Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மவுலிவாக்கம்...மற்றொரு 11 மாடி கட்டடம் ஆகஸ்ட் மாதம் வெடிவைத்து தகர்க்கப்படும்! -அதிகாரிகள் தகவல்

சென்னை: 61 பேரை பலி கொண்ட மவுலிவாக்கம் விபத்தில், மற்றொரு 11 மாடி கட்டடம் ஆகஸ்டில் வெடிவைத்து தகர்க்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த 11 மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி பெய்த மழையில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகில் கட்டப்பட்டு வந்த மற்றொரு 11 மாடி கட்டடத்தையும் இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, அதே நிறுவனம் சார்பில் இடிந்த கட்டடம் அருகே கட்டப்பட்டு வந்த இரண்டாவது கட்டடத்தை இடிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து, அந்த நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் எம்.பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அந்த கட்டடத்தை இடிக்க கடந்த மே 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, அந்த கட்டடத்தை பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்த்து, இடித்து அப்புறப்படுத்தும் பணியை திருப்பூரை சேர்ந்த ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்தது. அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழிர்கள் 10 பேர் கடந்த 28-ம் தேதி முதல் 11 மாடி கட்டடத்தில் உள்ள இரும்புகள், செங்கல், கம்பி, சிமெண்ட், மர சாமான்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் அனைத்தையும் வெளியேற்றி வருகின்றனர்.

கட்டடத்தின் மொத்த எடையை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துவிட்டு, வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு ஒவ்வொரு மாடியிலும் வெடிகுண்டு வைத்து தகர்ப்பார்கள். இதற்கான பணி அடுத்த மாதம் தொடங்கப்படும். அதுவரையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், அடுக்குமாடியின் அருகில் வசித்தவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர். 11 மாடி கட்டடத்தை இடிக்கும் ஊழியர்கள் இந்த கட்டடத்தின் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்படும் என்று கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ