Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேயர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் முறை அமல்! - சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி மேயர்களை, கவுன்சிலர்களே தேர்வு செய்யும் முறை அமலுக்கு வந்ததுள்ளது. இது தொடர்பான சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழ்நாடு மாநகராட்சி சட்டம், நகராட்சிகள் சட்டம், ஊராட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு மாநகராட்சிகள் சட்டத்திருத்த மசோதாவில், 'சில மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவ்வளவாக மாநகர மேயருக்கு கிடைப்பதில்லை. அதனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாமன்ற உறுப்பினர்களால் மாநகர மேயரை தேர்ந்தெடுப்பது என்று அரசு முடிவு செய்திருக்கிறது' என்று கூறப்பட்டது.

அதுபோல, நகராட்சிகள் சட்டத்திருத்த மசோதாவில், 'தற்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை, தற்போதுள்ள ஆட்சிப்பகுதி அல்லது பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பப்பட வேண்டிய மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல், ஏற்கனவே இருப்பது போலவே நடத்தலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது' என்று கூறப்பட்டது.

இதுபோன்ற ஷரத்து, ஊராட்சிகள் சட்டத்திலும் கொண்டுவரப்பட்டு, அதற்கான சட்டத்திருத்த மசோதா, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்தங்களை, எதிர்க்கட்சியான தி.மு.க. எதிர்த்தது. கடும் ஆட்சேபனை இருந்ததால், எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்த சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஜூன் 22-ம் தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழ் நேற்று தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அந்த அரசிதழில் 3 சட்டத்திருத்தங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி, திருத்தப்பட்ட சட்டங்கள் அமலுக்கு வந்துவிட்டன. எனவே மாநகராட்சி மேயர்களை இனி கவுன்சிலர்களே தேர்வு செய்வார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ