Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது! - தமிழகத்துக்கு 562 மெகாவாட் கிடைக்கும்

நெல்லை: கூடங்குளத்தி அமைக்கப்பட்டுள்ள 2-வது அணுஉலையில் நேற்று இரவு முதல் மின்சார உற்பத்தி தொடங்கி உள்ளது. முழு மின் உற்பத்தியை எட்டுபொழுது, தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணுஉலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் அணு உலை அமைக்கப்பட்டு, அதில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது முதல் அணு உலையில் முழு அளவான ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், 2வது அணு உலை பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஓர் ஆண்டாக பல்வேறுகட்ட ஆய்வுப்பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். முதலில் மாதிரி எரிபொருளை நிரப்பி சோதனை செய்தனர். அதைத்தொடர்ந்து ‘ஹைட்ராலிக்’ எனப்படும் வெப்ப அழுத்த பரிசோதனையும், வெப்பநீர் சோதனையும் நடத்தப்பட்டன. இந்த சோதனை ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் 2-வது அணு உலையில் யுரேனியம் எரி பொருளை நிரப்ப அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.

அதன்பிறகு அடுத்தகட்ட ஆய்வுப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இதனால், 2-வது அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான அனுமதியை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மாதம் 27-ம் தேதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, 2-வது அணுஉலையில் கடந்த 8-ம் தேதி இரவு 7.52 மணிக்கு ‘கிரிட்டிக் காலிட்டி’ எனப்படும் அணு பிளவுக்கான ஆயத்த சோதனை தொடங்கியது. இந்த பணியை இந்தியா-ரஷ்ய விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்டனர்.

அணு பிளவு மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றல் உள்ளிட்டவற்றை கண்காணித்து வந்தார்கள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சோதனை நேற்று இரவு 8 மணி வரை 48 மணி நேரம் நடந்தது. இந்திய அணுசக்தி கழக தலைவர் எஸ்.கே.சர்மா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று இங்கு முகாமிட்டு இந்த பணியை தீவிரமாக கண்காணித்து வந்தார்கள். நேற்று இரவு 8.56 மணிக்கு அணு பிளவு சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அணு பிளவினால் வெப்பம் உருவாக்கப்பட்டு நீராவி மூலம் 2-வது அணு உலை இயங்க தொடங்கியது. இதன்மூலம் அந்த அணுஉலையில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டது.

இதில் மகிழ்ச்சி அடைந்த, இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்திய அணுசக்தி கழக தலைவர் சர்மாவும் தனது மகிழ்ச்சியை விஞ்ஞானிகளுடன் பகிர்ந்துகொண்டார். மேலும், மின் உற்பத்தி பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த அணுமின் கழகத் தலைவர் சர்மா, 3 மற்றும் 4 அணு உலைகளுக்கான கட்டுமானப்பணி அடுத்த நிதியாண்டில் தொடங்கும் என்றார்.

2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது என்றாலும், முதலில் மிகவும் குறைவான மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக மின் உற்பத்தியை அதிகரிக்க விஞ்ஞானிகள் குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், அதைத்தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி படிப்படியாக மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அணுமின் நிலைய நிர்வாகம் அறிவித்து உள்ளது.

முதல் உலையில் இதுவரை 1,006 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் 2வது அணு உலை அடுத்த 6 மாதத்தில் முழுத்திறன் மின் உற்பத்தியை எட்டும். 1,000 மெகாவாட் திறனை எட்டும்பொழுது ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று கூடங்குளம் வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close