Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராம்குமார் உயிருக்கு ஆபத்தா? -பதறுகிறார் வழக்கறிஞர்

சுவாதி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராம்குமார் குறித்து வெளியாகும் தகவல்கள், பெருத்த அதிர்வலையை ஏற்படுத்துகிறது. 'ராம்குமாரைக் கொல்வதற்கான முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர்' என அதிர வைக்கின்றனர் வழக்கறிஞர்கள்.

நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கடந்த 24-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை  கைது செய்ய முயன்றபோது,  கழுத்தறுக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்த அவரை, நெல்லை மருத்துவமனையில் சேர்த்தனர் போலீஸார். ' சுவாதி வழக்கின் உண்மைகளை போலீஸார் மறைப்பதாக' சிலர் புகார் கூறிவரும் வேளையில், நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்துப் பேசினார் வழக்கறிஞர்.ராமராஜ்.

அவர் நம்மிடம் பேசும்போது, " சுவாதி படுகொலை வழக்கில் போலீஸார் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொரு விஷயங்களாக வெளிவருகிறது. அவரை போலீஸார் அதிகாலையில் கைது செய்யவில்லை. முதல்நாளே  கைது செய்துவிட்டனர். வெளியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு அவருடைய கழுத்தை அரை வட்ட வடிவில் அறுத்துள்ளனர். தாடைப் பகுதியில் அறுத்தால், சரியாக பேச முடியாது என்பதால் அவ்வாறு செய்துள்ளனர். பிறகு, ரத்தம் வடிய மயங்கிய நிலையில் ஊருக்குள் அழைத்து வந்துள்ளனர்.

அந்தப் பகுதியில் மின்தடையை ஏற்படுத்திவிட்டு, ராம்குமார் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். வெளியில் எழுந்து வந்த அவரது தந்தை பரமசிவத்திடம், ' இது உன் பையனா கழுத்தை அறுத்துக்கிட்டான்' எனக் கூறியுள்ளனர். அங்கு வைத்து ராம்குமாரைக் கொல்லாமல் விட்டதற்குக் காரணம், மீனாட்சிபுரம் கிராம மக்களின் ஒற்றுமைதான். ஊருக்குள் வைத்துக் கொன்றுவிட்டால், மக்கள் எளிதில் நம்மை விட்டுவிட மாட்டார்கள் என உள்ளூர் காவலர்கள் கூறியதால், அமைதியாக இருந்துவிட்டனர்.

மீடியாக்களிடம், ' சுவாதி வழக்கில் கைது செய்து விடுவார்களோ எனப் பயந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தான்' எனப் பரப்பிவிட்டனர். குறிப்பாக, குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பிட்டு ராம்குமாரை உளவியல்ரீதியான மன உளைச்சலுக்கு  ஆளாக்கியிருக்கிறார்கள். புழல் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போதோ அல்லது திரும்பி வரும்போதோ வழியில், ஏதாவது செய்து விடுவார்கள் என மிகுந்த பயத்தில் அவர் இருக்கிறார். அவருக்கு எது நடந்தாலும் போலீஸார்தான் முழுப் பொறுப்பு. நெல்லையில் அவர் கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலம், அவருடையது அல்ல. இந்த வழக்கின் முக்கியமான உண்மைகள் விரைவில் வெளிவரும்!" என்றார் குமுறலோடு.

சுவாதி வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம், " நாங்கள் கைது செய்யச் சென்றபோது பயந்து போய், அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தது உண்மை. வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், இவ்வாறு சொல்வது காலம்காலமாக நடந்து வருகிறது. இதற்கு மேலும், அவர்களின் புகார் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை" என்றார்.

இதனிடையே நெல்லை சரக காவல்துறை டிஐஜி தினகரனிடம் இது குறித்து நாம் பேசியபோது, "  சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதேப்போன்று ராம்குமாரை கைது செய்ய முயன்றபோது அவரேதான் தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. இன்னும் சில நாட்கள் போனால், ராம்குமாருக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையமே தெரியாது என்றும் சிலர் சொல்வார்கள்" எனக் கூறினார்.

-ஆ.விஜயானந்த்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ