Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது! - ராம்குமார் வழக்கறிஞர்

நெல்லை: சுவாதி படுகொலை வழக்கில், ராம்குமார் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது என்று ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம் தேதி காலை மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (22) என்பவரை ஜூலை 1-ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், ராம்குமாருக்கு நீதிமன்றம் மூலம் விரைந்து தண்டனை பெற்றுத் தருவதற்காக தடயங்களையும், ஆதாரங்களையும் போலீசார் தீவிரமாக திரட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கொலை வழக்குகளில் குற்றவாளியை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் அடையாள அணிவகுப்பை போலீசார் புழல் சிறையில் இன்று நடத்த உள்ளனர்.

இந்நிலையில் ராம்குமாரின் சார்பில் முற்போக்கு வழக்கறிஞர் அமைப்பில் உள்ள ராம்ராஜ் என்ற வழக்கறிஞர் ஆஜராக முடிவு செய்துள்ளார். இவர் நேற்று செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''சுவாதி கொலை வழக்கில் அப்பாவியான ராம்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த கொலை வழக்கில் சம்பந்தம் இல்லை என உறுதியாக கூற முடியும்.

இச்சம்பவத்தில் சட்டமீறல் நடந்துள்ளது. காவல்துறை, நீதித்துறையால் ஜனநாயகம் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் இருட்டில் நடக்கும் திருட்டு சம்பவத்தில் கொள்ளையர்களின் உருவங்கள் தெரியாது. எனவே அதுபோன்ற வழக்குகளில் கைதானவர்களை சிறையில் வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

மேலும் இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளின் படங்களும் ஊடகங்களில் வெளிவராது. ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சுவாதி கொலை சம்பவத்தில் ராம்குமார் தான் குற்றவாளி என போலீசார் முடிவு செய்து அவரது படத்தையும் வெளியிட்டார்கள்.

ராம்குமாரை பிடித்த போலீசாரையும் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள். பின்னர் ஏன் இந்த வழக்கில் தற்போது அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது? ராம்குமாரை அடையாளம் பார்ப்பவர்கள் போலீசாரின் நிர்பந்தத்தை மீறி அவர்களால் என்ன சொல்ல முடியும். காவல்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் மோசமான செயல்.

'இந்த அடையாள அணிவகுப்பு குற்றவியல் சட்டத்துக்கு புறம்பானது. ராம்குமார் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது. மேலும், பெயர் தெரியாமல் இருந்தால் மட்டுமே அடையாள அணிவகுப்பு நடத்துவது சரியாகும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ