவகாசி உள்ளூர்வாசிகள், தினமும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்” என்று பகீரிட வைத்தனர்.

- எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close