Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீதிக்கு வந்த பணத் தகராறு... போலீசுக்கு சென்ற சசிபெருமாள் மனைவி!



துவிலக்கு போராளி சசிபெருமாளை தமிழகத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் கடந்த 2015 ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கிராமத்தில் உள்ள மது கடையை மூடக் கோரி, செல்போன் டவர் உச்சியில் ஏறி போராட்டம் செய்து  கொண்டிருக்கும்போது மரடைப்பால் மரணமடைந்தார்.

சசிபெருமாளின் குடும்பத்தினரும் அரசியல் கட்சியினரும் உடலை வாங்க மறுத்ததை அடுத்து தமிழகம் முழுவதும் மதுவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. சசிபெருமாளின் சொந்த ஊரான இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டுக்காட்டில் சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் உண்ணாவிரதம் இருந்தார். தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், இளம்பிள்ளை மோட்டுக்காட்டிற்கு வந்து சசிபெருமாள் குடும்பத்திற்கு  நிதியை வாரி  வழங்கினர். ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இறுதியாக ஆகஸ்ட் 7ம் தேதி, உடலை பெற்று அடக்கம் செய்தார்கள்.

அவரின் நினைவு தினம் இந்த மாதம் 31ம் தேதி வருவதற்குள், சசிபெருமாள் குடும்பத்திற்கு வந்த பணத்தை அவரின் மனைவிக்கு கொடுக்காமல் மூத்த மகன் விவேக் ஏமாற்றி வருவதாக சேலம் மாவட்ட எஸ்.பி.,க்கு சசிபெருமாளின் மனைவி மகிழம் புகார் கொடுத்துள்ளார்.

இதுபற்றி சசிபெருமாளின் மூத்த மகன் விவேக், ‘‘எங்க அப்பா சசிபெருமாளுக்கு முதல் மனைவி கோவிந்தம்மாள் (என்கின்ற) கலா. இவருக்கு விவேக் ஆகிய நானும், நவநீதன் என்ற என் தம்பியும் பிறந்தவர்கள். எங்க அப்பா ஒரு வேலைக்கு போய் சம்பாதித்து குடும்பம் நடத்தாமல் காந்தியவழியில் தமிழகம் முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என கிளம்பி விடுவார். வீட்டுக்கு பத்து பைசா கூட தரமாட்டார். எங்க அம்மாவும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் எங்க அப்பாக கேட்கவில்லை. வீட்டிற்கு செலவுக்கும் பணம் கொடுக்கவில்லை.

எங்க அம்மா ஒருகட்டத்தில் எங்களையெல்லாம் விட்டுட்டு வேறு ஒருவரோடு போய் விட்டார். அதன் பிறகும் எங்க அப்பா திருந்தவில்லை. எங்களை எங்க பாட்டியிடம் விட்டு விட்டு போராட்டத்திற்கு கிளம்பிப் போய் விடுவார். நாங்க கூழும், கஞ்சியும் குடித்து வளர்ந்து, தறி போட்டு சம்பாதித்து, இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டு அவரவர் மாமனார் வீட்டுக்கு வந்து விட்டோம்.

அதன் பிறகு எங்க அப்பாவிற்கு சோறு ஆக்கி போடுவதற்கும், போராட்டத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதற்காகவும், நானும் என் தம்பியும் சேர்ந்து 11 வருடங்களுக்கு முன்பு மகிழம் என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தோம். ஆனால் முறைப்படி எங்க அம்மா கோவிந்தம்மாளிடம் விவகாரத்து வாங்காமலேயே, எங்க அப்பாவிற்கு இரண்டாவது திருமணத்தை செய்தோம். எங்களுக்கு பாத்தியப்பட்ட காட்டையும் அந்த அம்மாவையே ஓட்டிக்கொள்ள செய்தோம்.

எங்க அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகும் திருந்தவில்லை. அந்தம்மாவிற்கு கவியரசி என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் சாப்பாட்டுச் செலவு, படிப்புச் செலவுக்கும் எங்க அப்பா ஐந்து பைசா கொடுத்ததில்லை. மாறாக ஊரை சுற்றி கடன்தான் வாங்கி வைத்திருக்கிறார். மேலும் சுதந்திரதேசம் என்ற தமிழ் வழி கல்வி நிறுவனத்தை தொடங்கி நஷ்டம் ஏற்பட்டதால், இழுத்து மூடி விட்டார். தமிழ்நாட்டில் மதுவிற்கு எதிராக எங்கு போராட்டம் நடந்தாலும் அங்கு சென்று விடுவார்.

அப்படிதான் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கிராமத்தில் உள்ள மதுக்கடை போராட்டத்திற்கு போனபோது செல்போன் டவர் மீது ஏறி உயிரிழந்தார். அதையடுத்து நாங்கள் தமிழகத்தில் பூரண மது விலக்கு வர வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தோம். அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் சாரா இயக்கங்கள் எங்க வீட்டிற்கு வந்து, எங்கள் போராட்டத்தை ஆதரித்ததோடு எங்களுக்கு குடும்ப நல நிதியாக பலரும் உதவிகள் செய்தார்கள்.

இறுதியாக எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த நிதி உதவி ரூ. 22 லட்சம். அதில் அந்த அம்மா பெயரில் 5 லட்சமும், எங்க அப்பாவிற்கு மணி மண்டபம் கட்டுவதற்காக 5 லட்சமும் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறோம். எங்க அப்பா நிலத்தின் மீது 5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதை வட்டியோடு 7 லட்சமாக அடைத்தேன். அது தவிர சுதந்திர தேசம் பள்ளி தொடங்கியதில் ஏற்பட்ட கடன் 7 லட்சம். அதை அடைத்தோம். மொத்தமாக 24 லட்சம் செலவாகி இருக்கிறது. ஆனால் வந்த நிதி 22 லட்சம் ரூபாய் மட்டும்தான். என்னுடைய சொந்த கை காசாக 2 லட்சம் போட்டிருக்கிறேன்.

நான் சொல்வதில் சிறிதும் பொய் கிடையாது. எங்கப்பாவிற்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. 1970 ல் இருந்து டைரி எழுதி இருக்கிறார். அதை பார்த்தாலே தெரியும். யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கி இருக்கிறார் என்பதை விபரமாக எழுதி இருக்கிறார்.

இது அனைத்தும் அந்த அம்மாவிற்கு நன்றாக தெரியும். தெரிந்தும் எங்களை நம்பாமல் எங்க அப்பா பெயரையும், எங்க குடும்ப கௌரவத்தையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்தம்மா படிக்கவில்லை, யாரை நம்ப வேண்டும். யாரை நம்பக் கூடாது என்று அவருக்கு தெரியவில்லை. அதனால் அந்தம்மாவிடம் இருக்கும் பணத்தை பறிப்பதற்காக இந்துவாக இருந்து  மதம் மாறிய அப்துல் வாகித் என்பவரும், கஞ்சமலை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த பியூஸ் என்பவரும் அந்தம்மாவை தூண்டி விட்டுட்டு இருக்கிறார்கள்.

மேற்கூறிய கணக்கு விவரங்களை சேலம் எஸ்.பி., அசோக்குமார் சிங்கிடம் காட்டிய பிறகு கேஸை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள்’’ என்றார்.


சசிபெருமாளின் இரண்டாவது மனைவி மகிழம், ‘‘சாமி... எனக்கு எழுதப் படிக்க தெரியாது. பக்கத்தில் இருக்கும் இளம்பிள்ளைக்கு கூட யாராவது கூட்டிட்டு போனால்தான் போவேன். தனியாக போயிட்டு வர தெரியாது. ஒரு கடை கன்னிக்கு போய் காசு கொடுத்து வாங்க தெரியாது. எங்க வீட்டுக்காரர் இறந்ததும் நிறைய பேர் என்னிடம் பணம் கொடுத்தாங்க. எனக்கு கணக்கு வழக்கு எதுவும் தெரியாது என்பதால், எல்லா பணத்தையும் எங்க வீட்டுக்காரரின் முதல் தாரத்து மூத்த பையன் விவேக்கிடமே கொடுத்துட்டேன்.
அவரு அந்த பணத்தை என்ன பண்ணினார், ஏது பண்ணினாருன்னு தெரியாது. என்னையும் என் 11 வயது குழந்தை கவியரசியையும் 4 பேரு கூட்டிட்டு போய் 5 லட்சம் ரூபாய் பணத்தை என் மகள் பேருல போட்டுட்டாங்க. அதற்கு பாதுகாப்புன்னு என் பெயரை போட்டாங்க. அந்த பணத்தை என் மகள் கவியரசி 16 வயசு ஆனால்தான் எடுக்க முடியுமாம்.

அவர் உயிரோடு இருக்கும்போதும் எனக்கு ஒரு காசும் கொடுத்ததில்லை. அவங்க பூர்வீக சொத்து 1 ஏக்கர் மேட்டு காட்டில்சோளம் போட்டு, மாடு மேய்த்து, பால் ஊற்றி அதில் கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் வாழ்ந்துட்டு இருந்தேன். அவரும் பத்து பைசா யாரிடமும் கடன் வாங்கியதில்லை. மின்சாரம் இல்லாத இந்த ஓட்டை வீட்டில்தான் வாழ்ந்துட்டு இருந்தோம். பணம் காசு பெருசு இல்லை. குணம்தான் பெரியது என்று எனக்கு நன்றாக தெரியும்.

 

நான் இது நாள் வரை ஒரு பைசா கூட அவரிடம் கேட்டதில்லை. எங்க வீட்டுக்கார் இறந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. அவுங்க பசங்க ஒருத்தர் கூட எட்டி பார்ப்பதில்லை. என் குழந்தையிடம் கூட பேசுவதில்லை. பெரியவர் பாட்டுக்கு எப்பவாவது வருவார். வீட்டில் உள்ள பீரோவை திறந்து பொருட்களை எடுத்துட்டு பீரோவை பூட்டிட்டு போய் விடுவார். என்னிடம் எப்படி இருக்கீங்கன்னு கூட கேட்டதில்லை. வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் எடுத்துட்டுப் போயிடறாங்க. எங்க வீட்டுக்காரர் பெயரில் இருந்த சிலிண்டரைக் கூட கொடுக்காமல் எடுத்துட்டுப் போயிட்டாங்க. இதைக் கேட்டா,  ' நீ இந்த வீட்டை விட்டு போ... எங்க அம்மாவை இந்த வீட்டிற்கு கூட்டிட்டு வரப் போகிறோம்' என்று சொல்றாங்க.

தினமும் சாப்பாட்டிற்கு கூட காசு இல்லாமல் நான் கஷ்டப்பட்டுட்டு இருக்கிறேன். என் கணவரோடு போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த அப்துல் வாகித்தின் அத்தை வீடு, எங்க வீட்டுப் பக்கத்தில் தான் இருக்கு. அவுங்க அத்தையை பார்க்க வரும் போது என்னிடம் அம்மா எப்படி இருக்கீங்கன்னு கேட்டார். அதன்பிறகுதான் ‘சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் இருக்கிறேன்’ என்று சொன்னேன். 'சரி, அவர் இறந்த போது உங்களிடம் பணம் கொடுத்தாங்களே... அதெல்லாம் எங்கே?' என்று கேட்டப்போதுதான் நடந்ததை சொல்லி, 'எங்க வீட்டிற்கு பக்கத்தில் ஒரு கவர்மெண்ட் ஸ்கூல் இருக்கு. அதில் ஆயம்மா வேலை காலியாக இருக்கு. அந்த வேலை வாங்கிக் கொடுத்தால் போதும். எனக்கு பணம் காசு வேண்டாம். 'என்று சொன்னேன். 

அவர் சரி வாங்க. சேலத்தில் பியூஸை பார்த்து சொல்லி, போலீஸிடம் போய் சொல்லலாம் என்று அழைத்து கொண்டு போனார். என் கணவரின் பெயருக்கோ, அவரின் குடும்பத்திற்கோ அவப்பெயர் வாங்கும் விதமாக நான் எப்போதும் நடந்து கொள்ள மாட்டேன்’’ என்றார்.

இதுப்பற்றி பியூஸ் மானஸிடம் கேட்டப்போது, ‘‘எதேச்சையாக ஒரு நாள் அந்த அம்மாவும், அப்துல் வாகித்தும் எங்க வீட்டிற்கு வந்து விஷயத்தை சொன்னார்கள். சசிபெருமாள் ஐயாவின் இரண்டாவது மனைவி என்ற காரணத்தால் முதல் தாரத்தின் பசங்க ஏமாற்றுவது நன்றாக தெரிந்தது. அதையடுத்து தான் காவல்துறைக்கு கூட்டிக் கொண்டு சென்றோம்.

சசிபெருமாள் அய்யா இறந்த பிறகு அரசியல் வாதிகள், வெகு ஜன அமைப்புகள், பொதுமக்கள் என 35 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் விவேக் ,முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கொடுத்த பணத்திற்கு மட்டும்தான் கணக்கு காட்டுகிறார். அதிலும் அவங்க அப்பா டைரியில் 1 லட்சம் மட்டும்தான் கடன் இருப்பதாக எழுதி இருக்கிறார். அதையும் மகிழத்தை கேட்டுதான் கொடுக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறார்.

ஆனால் நேர்மையானவர்கள் என்றால் இந்த அம்மா மகிழத்திடம் கேட்டு கடனை அடைத்திருக்க வேண்டும். ஆனால் விவேக் என்பவரே கடன் அடைத்ததாக சொல்லுகிறார். மகிழம் ரொம்ப அப்பாவியான அம்மா. பாவம் கணக்கு வழக்கு தெரியாததால் இவர்கள் ஏமாற்றுகிறார்கள். இதையெல்லாம் நாங்கள் கேட்கக் கூடாது என்று சொல்லுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நாங்களும் சசிபெருமாள் அய்யா மாதிரி சமூகத்திற்காக 20 ஆண்டுகளுக்கு மேல் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர் குடும்பத்தில் ஓரு பிரச்னை என்றால் அதை எப்படி கேட்காமல் இருக்க முடியும். என் மீது ஒரு குற்றத்தை அந்த விவேக்கால் நிரூபிக்க முடியுமா?

இந்த விஷயத்தை நாங்கள் சும்மா விட மாட்டோம். சசிபெருமாள் ஐயா இறந்த பிறகு எவ்வளவு பணம் வந்தது என்று ஆதாரத்தோடு திரட்டி, முறையாக அந்த குடும்பம் பங்கிட்டு கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்’’ என்றார்.

பொதுநலனுக்காக போராடி உயிரைவிட்டவரின் குடும்ப கவுரவம் காக்கப்பட வேண்டும்!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்.

 

எடிட்டர் சாய்ஸ்