Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளாட்சி தேர்தலுக்குள் செல்போன், ஸ்கூட்டர்! -மலைக்க வைக்கும் 'மெகா பிளான்'

ள்ளாட்சித் தேர்தலுக்குள், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான சிலவற்றை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருக்கிறது தமிழக அரசு. இது தொடர்பாக 'முதலமைச்சரின் செயலாளர்கள் காட்டுகிற கெடுபிடியால், அமைச்சர்கள் ரொம்பவே திணறி வருகின்றனர்' என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும்போதெல்லாம், அடுத்து வருகின்ற அரசுக்கு பெருத்த சுமையாக இருப்பது அரசின் நிதி நிலவரம்தான். இதற்கு முந்தைய காலங்களில், கஜானாவைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள் என முந்தைய ஆட்சியின் மீது குற்றம் சாட்டுவது வழக்கமாக இருந்தது. இந்தமுறை, அ.தி.மு.கவே மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டதால், பெருகிவிட்ட கடன் சுமையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்த இலவச செல்போன், பொது இடங்களில் இலவச வைஃபை, 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டி, தாலிக்கு தங்கம், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசின் நிதி நிலைமை இடம் கொடுக்கவில்லை.

மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, துறைகளில் ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்ட தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர் அதிகாரிகள். கடந்த வாரம் முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களுக்கும் கண்டிப்பான குரலில் அறிவுறுத்தினார் முதல்வர். ' அரசுக்கு வர வேண்டிய வருவாயில், எந்தக் குளறுபடிகளும் நேராமல் சரியாகச் செயல்பட்டால் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியும். அதற்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்துங்கள்' என அப்போது உத்தரவிட்டார்.

இதையடுத்து, முதல்வரின் சிறப்புச் செயலாளரான சாந்தஷீலா நாயர், அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். ' வருவாயைப் பெருக்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாதம்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். ஒவ்வொரு துறையிலும் அக்கறையோடு வேலை பாருங்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், " அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை களையெடுத்தால் போதுமான நிதி சேர்ந்துவிடும் என உறுதியாக நம்புகிறார் முதல்வர். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியை சிறப்பாகக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே சாத்தியம். இல்லாவிட்டால், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துவிட நேரிடும் என முதல்வர் எண்ணுகிறார்.

அரசுக்கு வரி இழப்பை ஏற்படுத்துவதில் மிக முக்கியமான துறையாக பத்திரப்பதிவு, வணிக வரித்துறை, கனிம வளத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(சி.எம்.டி.ஏ) ஆகியவை உள்ளன. இந்தத் துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிதி இழப்பை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்பதால், முதல்வரின் செயலாளர்கள் தீவிர கவனம் செலுத்துகின்றனர். இதைப் பற்றி துறையின் அமைச்சர்களுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் துறை ரீதியான செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு துறையின் செயல்பாட்டுக்கும் மாதம்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, மதிப்பெண் வழங்குவது என துறையின் செயலர்கள் முடிவெடுத்துள்ளனர். இதில், நிர்வாகத்தில் அக்கறை காட்டாத அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதிச் சுமையைக் குறைப்பது, இலவசத் திட்டங்களில் கவனம் செலுத்துவது போன்றவைதான் தலைமைச் செயலக அதிகாரிகளின் முக்கிய டார்கெட்டாக உள்ளது" என்றார் விரிவாக.

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பெண்களைக் கவரும் திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர். ' வளர்ச்சிப் பணிகளுக்கான இலக்கு ரூ.1 லட்சம் கோடி என அமைச்சர்களுக்கு இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறார் முதல்வர். இதனை சாத்தியப்படுத்தினாலே, ஸ்கூட்டியும் செல்போனும் ஒவ்வொரு வீடுகளில் வலம் வர ஆரம்பித்துவிடும்' என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.

-ஆ.விஜயானந்த் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close